ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவின் இந்திய விஜயமும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் அவா் நடத்திய பேச்சுக்களும் ஊடகங்களில் அதிக அளவுக்கு முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு காரணங்கள் இருந்தன.
முதலாவது, அவா் இந்திய எதிர்ப்பை தமது பிரதான கொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருந்த கட்சி ஒன்றின் தலைவர் என்பது. அந்தக் கொள்கையுடன் தான் அவர்கள் நீண்டகாலம் பயணித்திருந்தாா்கள். அதன் மூலமாகத்தான் கட்சியையும் வலுப்படுத்தினாா்கள்.
இரண்டாவது, அவரது ஜே.வி.பி. ஒரு சீன சார்பு அமைப்பாக அடையாளம் காணப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றி குறித்த கொழும்பிலுள்ள சீனத் துாதுவின் பிரதிபலிப்புக்களும் இந்தக் கருத்துக்கு வலுச் சேர்த்திருந்தது.
இலங்கையை மையப்படுத்திய சீன – இந்திய வல்லரசுப் போட்டி தீவிரம் அடைந்திருக்கும் பின்னணியில் மிகவும் நிதானமாக செயற்படும் இராஜதந்திரத்தை புதுடில்லி விஜயத்தின் போது ஜனாதிபதி திசநாயக்க வெளிப்படுத்தினார்.
தெற்காசிய பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்தை ஏற்றுக்கொண்டவராகவே திசாநாயக்கவின் அணுகுமுறை காணப்பட்டது.
அதாவது, கடந்த கால ஜே.வி.பி.யின் வரலாறு எவ்வாறிருந்தாலும், இந்தியா குறித்த கடும் போக்கை ஜனாதிபதி மாற்றிக்கொண்டிருக்கின்றாா் என்பது இந்த விஜயத்தின் போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.
பிராந்திய ரீதியான பூகோள அரசியலை அனுசரித்துச் செல்ல வேண்டிய தேவை இருப்பதை உணா்ந்துகொண்டவராகவே ஜனாதிபதியின் தற்போதைய அணுகுமுறை உள்ளது.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னா் திசாநாயக்க மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்த இந்திய விஜயம் அமைந்திருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதில் அது முக்கிய பங்கு வகித்தது.
இந்த விஜயத்தின் போது பேசப்பட்ட விடயங்கள், இறுதியாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கை என்பனவற்றைப் பொறுத்தவரை, இலங்கை, இந்திய மற்றும் தமிழ் தரப்புக்கள் அதில் தமக்கு சாதகமான அம்சங்கள் என்ன உள்ளன என்பதிலேயே கவனத்தச் செலுத்தியிருந்தாா்கள்.
இந்த விஜயத்தின் போது பின்வரும் ஐந்து அம்சங்கள் முக்கியத்துவம் பெற்றிருப்பதை அவதானிக்க முடிகின்றது.
முதலாவது, இலங்கையின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் முயற்சிகளுக்கு இந்தியா வழங்கிய உதவிக்கு ஜனாதிபதி திசநாயக்க நன்றி தெரிவித்தார். இரு நாடுகளும் வர்த்தகம், ஆற்றல், மற்றும் கட்டமைப்பு போன்ற துறைகளில் எதிா்காலத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தின.
இரண்டாவது, இந்தியாவின் பாதுகாப்பை பாதிக்கும் வகையில் இலங்கை நிலம் பயன்படுத்தப்படாது என்று ஜனாதிபதி திசாநாயக்க உறுதியளித்தார்.
மூன்றாவது, இலங்கை, பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் உறுப்பினராக சேர்வதற்கான விருப்பத்தைத் தெரிவித்துள்ளது. இந்தியாவின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்தியா அதற்கு சாதகமாக பதிலளித்தது.
நான்காவது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசு தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று நம்புவதாக தெரிவித்தார். இலங்கையின் அரசியலமைப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதையும் வலியுறுத்தினா். அதேபோல் மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதும் மோடியின் கருத்தாக வெளிப்பட்டது.
ஐந்தாவதாக, இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் இணக்கம் காணப்பட்டது.
இலங்கையின் நிலப்பகுதி இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி திசநாயக்க வழங்கியுள்ள உறுதி மொழி புதுடில்லி எதிா்பாா்த்த முக்கியமான விடயம்.
இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலுடன் மூன்று மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போதும் திசநாயக்க இந்த வாக்குறுதியை வழங்கியிருந்தார்.
ஜனாதிபதித் தேர்தலை எதிர் கொண்டிருந்த நிலையில் அதனைத் தெரிவித்திருந்த அவா், தற்போது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள பின்னணியில், இந்தியப் பிரதமரிடமே அதனைத் தெரிவித்திருக்கின்றார்.
இவ்வாறான வாக்குறுதி ஒன்றை இந்தியா எதிா்பாா்த்தமைக்கு காரணம் இருந்தது. சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் அடிக்கடி இலங்கை கடற்பகுதிக்குள் வந்து செல்வதும், கடலாய்வுகள் என்ற பெயரில் சீனத் தரப்பினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளும் புதுடில்லிக்கு எப்போதும் நெருடலைக் கொடுத்துக்கொண்டிருந்தது.
இந்தியாவின் கவலைகளையடுத்து வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களுக்கு ரணில் விக்கிரமசிங்க ஒரு வருட காலத்துக்கு தடை விதித்திருந்தாா். அந்தத் தடை இம்மாதத்துடன் முடிவுக்கு வருகின்றது.
திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தத் தடையை தொடருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டிருக்கும் நிலையில்தான், பொதுவான முறையில், “இலங்கையின் நிலப்பகுதி இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது” என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருக்கிறார்.
இலங்கையின் முக்கிய துறைமுகங்களான கொழும்பு, அம்பாந்தோட்டை ஆகியவற்றில் சீனாவின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கின்றது.
இதனால், சீனாவின் செல்வாக்கை முற்றிலுமாக ஒதுக்க முடியாது என்ற கருத்தும் உள்ளது. “சீனாவின் கப்பல்கள் வந்து செல்லலாம். ஆனால், அவை இந்தியாவின் பாதுகாப்புக்கு எவ்வகையிலும் குந்தகமாக அமையாது” என்றவாறான ஒரு நிலைப்பாட்டை திசநாயக்க அரசாங்கம் எடுக்கலாம்.
இலங்கை, கடல்சார் சட்டங்களை (UNCLOS) பின்பற்றும் நாடாக இருந்தால், சீன கப்பல்களுக்கு முழுமையான தடைகளை விதிக்க முடியாத நிலையும் உள்ளது.
அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்குக்கு மத்தியில், சிக்கலான புவிசார் அரசியல் பரப்பில் கயிற்றில் நடப்பது போல மிகவும் நிதானமாக காய்களை நகர்த்த வேண்டியவராக ஜனாதிபதி திசாநாயக்க இருக்கின்றார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் உருவாகிய பொருளாதார நெருக்கடியின் சில விளைவுகளை இன்று காண முடியாவிட்டாலும், நெருக்கடி தீர்க்கப்படவில்லை. குறுகிய கால நீண்ட கால திட்டங்களின் அடிப்படையில் இதற்கான உபாயங்கள் வகுக்கப்பட வேண்டும்.
இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இரு நாடுகளின் உதவிகளும் அவசியம் என்பதை உணா்ந்துகொண்டவராகத்தான் ஜனாதிபதி திசநாயக்க காய்களை நகா்த்துகிறாா். தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக புதுடில்லி சென்ற ஜனாதிபதி, அடுத்த மாதம் சீனாவுக்கு செல்லவிருக்கிறார்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், பொருளாதார மீட்சிக்கு இந்த இரண்டு நாடுகளையும் எவ்வாறு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதுதான் அவர்களுடைய பிரச்சினை. அந்த வகையில், ஜனாதிபதியின் புதுடில்லி விஜயம் வெற்றி அளித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். பொருளாதார ரீதியாக பயனுள்ள பல உடன்படிக்கைகள் பல எட்டப்பட்டுள்ளது.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மூன்று முக்கியமான விஷயங்கள் எதிா்பாா்க்கப்பட்டது. ஒன்று – இன நெருக்கடிக்கான அரசியல் தீர்வு. இரண்டு – மாகாண சபைகளுக்கான தேர்தல்களை விரைவாக நடத்துவது. மூன்றாவது – மீனவர் பிரச்சினைக்கு தீர்வு.
புதுடில்லி பயணமாக முன்னா் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவை ஜனாதிபதி அவசரமாகச் சந்தித்தது, வெறுமனே சிவஞானம் சிறிதரன் கேட்டுக்கொண்டமையால் என்று மட்டும் சொல்லிவிட முடியாது.
சில செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்பதை இந்தியப் பிரதமருடனான சந்திப்புக்கு முன்னதாகக் காட்டுவதற்கும் ஜனாதிபதி விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியினரிடம் சொன்ன விடயங்களை இந்தியப் பிரதமரிடமும் ஜனாதிபதி கூறியிருக்கின்றாா்.
அதன் அடிப்படையில்தான், தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேறும்படி இலங்கை அரசியல் அமைப்பு முழுமையாக செயல்படுத்தப்படும் என்று தன்னுடைய எதிர்பார்ப்பை இந்தியப் பிரதமா் மோடி தெரிவித்தார்.
13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக குறிப்பிடாமல், அதனை அமுல்படுத்தலுக்கான ஆதரவான கருத்துகளைதான் பொதுவாக தெரிவித்தார்.
13 ஆவது திருத்தம் மட்டுமன்றி 16 ஆவது திருத்தமும் இலங்கை – இந்திய உடன்படிக்கையின் பின்னணியில் வந்ததுதான். அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்துவது என்பது அவற்றை உள்ளடக்கியதுதான்.
இலங்கை அரசியல் சூழல் மற்றும் தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து பேச்சுவார்த்தை நடந்தபோதும், மோடி 13ஆம் திருத்தச்சட்டத்தை குறிப்பிட்டு பேசுவதை தவிா்த்மைக்கும் காரணம் இருக்கின்றது. இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை பாதிக்காமல் தீர்வு காணும் முயற்சியாகவே இது விளக்கப்படுகிறது. அதேவேளையில், 13 க்கு எதிராக ஜனாதிபதி திசாநாயக்கவின் கட்சி குரல் கொடுத்ததும் இதற்கு காரணமாக இருக்கலாம்.
13 ஆவது திருத்ததை தமிழ் மக்கள் நிரந்தரத் தீர்வாக ஏற்காமல் இருக்கலாம். ஆனால், தற்போதைய நிலையில், அதனையும் விட்டால், எதுவும் இல்லை என்பது தான் யதார்த்தம். இந்த டில்லியில் கூட்டறிக்கையில் சொல்லப்பட்ட விஷயங்கள் நடைமுறைப்படுத்தப்படுமா, என்பதுதான் தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்வி!
-ஆா்.பாரதி-