நடந்து செல்லும் தூரம்தான்… சுமார் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும்… ஆனால் 27 ஆண்டுகளாக, உடன்பிறந்த சகோதரியை நேரில் பார்க்க முடியாமல் வெறும் செல்போனில் மட்டுமே காண்கிறார், இஸ்ரேலைச் சேர்ந்த சுஹா சஃபாடி. காரணம் போர் மட்டுமே…

1973ஆம் ஆண்டு நடந்த அரபு-இஸ்ரேல் போரால் சிரியா மற்றும் இஸ்ரேல் எல்லையில் வசித்த பலர் தங்களது உறவுகளை இழந்தனர். அதன்பிறகு ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி இருநாடுகளுக்கும் இடையே கோலன் குன்று பகுதியில் ஒரு பாதுகாக்கப்பட்ட மண்டலம் அமைக்கப்பட்டது. இதில் சிக்கிக்கொண்ட ஒருவர்தான் இந்த சுஹா சஃபாடி.

இஸ்ரேலில் வசித்து வரும் சுஹா சஃபாடி, சிரியாவில் இருக்கும் தனது சகோதரியைப் பிரிந்து 27 ஆண்டுகள் ஆவதாக வேதனை தெரிவிக்கிறார்.

தினமும் சகோதரியுடன் செல்போனில் மட்டுமே பேசிவருவதாகவும், தனது குடும்பத்தை புகைப்படம் வாயிலாக மட்டுமே காணுவதாகவும் மனமுடைந்து பேசினார், சுஹா சஃபாடி.

சிரியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் படைகள் மவுண்ட் ஹெர்மன் தளத்தை கைப்பற்றியுள்ளன. விரைவில் எல்லைகள் திறக்கப்பட்டு, தனது சகோதரியை சந்திக்க இருப்பதாக நம்பிக்கையுடன் தெரிவிக்கும்

சுஹா சஃபாடியின் ஏக்கம், நிறைவேறுமா?

இருநாடுகள் ஒத்துழைப்பு வழங்குமா?

காலம்தான் முடிவு செய்யும்…

Share.
Leave A Reply