அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

டிரம்ப் பதவியேற்ற அன்றைய தினமே அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் டிரம்பின் ஜனாதிபதி மாற்றகுழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இது குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட சுகாதார சட்ட நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.

பதவியேற்ற அன்றே அல்லது அடுத்த சில நாட்களில் டிரம்ப் அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என நம்பகதன்மை மிக்கவர்கள் தெரிவித்துள்ளனர் என வோசிங்டனின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் லோரன்ஸ் கொஸ்டின் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை இரண்டு நிபுணர்களை மேற்கோள்காட்டி முதலில் பினான்சியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது.

ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பினை டிரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகின்ற நிலையிலேயே அமெரிக்காவை அந்த அமைப்பிலிருந்து விலக்கிக்கொள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் உலகளாவிய சுகாதார கொள்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் மேலும் தொற்றுநோய்களிற்கு எதிரான சர்வதேச சமூகத்தின் போராட்டத்திலிருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்தும்.

உலக சுகாதார ஸ்தாபனத்தை கடுமையாக விமர்சிப்பவர்களையே டிரம்ப் உயர் பதவிக்கு நியமித்துள்ளார்.

அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரொபேர்ட் கென்னடி தடுப்பூசிகள் குறித்து சந்தேகங்களை வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிரம்ப் தனது முன்னைய பதவிக்காலத்தின் போது 2020 அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொண்டிருந்தார்.

Share.
Leave A Reply