களு கங்கையில் பாத்திரம் கழுவச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் களுத்துறை, தொடங்கொட, கொஹொலான வடக்கு பகுதியில் வசிக்கும் 51 வயதுடைய மல்லிகா நிலந்தி மங்கலிகா என்ற திருமணமான பெண்ணே முதலை பிடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண் நேற்று (26) கொஹொலன பிரதேசத்தில் தனது வீட்டின் எல்லையில் உள்ள களு கங்கையில் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த போது முதலை ஒன்று பிடித்து இழுத்துச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்போது, ​​அப்பெண் கூக்குரலிட்டதையடுத்து அவரது கணவர் உள்ளிட்ட பலர் உடனடியாக ஆற்றிற்குள் விரைந்து சென்ற போதிலும், முதலை நீருக்கு அடியில் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பின்னர் களுத்துறை கடற்படை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களுடன் இணைந்து பொலிஸார், பிரதேசவாசிகள் படகொன்றில் தேடுதல் மேற்கொண்ட போது, குறித்த பெண்ணை முதலை வாயில் இருந்து விடுவித்துள்ளது.

ஆயினும் குறித்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டதாக, அவரை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தோர் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் பிரேத பரிசோதனை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது

களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Share.
Leave A Reply