சிரியாவில் இஸ்ரேலிய அரசால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் (Golan Heights) குன்றுகளுக்கு இடையே உள்ள இராணுவமற்ற பாதுகாப்பு வலயத்திற்கு (Buffer Zone) மீண்டும் தனது தரைப்படைகளை இஸ்ரேல் நகர்த்தி உள்ளது.

அத்துடன் சிரியாவில் உள்ள ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கைகளுக்கு செல்வதை தடுக்க, அங்கு தொடர் தாக்குதல்களையும் இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதில் சிரியாவின் ஆயுத கிடங்குகள் பலவும் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

வான் தாக்குதலை தீவிரப்படுத்தும் இஸ்ரேல் அரசு, சிரியாவில் உள்ள ஆயுதக் கிடங்குகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் ஆட்சி மாற்றத்தின் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மத்தியில் இத்தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது.

கிளர்ச்சிப் படைகள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், கிளர்ச்சியாளர்களின் கையில் இரசாயன ஆயுதங்கள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் சென்று சேர்வதை தடுக்கவே இஸ்ரேல் முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அல் கொய்தா போன்ற அமைப்புகளுடன் தொடர்புடைய கிளர்ச்சிப் படைகளின் வளர்ச்சியை தடுக்க இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர், சிரியா முழுவதும் உள்ள ஏவுகணைகள் அனைத்தையும் அழிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சிரியா முழுவதும் உள்ள இலக்குகள் மீது அதன் போர் விமானங்கள் நானூறுக்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு படை கூறியுள்ளது.

சிரிய அரசாங்கம் கிளர்ச்சியாளர்களால் அண்மையில் தூக்கியெறியப்பட்டதிலிருந்து இஸ்ரேலிய பாதுகாப்பு படை பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு (SOHR) கூறியது.

ஆயினும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட ஒரு அறிக்கையில், இஸ்ரேல் அரசை அச்சுறுத்தும் மூலோபாய திறன்களை அழிப்பதை இஸ்ரேலிய படையினரின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். சிரியாவின் கடற்படை, இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் தொடராகத் தாக்குதல்கள் நடத்தியுள்ளது.

ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து அந்நாட்டு இராணுவம் விட்டுச் சென்ற ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதாக இஸ்ரேல் கூறுகிறது.

லதாகியா மற்றும் எல் பெய்டா விரிகுடாவின் துறைமுகப் பகுதியில் இஸ்ரேலிய ஏவுகணைக் கப்பல்கள் அசாத்தின் படைகளுக்குச் சொந்தமான கடற்படைக் கப்பல்களை அழித்தன. அவை பல நூறு மைல்கள் வரை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இரசாயன ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைத்தால், அவற்றை இஸ்ரேலுக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்ற காரணத்தினால், அவை கிளர்ச்சியாளர்களின் கைகளில் கிடைப்பதை தடுக்கும் நோக்கில் இத்தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது இஸ்ரேல்.

சிரிய கடற்படையை அழிக்கும் நடவடிக்கை பெரும் வெற்றி பெற்றதாகவும் இஸ்ரேலிய அரசு அவர் தெரிவித்துள்ளது. சிரிய தலைநகர் டமாஸ்கஸ், ஹோம்ஸ், டார்டஸ் மற்றும் பால்மைராவில் உள்ள விமான நிலையங்கள், இராணுவ வாகனங்கள், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மற்றும் ஆயுத தயாரிப்பு தளங்கள் உட்பட பரந்த அளவிலான இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் இஸ்ரேலிபய பாதுகாப்பு படை குறிப்பிட்டுள்ளது.

தாக்குதல்கள் ஆயுதக் கிடங்குகள், வெடிமருந்துக் கிடங்குகள் மற்றும் கடல் ஏவுகணைகளையும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

இஸ்ரேல் திடீரென பயங்கர தாக்குதல் நடத்தியதால், சிரியாவை கைப்பற்றும் முயற்சியில் இஸ்ரேல் ஈடுபட்டுள்ளதாக தகவல் பரவியது.

இதை மறுத்த இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள், சிரியா எல்லையில் உள்ள இஸ்ரேலின் பகுதியை கைப்பற்றத்தான் இராணுவம் நுழைந்தது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி இஸ்ரேல் தாங்கிகள் செல்கின்றன என்ற செய்தி தவறானவை என்றனர்.

அத்துடன் தெற்கு சிரியாவை இராணுவ பலம் அற்றதாக மாற்ற இந்த தாக்குதல் அவசியம். அசாத் ஆட்சியை பின்பற்ற முயற்சிக்கும் எந்த ஒரு படைக்கும் இதே கதிதான் ஏற்படும். சிரியா எல்லையில் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்காக ஆயுத கிடங்குகளை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என இஸ்ரேல் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிரியா எல்லையில் ஆக்கிரமிப்பு பகுதிக்குள் இஸ்ரேல் நுழைந்ததற்கு எகிப்து, ஜோர்தான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சிரியாவின் நிலையற்ற தன்மையை, தனது எல்லையை விரிவுபடுத்தும் நோக்கத்துக்கு இஸ்ரேல் பயன்படுத்தி கொள்வதாக அந்நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.

சிரியாவின் ஒரு பகுதிக்குள் இஸ்ரேல் ஊடுருவியது 1974-ம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறுவதாக உள்ளது என ஐ.நா சபை குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் கிரெம்ளின் அரசின் கூட்டாளியான ஜனாதிபதி பஷர் அல்-அசாத் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், ரஷ்யாவின் விமான மற்றும் கடற்படை தளங்கள் சிரியாவில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. சிரியாவில் ரஷ்யாவிற்கு இரண்டு இராணுவ தளங்கள் இருந்தன. மத்தியதரைக் கடலோரத்தில் உள்ள டார்டஸ் கடற்படை தளமும் இருந்தது.

அத்துடன் லதாகியா துறைமுக நகரத்திற்கு அருகில் க்மெய்மிம் விமான தளம் உள்ளது. அவை கிரெம்ளினின் மிகவும் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இராணுவப் புறக்காவல் நிலையங்களாகக் கருதப்பட்டன.

ரஷ்யாவிற்கு மத்தியதரைக் கடலுக்கான ஒரே நேரடி அணுகல் மற்றும் கடற்படை பயிற்சிகள், போர்க் கப்பல்கள் மற்றும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை நடத்துவதற்கான தளம் ஆகியவற்றை வழங்குகிறது. இதனால் டார்டஸ் தளம் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா

Share.
Leave A Reply