எச்சரிக்கை: இதில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம்

“அவர் ஒரு ஏமாற்றுக்காரர், என்னுடன் உடலுறவு கொண்ட பின்பு எனக்கு பணம் தர மறுத்துவிட்டார், மேலும் அவர் என்னைத் தாக்கினார். அதனால் தான் நான் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன்.”

11 பேரின் கொலை தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரின் வாக்குமூலம் இது.

இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ரூப்நகர் மூத்த காவல் கண்காணிப்பாளர் குல்நீத் சிங் குரானா, 11 பேரை கொலை செய்ததாக தன்பாலின ஈர்ப்பாளரான ராம் சரூப் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார். இவர் ஹோஷியார்பூர் மாவட்டம், சௌரா கிராமத்தைச் சேர்ந்தவர்.

இந்த செயலில் அவர் எவ்வாறு ஈடுப்பட்டார்?

“கைது செய்யப்பட்ட ராம் சரூப் சிங் சொதி, ஒரு தன்பாலின ஈர்ப்பு கொண்ட பாலியல் தொழிலாளி. இவர், சாலையில் வாகனங்களில் வருபவர்களிடம் ‘லிப்ட்’ கேட்பது போல கேட்டு அவர்களுடன் இணைந்து பயணிப்பார்.

பின்னர், அவர்களுடன் உடலுறவு கொள்வார். பிறகு பணம் குறித்து ஏதேனும் தகராறு ஏற்பட்டால் இவர் அவர்களை கொலை செய்து விடுவார்,” என்று கூறுகிறார் குல்நீத் சிங் குரானா.

“இதன் பிறகு இறந்தவர்களின் உடைமைகளை எடுத்துக்கொண்டு தப்பித்துச் சென்றிடுவார். அப்படி செல்லும்போது இறந்தவர்களின் உடல்களில் சில குறிப்புகளையும் எழுதி வைத்து விட்டுச் செல்வார்.”

வழக்கை விசாரித்து வரும் காவல்துறையினர்

காவல் துறை குற்றவாளியை நெருங்கியது எப்படி?

“கிரத்பூர் சாஹிப்பில் வசித்து வருபவர் பஜன் சிங். அவருடைய மகன் மனிந்தர் சிங்கின் உடல் மணாலி சாலையில் உள்ள ஜியோ பெட்ரோல் நிலையத்துக்கு அருகே புதரில் கிடைத்தது.

இந்த வழக்கை தொழில்நுட்ப ரீதியாக கையாண்ட காவல் துறையினர் இந்த குற்றத்தை செய்த ராம் சரூப்பை கண்டறிந்தனர். தீவிர விசாரணைக்குப் பின்னர் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது,” என்றார் குல்நீத் சிங் குரானா.

ராம் சரூப்பை கைது செய்து விசாரித்தபோது தான், இன்னும் பல கொலைக் குற்றங்களில் இருந்த மர்மங்கள் அவிழ்ந்தன என காவல்துறையினர் தெரிவித்தனர்.
அனைத்து குற்றங்களையும் ஒப்புக்கொண்டார்

இந்த சம்பவத்தைப் பற்றி விசாரித்தபோது தான், இவர் மேலும் பத்து பேரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதில் இரண்டு கொலைகள் ரூப்நகரில் நடந்துள்ளது.

இதேபோன்ற ஒரு வழக்கு கிரத்பூர் சாஹிப் காவல் நிலையத்தில் பதிவாகி இருந்தது. மேலும், ஜனவரி 24, 2024 அன்று ரூப்நகரில் உள்ள நிரின்காரி பவன் என்ற இடத்தில், கார் ஒன்றுக்கு அருகே இளைஞர் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் ரூப்நகரைச் சேர்ந்த ஹர்ப்ரீத் சிங் என்றழைக்கப்படும் சன்னி எனத் தெரியவந்துள்ளது.

இறந்தவரின் உடலில் இருந்த ஆடைகள் முதற்கொண்டு அனைத்தையும் அவர் எடுத்துச் சென்றதாக குல்நீத் சிங் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி, பாரா கிராமத்தில் உள்ள பஞ்சேரா சாலையில் உடலில் காயங்களுடன் முகந்தர் சிங் கிடந்தார். இவர் பேகம்புரா கிராமத்தைச் சேர்ந்தவர்.

முதல்கட்ட விசாரணையில் ஃபதேகர் சாஹிப் மாவட்டம் மற்றும் ஹோஷியார்பூர் மாவட்டம் ஆகிய இடங்களில் நடந்த குற்ற சம்பவங்களையும் தானே செய்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

நீதிமன்றத்தில் ராம் சரூப்பை ஆஜர்படுத்திய காவல் துறை அவரை நீதிமன்ற காவலில் எடுத்துள்ளது. இதன்மூலம் இன்னும் பல உண்மைகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காவல்துறையை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரது குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர்.

ராம் சரூப்பை கைது செய்து விசாரித்தபோது தான், இன்னும் பல கொலைக்குற்றங்களில் இருந்த மர்மங்கள் அவிழ்ந்தன

தாக்கிய பின் மன்னிப்பு கேட்பார்’

குற்றம்சாட்டப்பட்ட ராம் சரூப், காவல் துறையால் கைது செய்யப்பட்ட பின் ஊடகங்களிடம் பேசினார். அப்பொழுது அவர், “நான் யாரையும் வேண்டுமென்று கொலை செய்யவில்லை,” என்று தெரிவித்தார்.

ரூப்நகர் வழக்கைப் பொறுத்தவரை, “அவர் ஒரு ஏமாற்றுக்காரர். என்னைப் பார்த்தவுடன் அவர் என்னை அவருடைய காரில் அழைத்துச் சென்றார். அவருடன் நான் உடலுறவில் ஈடுப்பட்டேன். அதற்காக அவர் எனக்கு இருநூறு ரூபாய் கொடுக்க வேண்டும், ஆனால் அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். காரில் இருந்து என்னை வெளியே தள்ளிவிட்டார். எனது தலையில் குச்சியைக் கொண்டு தாக்கினர்,” என்றார் அவர்.

மேலும் பேசிய ராம் சரூப், “இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பின்னர், நான் அவர்களின் காலைத் தொட்டு மன்னிப்பு கேட்பேன். இந்த குற்றத்திற்காக நான் வருந்துகிறேன்,” என்றார்.

Share.
Leave A Reply