தனது தாத்தா, தந்தை மற்றும் மாமா தன்னை ஒரு வருடமாக பலமுறை பலாத்காரம் செய்ததாக 14 வயது கர்ப்பிணி சிறுமி வாக்குமூலம் அளித்ததன் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் அவுராயா மாவட்டத்தில் உள்ள பிதுனா கோட்வாலி பகுதியில் வசித்துவரும் சிறுமி தனது அத்தையுடன் கடந்த வியாழக்கிழமை அருகில் உள்ள காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

சுமார் 10 வருடங்கள் முன்னர் பெற்றோர்கள் இடையே ஏற்பட்ட பிரச்சனையில் சிறுமி தாயுடன் டெல்லிக்கு சென்றாள். ஆனால் 4 வருடங்கள் முன்பு அவளை டெல்லியில் இருந்து அவளது தந்தை மற்றும் மாமா மீண்டும் வீட்டுக்கே அழைத்து வந்தனர்.

சிறுமியின் தாய் கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். இதனிடையே, கடந்த ஒரு வருடமாக, தந்தை, மாமா மற்றும் தாத்தா தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என்று சிறுமி போலீசிடம் கூறினாள்.

தனது தாத்தா தன்னை வயலுக்கு அழைத்துச் சென்று தகாத முறையில் நடந்து கொள்வார் என்றும், தனது மாமா தனது அறைக்குள் வலுக்கட்டாயமாக நுழைவார் என்றும், தந்தை தன்னை கட்டி வைப்பார், எதிர்ப்பு தெரிவித்தால் கொன்றுவிடுவதாக மிரட்டுவார்கள் என்றும் சிறுமி போலீசிடம் கூறினாள்.

இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுமி கர்ப்பமாக இருந்தபோது, அதை அவள் அத்தைக்கு தெரிவித்தாள், ஆனால் அத்தை அப்போது சிறுமிக்கு உதவவில்லை.

இதனிடையே கடந்த டிசம்பர் 22 அன்று, தந்தை, மாமா மற்றும் தாத்தா தன்னை கொல்ல சதி செய்ததாகவும் அதனால் சிறுமி அத்தை வீட்டுக்கு தப்பிச் சென்று பின் காவல் நிலையத்துக்கு இருவரும் வந்துள்ளனர் என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

சிறுமியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் அன்றைய இரவே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டனர் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலோக் மிஸ்ரா தெரிவித்துள்ளார். சிறுமியின் தாயும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிய வந்துள்ளது.

Share.
Leave A Reply