இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க டிசம்பர் 15 – 17 இந்தியாவுக்கு தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்காண்டு நாடுதிரும்பினார்.

புதுடில்லிக்கான அவரின் மூன்று நாள்விஜயத்தின் காட்சிகள் நேர்மறையாக பாராட்டப்பட்டிருக்கின்றன. ஜனாதிபதி திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவினதும் (ஜே.வி.பி.) அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக இருக்கிறார்.

அவரின் வெற்றிகரமான இந்திய பயணம் ஜே.வி.பி.யின் கடந்த காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் இடையிலான ” பொருத்தமின்மை ” மீது கவனத்தைக் குவிக்க வைத்திருக்கிறது.

இந்தியா தொடர்பிலான ஜே.வி.பி.யின் கடந்தகால கடும் போக்கும் தற்போதைய மென்போக்கும் ஒப்பிடப்படுவதுடன் வேறுபடுத்தியும் காட்டப்படுகின்றன. ஜனாதிபதியின் வெற்றிகரமான விஜயம் இந்தியாவுடனான ஜே.வி.பி.யின் உறவு ஒரு ” மறுதலையான ” நேர்மறைத் திருப்பத்தை எடுத்திருக்கிறது என்பதை காட்டுகிறது.

ஜே.வி.பி. அதன் ஆரம்பத்தில் இருந்தே இந்திய எதிர்ப்புவாதத்தில் ஆழக்காலூன்றிய கட்சியாகும். எளிதான வார்த்தைகளில் கூறுவதானால் ஜே.வி.பி. இந்தியாவுக்கு எதிரான, சீனாவுக்கு ஆதரவான ஒரு அரசியல் இயக்கமாக கருதப்பட்டது. அது இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையை எதிர்த்ததுடன் 1987 தொடக்கம் 1989 வரை இந்திய எதிர்ப்பு வன்முறைக் கிளர்ச்சி ஒன்றையும் முன்னெடுத்தது.

கடந்த வாரம் எனது கட்டுரையில் குறிப்பிட்டதைப் போன்று இந்திய – இலங்கை சமாதான உடன்படிக்கையில் 1987 ஜூலை 29 ஆம் திகதி முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்த்தனாவம் கொழும்பில் வைத்து கைச்சாத்திட்டனர்.

தமிழீழ விடுதலை புலிகள் உட்பட ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதக் குழுக்களுக்கும் இலங்கை ஆயுதப் படைகளுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வருவதன் மூலமாக இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்தும் மெச்சத்தங்க ஒரு குறிக்கோளுக்காகவே உடனபடிக்கை கைச்சாத்திடப்பட்டது.

போர் நிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. அமைதியைப் பேணுவதற்காக இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய இராணுவம் நிலைகொண்டது.

எதிர்பார்க்கப்பட்டதை போன்று நிலைபேறான ஒரு சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு பதிலாக, இந்திய – இலங்கை உடன்படிக்கை மேலும் கூடுதல் வன்முறைக்கும் இரத்தக் களரிக்கும் வழிவகுத்தது.

வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்ள மறுத்து மீண்டும் போரை ஆரம்பித்தது. விரைவாகவே வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படைக்கு எதிராக விடுதலை புலிகள் முழுஅளவிலான கெரில்லாப் போரை தொடுத்தது.

ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி

அதேவேளை, றோஹண விஜேவீர தலைமையிலான ஜே.வி.பி.யும் இந்திய – இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து பிரதானமாக சிங்களப் பகுதிகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது.

பிரதமல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தபோது 1971 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. ஒரு ஆயுதப் போராட்டத்தை தொடங்கியது. அந்த போராட்டம் பல்வேறு நாடுகளின் உதவியுடன் கொடூரமான முறையில் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டது. இது பொதுவாக முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சி என்று அழைக்கப்படுகிறது.

இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சி ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவின் அரசாங்கத்துக்கும் அவருக்கு பிறகு பதவிக்கு வந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினதும் அரசாங்கங்களுக்கு எதிரானது. அந்த கிளர்ச்சி ஜே.ஆர். ஜனதிபதியாக இருந்தபோது தொடங்கி ஜனாதிபதி பிரேமதாசவின் ஆட்சியில் 1989/ 90 காலப்பகுதியில் முடிவுக்கு வந்தது.

ஜே.வி.பி. அதன் இரண்டாவது கிளர்ச்சியை 1987 ஆம் ஆண்டில் தொடங்கிய போது தமிழர்களும் முஸ்லிம்களும் பெரும்பான்மையாக வாழ்கின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதற்கு சொற்ப எண்ணிக்கையான உறுப்பினர்களே இருந்தனர்.

அதனால் ஜே.வி.பி.யின் ஆயுதப் போராட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏனைய ஏழு மாகாணங்களிலேயே இடம்பெற்றன.

ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு இராணுவப் பிரிவுக்கு தேசபக்த மக்கள் இயக்கம் ( தேசப்பிரேமி ஜனதா வியாபாரய ) என்று பெயர் வைக்கப்பட்டது. மக்களின் ஆதரவைத் திரட்டும் நோக்கத்துடனேயே தேசபக்திக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தேசப்பிரேமி ஜனதா வியாபாரயவின் தளபதிக்கு கொடுக்கப்பட்ட இயக்கப் பெயருக்கு ஒரு வரலாற்று காரணமும் இருந்தது. கீர்த்தி விஜேபாகு என்பதே அந்தப் பெயர்.

பத்தாவது நூற்றாண்டில் இளவரசர் கீர்த்தி சோழ மன்னர்களான ராஜராஜனுக்கும் இராஜேந்திரனுக்கும் எதிராக்போரிட்டார். அந்த றுஹுணு இளவரசர் இறுதியில் சோழப் படையெடுப்பாளர்களை பொலன்னறுவையில் இருந்து விரட்டுவதில் வெற்றிகண்டு தன்னை விஜேபாகு மன்னனாக முடிசூடிக்கொண்டார்.

தேசப்பிரேமி ஜனதா வியாபாரயவின் தளபதி கீர்த்தி விஜேபாகுவின் உண்மையான பெயர் சமான் பியசிறி பெர்னாண்டோ. மொறட்டுவை லுணாவ பகுதியைச் சேர்ந்த அவர் களனி பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டதாரி.

மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக நீடித்த இரண்டாவது ஜே.வி.பி. கிளர்ச்சியின்போது ஜே.வி.பி.யினாலும் பொலிஸ், இராணூவம் மற்றும் பரா இராணுவக் குழுக்கள் உட்பட கிளர்ச்சி தடுப்பு படைகளினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் அரச ஏஜென்ட்களினால் படுகொலை செய்யப்பட்டனர்.

பாதுகாப்பு படைகளினாலும் அரசின் ஏனைய ஏஜெனட்களினால் கொலாலப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பாக நம்பகமான மதிப்பீடு எதுவும் கிடையாது என்கிற அதேவேளை ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ விபரங்கள் அரசினால் வெளியிடப்பட்டன.

அநுரா குமார திசாநாயக்க உட்பட ஜே.வி.பி.யின் இன்றைய முன்னரங்க தலைவர்களில் பலர் இந்திய எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் இயக்கத்தில் இணைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்நாட்டின் மீதான பற்று, அந்நிய ஆக்கிரமிப்பாளர்கள் என்று நோக்கப்பட்ட இந்தியா மீதான வெறுப்பு என்ற இரட்டை உணர்வினால் அவர்கள் தூண்டப்பட்டனர். இந்திய – இலங்கை உடன்படிக்கையையும் அதன் விளைவான அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தையும் இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்டவை என்று அவர்கள் கருதியதால் மிகவும் கடுமையாக எதிர்த்தார்கள். முரண்நிலை என்னவென்றால் தமிழர்கள் மத்தியில் இருந்த கடும் போக்காளர்களும் அவற்றை எதிர்த்ததுதான்.

இந்திய – இலங்கை உடன்படிக்கை

இந்திய – இலங்கை உடன்படிக்கை குறைபாடு கள் இல்லாதது அல்ல. தமிழர்களின் சகல பிரச்சினைகளையும் அது சீர்செய்யவில்லை. ஆனால், அது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதை நோக்கிய ஒரு ‘ குணப்படுத்தல் ‘ செயன்முறைக்கான நல்லதொரு பெரிய தொடக்கமாக அமைந்தது.

இந்திய – இலங்கை உடன்படிக்கை இலங்கையை பல இனத்தவர்களும் பல மதத்தவர்களும் வாழ்கின்ற ஒரு தேசம் என்று அங்கீகரித்தது. அதனால் சிங்கள மேரினவாதிகளின் ஓரினத்துவ உரிமை கோரலும் தமிழ்ப் பிரிவினைவாதிகளின் இரு தேசக் கோட்பாடும் நிராகரிக்கப்பட்டன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை ஏனைய இனத்தவர்களுடன் சேர்ந்து தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் வாழ்ந்துவந்த அவர்களின் வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் என்று உடன்படிக்கை அங்கீகரித்தது.

அதனால் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் வரலாற்று வாழ்விட உரிமை அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், பிரத்தியேக உரிமை இல்லை. வடக்கு – கிழக்கு பிராந்தியம் சகல இனங்களுக்கும் சொந்தமானது.

மேலும், தனியான ஒரு தமிழ்பேசும் மாகாணம் உருவாக்கப்படுவதற்கு அந்த நேரத்தில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இணைப்பை அங்கீகரிப்பதற்கு அல்லது நிராகரிப்பதற்கு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் இரு மாகாணங்களும் தற்காலிகமாக இணைக்கப்பட்டன.

மாகாண அடிப்படையில் அதிகாரப்பரவலாகல் திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. உத்தியோகபூர்வமொழி அந்தஸ்துக்கு தமிழ் உயர்த்தப்பட்டது. ‘ பயங்கரவாத ‘ நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றவாளிகளாகக் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சகலருக்கும் உத்தியோகபூர்வ மன்னிப்பு வழங்கப்பட்டது ஆயுதமேந்திய சகல தீவிரவாதிகளுக்கும் பொதுமன்னிப்பு ஒன்று வழங்கப்பட்டது.

இந்திய – இலங்கை உடன்படிக்கை படிப்படியாக நடைமுறைப் படுத்தப்படும் பட்சத்தில் இலங்கை தமிழர்களின் அடிப்படை மனக்குறைகளையும் நியாயபூர்வமான அபிலாசைகளையும் சீர்செய்து நிறைவேற்றக்கூடியதாக இருக்கும் என்று அப்போது தோன்றியது. தவிரவும், பொதுவில் உடன்படிக்கையினதும் குறிப்பாக 13 வது திருத்தத்தினதும் நடைமுறைப்படுத்தலையும் உத்தரவாதப்படுத்த இந்தியா இருந்தது.

13 வது அரசியலமைப்பு திருத்தம்

அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் கொழும்பில் வரையப்பட்டது. ஒரு ஆலோசகர் என்ற அந்தஸ்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட அறிஞர் ஒருவருடன் கலந்தாலோசனை நடத்தப்பட்டது.

அந்த நேரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிடமிருந்தும் ஜே.வி.பி.யிடமிருந்தும் கிளம்பிய கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில், ( உயர்நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் ) தேசிய ரீதியான சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றை வேண்டிநிற்கும் எந்தவொரு அரசியலமைப்பு திருத்தமும் நிறைவேற்றப் படமாட்டாது என்று அஞ்சப்பட்டது.

அதனால் 13 வது திருத்தத்தின் ஊடான உத்தேச மாகாண சபைகளின் அதிகாரங்களும் உறுப்பமைவும் ஓரளவு மட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணத்தினால் 13 வது திருத்தத்தை சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் நிறைவேற்றுவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதித்தது. ஒன்பது நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு ஐந்து – நான்காக பிரிந்தே அந்த தீர்ப்பை வழங்கியது.

குறிப்பிட்ட ஒரு காலவரையறைக்குள் மாகாணசபைகளுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்குவதாக ஜே.ஆர். ஜெயவர்தனவிடம் இருந்து எழுத்துமூல உறுதிமொழியை இந்தியா 1987 நவம்பர் 7 ஆம் திகதி பெற்றுக் கொண்டது. ஆனால், நிகழ்வுகள் வித்தியாசமான ஒரு திருப்பத்தை எடுத்தன. இந்த உறுதிமொழி ஜெயவர்தனவினாலோ அல்லது பிறகு பதவிக்கு வந்த அரசாங்கங்களினாலோ ஒருபோதும் காப்பாற்றப்படவில்லை. இந்திய இராணுவத்துக்கு எதிரான விடுதலை புலிகளின் சண்டை தீவிரமடைந்தது. இது நிலைவரத்தை மாற்றியமைத்தது.

உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ‘ அமைதிகாப்போராக ‘ இந்தியப்படைகள் இலங்கையில் வந்திறங்கியபோது சிங்களத் தெற்கு ஆவேசத்துடன் எதிர்த்தது. ஆனால் தமிழ் வடக்கு – கிழக்கு ‘ ஜவான்களை ‘ முழுமனதுடன் வரவேற்றது ஆனால், இந்திய இராணுவத்துடன் விடுதலை புலிகள் மோதத் தொடங்கியதை அடுத்து ஒரு சில மாதங்களுக்குள் நிலைவரம் தலைகீழாக மாறியது.

மறுவார்த்தைகளில் சொல்வதானால், ” நடுவர் இப்போது களத்தில் இறங்கிவிட்டார்.” இந்திய அமைதிகாக்கும் படையின் ( Indian Peace Keeping Force ) தோற்றம் இப்போது அப்பாவிகளை கொலைசெய்யும் படையாக (Innocent People Killing Force ) மாறியது. இந்தியப்படைகள் இறுதியாக 1990 மார்ச்சில் இலங்கையை விட்டு வெளியேறியபோது அதற்காக கவலைப்பட எவரும் இருக்கவில்லை.

நலன்களின் சங்கமம்

பிரதானமாக, இந்தியா இலங்கையில் தீங்கற்ற முறையில் தலையீடு செய்தபோது அதன் சொந்த நலன்களின் அடிப்படையில் செயற்றட்டது. இந்தியாவின் நலன்களுக்கும் தமிழர்களின் நலன்களுக்கும் இடையில் ” ஒருமை ” இருக்கவில்லை. ஆனால், இரு தரப்பினரதும் நலன்களும் நிச்சயமாக ஒருமுகப்பட்டன. ஆனால் அந்த இசைவு அதற்குரிய மட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது.

ஆயுதப்போராட்டத்தை நெருக்குதலைக் கொடுப்பதற்கான அல்லது பேரம்பேசலுக்கான ஒரு கருவியாக பயன்படுத்தியது ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதாக இருந்தது. ஆனால், புதுடில்லியை மீறி தனிநாடு ஒன்றுக்காக போராட்டத்தை நீடித்தது ஏற்புடையதாக இருக்கவில்லை. ஐக்கியப்பட்ட ஒரு இலங்கைக்குள் சுயாட்சிக்கு இந்தியா ஆதரவாக இருந்த அதேவேளை தமிழீழத்தை எதிர்த்தது.

இந்தியாவின் பொறுப்பு

சமாதான உடன்படிக்கை பல்வேறு விடயங்களுக்கு மத்தியில், இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் சகல சமூகங்களினதும் பாதுகாப்பையும் பத்திரத்தையும் உறுதிப்படுத்தும் பொறுப்பை ( இலங்கையுடன் சேர்த்து ) இந்தியாவுக்கு ஒப்படைத்தது. ”

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கின்ற சகல சமூகங்களினதும் பௌதீகப் பாதுகாப்பையும் பத்திரத்தையும் உறுதிசெய்வதில் இலங்கையினதும் இந்தியாவினதும் அரசாங்கங்கள் ஒத்துழைத்துச் செயற்படும் ” என்று உடன்படிக்கையின் பிரிவு 2.16 ( ஈ) கூறுகிறது.

உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கிக்கொண்ட அதேவளை ” இந்தியா தீர்மானங்களை உத்தரவாதப் படுத்துவதுடன் இந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கும் ஒத்துழைக்கும் ” என்று உடன்படிக்கையின் பிரிவு 2.14 கூறியது.

தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை உத்தரவாதப்படுத்தும் பொறுப்பு இந்தியாவுக்கு இருந்ததால் இலங்கையின் விவகாரங்களில் அதன் நிலைப்பாடுகளை தெரிவிக்கும் ஒரு நிரந்தர ” வாய்ப்பு ‘ ( Say ) இந்தியாவுக்கு இருந்தது. அத்துடன் குறைந்தபட்சம் கோட்பாட்டு அளவிலாவது வடக்கு, கிழக்கில் வாழும் சகல மக்களினதும் பாதுகாப்புக்கும் பத்திரத்துக்கும் இந்தியாவுக்கு பொறுப்பு இருந்தது.

இந்திய – இலங்கை உடன்படிக்கை பல வருடங்களாக ” மறக்கப்பட்டுவிட்டாலும்” , அது இன்னமும் செல்லுபடியாகக் கூடியதாகவே இருக்கிறது. அவசியம் ஏற்படும்போது உடன்படிக்கையின் ஏற்பாடுகளை மீண்டும் செயற்படுத்த முடியும். இரு நாடுகளுமே வேண்டாமென்று மறுதலிக்காத பட்சத்தில் இந்திய — இலங்கை உடன்படிக்கை தொடர்ந்து செல்லுபடியாகக் கூடியதாகவே இருக்கும். ஒரு நாடு அதிலிருந்து ஒருதலைப்பட்சமாக வெளியேற முடியாது.

இந்திய பிரதமருக்கு கூட்டாக கடிதம்

சில வருடங்களுக்கு முன்னர் குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் நடவடிக்கையாக, அரசியலயைப்புக்கான 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தச் செய்வதற்கு உதவியை நாடி பிரதானமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏழு அரசியல் கட்சிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட்டாக ஒரு கடிதத்தை எழுதின. அதன் வரைவு 2021 டிசம்பர் 29 பூர்த்தி செய்யப்பட்டு 2022 ஜனவரி 6 சம்பந்தப்பட்ட கட்சிகளினால் அங்கீகரிக்கப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை தமிழரசு கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட் ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ் மக்கள் கட்சி மற்றும் தமிழ் தேசிய கட்சி.ஆகியவையே அந்த கடிதத்தில் கைச்சாத்திட்டவையாகும்.அந்த கடிதம் இலங்கையில் தமிழ்பேசும் மக்கள் முகங்கொடுக்கும் முக்கியமான பிரச்சினைகளை விளக்கும் ஒரு இணைப்புடன் சேர்த்து கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் நல்லெண்ண உதவியூடாக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இலங்கையில் தமிழ் மக்களின் அவசரமான அக்கறைக்குரிய விடயங்கள் ஏழு வகைகளின் கீழ் இணைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்தன.அவையாவன ;

13 வது திருத்தமும் மாகாணசபைகளும்

இந்திய – இலங்கை உடன்படிக்கையை தொடர்ந்து பதின்மூன்றாவது திருத்தத்தின் கீழ் இணங்கிக்கொள்ளப்பட்ட மூலமுதல் ஏற்பாடுகளில் இருந்து பறிக்கப்பட்ட சட்டம், ஒழுங்கு, நிதி, நிலம், கல்வி மற்றும் விவசாய சேவைகள் தொடர்பான சகல ஏற்பாடுகளையும் மீண்டும் கொண்டு வரவேண்டும். இலங்கை ஜனாதிபதிகளினால் வழங்கப்பட்ட உத்தரவாதங்களும் இதில் அடங்கும்.

தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகளின் பிரகாரம் தேர்தல்கள் ஆணைக்குழு மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கு ஏற்பாடுகளைச் செய்யவேண்டும் என்று இலங்கை அரசாங்கத்தை கோரவேண்டும்.

மொழி உரிமைகள் – 16 வது திருத்தம்

பதின்மூன்றாவது திருத்தம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து விரைவாக 1988 டிசம்பர் 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான பதினாறாவது திருத்தத்தின் ஏற்பாடுகள் முழுமையாக சொலலுக்குச் சொல் உணர்வின் அடிப்படையில் நடைமுறைப் படுத்தப்படவேண்டும்.

அரசாங்க மொழிகளாக சிங்களத்தினதும் தமிழினதும் பயன்பாடும் பதின்மூன்றாவது திருத்தத்திலும் பதினாறாவது திருத்தத்திலும் இரு மொழிகளுக்கும் தேசிய மொழிகள் என்றும் ஆங்கிலத்துக்கு இணைப்பு மொழி என்றும் வழங்கப்பட்ட அங்கீகாரம் சொல்லுக்குச் சொல் உணர்வின் அடிப்படையில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தேசிய மொழிகள், நிருவாகம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகியவற்றில் அவற்றின் நடைமுறைப்படுத்தல் மற்றும் பாடசாலைகளில் போதனாமொழிகள் போன்ற விடயங்களைக் கையாளும் 18 தொடக்கம் 25 ஏ சத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பின் நான்காம் அத்தியாயத்தின் ஏற்பாடுகள் முழுமையாக சொல்லுக்குச் சொல் மற்றும் சாராம்சத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.

குடிப்பரம்பல், எல்லைநிர்ணயம்

பண்டா – செல்வா ஒப்பந்தம் (1957), டட்லி — செல்வா ஒப்பந்தம் ( 1965), மற்றும் இந்திய — இலங்கை உடன்படிக்கை (1987) ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கும் உணர்வுக்கும் முரணாக வடக்கிலும் கிழக்கிலும் குடிப்பரம்பல் அமைப்பை திட்டமிட்டமுறையில் மாற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் சகல முயற்சிகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

வடக்கு, கிழக்கில் வரலாற்று ரீதியான வாழவிடங்களை தமிள் மக்களின் பாரப்பரிய தாயகமாக உறுதிப்படுத்தும் சான்றுகளை நிர்மூலஞ்செய்வதற்கு அல்லது திரிபுபடுத்துவதற்கு தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, வனம் மற்றும் வனவிலங்கு திணைக்களம், சுற்றுலாத்துறை, பாதுகாப்பு / உள்நாட்டு பாதகாப்பு்அமைச்சு ஆகியவற்றினால் மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

பௌத்த காலத்துக்கு முன்பிருந்தே தமிழர்கள் இலங்கையில் வாழ்ந்துவருகிறார்கள் என்ற அவர்களின் தொல்பழமையை தொல்லியல் திணைக்களம் அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் இலங்கைக்குள் பௌத்தத்தை ( தமிழ்ப் பௌத்தர்கள்) தமிழர்களே வரவேற்றவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டு வரலாற்றை திரிபுபடுத்தும், மழுப்பும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.

வடக்கு மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையிலான எல்லைப் பிரதேசங்களில் உள்ள தமிழ்க்கிராமங்களை சிங்கள பகுதிகளுடன் இணைப்பதன் மூலம் அல்லது சிங்களப் பகுதிகளை தமிழ்க் கிராமங்களுக்குள் கொண்டுவருவதன் மூலம் தமிழர்களை அவர்களது சொந்தப் பிரதேசங்களிலேயே சிறுபான்மையினராக்குவதற்காக இனத்துவ அமைவு மாற்றியமைக்கப்படுகிறது. இதனால் உள்ளூராட்சி சபைகள், மாகாணசபைகள் மற்றும் பாராளுமன்றத்தில் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவதில் இருந்து தமிழர்கள் தடுக்கப்படுகிறார்கள். அத்தகைய பெருங்கேடான நடைமுறைகள் நிறுத்தப்பட வேண்டும்.

குடியுரிமையும் சமத்துவமும்

இலங்கையின் அண்மைய இந்திய வம்சாவளி மக்களுக்கு முழுமையான குடியுரிமையை வழங்குவதாக உறுதியளித்த இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் செய்துகொண்ட நேரு – கொத்தலாவல ( 1954), சிறிமாவோ – சாஸ்திரி (1964), சிறிமாவோ – இந்திரா (1974) உடன்படிக்கைகளின் நோக்கமும் உணர்வும் அந்த மக்களுக்கு காணியுரிமை, வீட்டுரிமை, வாழ்வாதாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தை அவர்களுக்கு கிடைக்கச் செய்வதேயாகும். ஆனால் அவை மீறப்பட்டு அலட்சியப்படுத்தப்படுகின்றன. அவர்களுக்கான சமத்துவ உரிமை மறுப்பும் பாகுபாடும் இல்லாமல் செய்யப்பட்டு அவர்கள் முழுமையான குடிமக்களுக்குரிய சகல உரிமைகளையும் கொணடவர்களாக வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதிகள்

பிரதானமாக தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் உடனடியாக நீக்கப்பட்டு அதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்களாக இருந்தாலென்ன அல்லது வேறு எந்த சிறுபான்மை இனங்களாக இருந்தாலென்ன நாடுபூராவும் சிதறிவாழும் இனத்துவ!மற்றும் அரசியல் சிறுபான்மையினருக்கும் சிறிய கட்சிகளுக்கும் இலங்கையின் பல கட்சி ஜனநாயக கட்டமைப்புக்குள் போதுமான பிரதிநிதத்துவம் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமுகமாக அவர்கள் பாாளுமன்றத்துக்கும் மாகாணசபைகளுக்கும் பிரவேசிக்கக்கூடியதாக இருக்கவேண்டும்.

அதனால் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை தொடரவேண்டும். தேர்தல் முறைமைக்குள் அதை அரசாங்கம் முழுமையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஒரு நாடு, ஒரு சட்டம் கோட்பாடு

நாட்டில் மத்திய அரசாங்கத்தை தவிர வேறு எந்த சட்டவாக்க அமைப்புகளும் இருப்பதை இல்லாமல் செய்வதற்கு அல்லது தடுப்பதற்கும் அர்த்தபுஷ்டியான எந்தவொரு அதிகாரப் பரவலாக்கத்தையும் தடுப்பதற்கும் ” ஒரு நாடு,ஒரு சட்டம் ” தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இது தமிழர்களும் முஸ்லிம்களும் தங்களது வழமைச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதையும் தங்களது கலாசாரம், சம்பிரதாயங்கள் மற்றும் நடைமுறைகளைப் பேணுவதையும் தடுக்கும். அத்தகைய ஆணைக்குழு இல்லாமல் செய்யப்பட்டு இலங்கையில் வாழும் சகல இனங்களினதும் தனித்துவ அடையாளங்களும் உரிமைகளும் இலங்கை அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

நேர்மறையான பதில் இல்லை

ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவியில் இருந்த நேரத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்த கூட்டுக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. ஆதற்கு பிறகு பெருமளவு நிகழ்வுகள் இடம்பெற்று விட்டன. ஆனால் கடிதத்துக்கு புதுடில்லியில் இருந்து இதுவரையில் நேர்மறையான பதிலையோ அல்லது முன்னோக்கிய நகர்வையோ காணமுடியவில்லை.

இலங்கை தமிழ்க்கட்சிகளும் கூட இந்த விவகாரத்தில் ஒரு அவசரத்தைக் காண்பிக்கவில்லை. இணைப்பில் தமிழ்க் கட்சிகளினால் முக்கியத்துவப்படுத்தப்பட்ட நிலைவரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியதாகும்.

இத்தகைய பின்புலத்திலேயே ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் இறுதியில் இரு நாடுகளினதும் அரசாங்கங்களினால் வெளியிடப்பட்ட விரிவான கூட்டறிக்கையில் 13 வது திருத்தம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஜனாதிபதி திசாநாயக்க செய்தியாளர்கள் சந்திப்பில் அதை அலட்சியம் செய்தார்.

பிரதமர் மோடி மாத்திரமே ” தமிழ் மக்களின் அபிலாசைகள்” , அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தி மாகாணசபை தேர்தல்களை நடத்துவது தொடர்பிலான கடப்பாடு ” பற்றி சில விடயங்களை செய்தியாளர்கள் முன்னிலையில் கூறினார்.

கூட்டறிக்கையில் அல்லது செய்தியாளர்கள் சந்திப்பில் இலங்கை ஜனாதிபதியும் இந்திய பிரதமரும் வெளியிட்ட கருத்துக்களில் 13 வது திருத்தம் குறிப்பிடப்படாதது பிரத்தியேகமாக தெரிந்தது. இதன் அர்த்தம் 13 வது திருத்தம் விரைவில் அதன் விதியைச் சந்திக்கப்போகிறது என்பதா?

தெளிவான முன்னறிவிப்பு?

புதிய அரசியலமைப்பு ஒன்று வரும்வரை 13 வது திருத்தம் நடைமுறையில் இருக்கும் என்று தமி் அரசியல் தலைவர்களுக்கு ஜே.வி.பி.யின் தலைவர்கள் உறுதியளித்திருக்கிறார்கள்.சுருக்கமாகச் சொல்வதானால், 13 வது திருத்தத்துக்கு நேரப்போகிற விரும்பத்தகாத விளைவுக்கான தெளிவான முன்னறிவிப்பு வந்திருக்கிறது. ஜே.வி.பி./ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவர உத்தேசிக்கும் புதிய அரசியலமைப்பில் 13 வது திருத்தத்தில் உள்ள அதிகாரப்பரவலாக்கல் அளவு சேர்த்துக் கொள்ளப்படுமா இல்லையா என்பதே முக்கியமான கேள்வியாகும்.

டி.பி.எஸ். ஜெயராஜ்

Share.
Leave A Reply