பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி ஊழல் வழக்கு ஒன்றில் குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்பையும் 3 வருட சிறைத்தண்டனையையும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்திய நிலையில், அவர் தனது நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான சாதனத்தை ஒரு வருடத்துக்கு அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நவீன பிரான்ஸ் வரலாற்றில் ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் இத்தகைய உத்தரவை எதிர்கொண்ட முதல் நபர் நிக்கலஸ் சார்கோஸி ஆவார்.
69 வயதான நிக்கலஸ் சார்கோஸி, 2007 முதல் 2012 ஆம் ஆண்டுவரை பிரெஞ்சு ஜனாதிபதியாக பதவி வகித்தவர்.
2012 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரான்சுவா ஹொலண்டேவிடம் தோல்வியுற்ற அவர், 2017 ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகினார். எனினும் பிரெஞ்சு அரசியலில் இன்னும் செல்வாக்குள்ள ஒருவராக அவர் கருதப்படுகிறார்.
ஜனாதிபதி பதவிக்காலத்தின் பின்னர், தான் சம்பந்தப்பட்ட வழக்கு ஒன்றின் தகவல்களைப் பெறுவததற்காக நீதிபதி ஒருவருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்பிலேயே சார்கோஸிக்கு மேற்படி தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
2014 பெப்ரவரியில் அதிகாரிகளால் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல் ஒன்றின் அடிப்படையில் இவ்வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
2007 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில் சார்கோஸின் பிரசாரத்துக்கான நிதி தொடர்பான வழக்கு விசாரணையொன்றை நீதிபதிகள் ஆரம்பித்திருந்த காலம் அது.
நிக்கலஸ் சார்கோஸி, அவரின் சட்டத்தரணி தியெறி ஹேர்ஸோக் ஆகியோர் போல் பிஸ்முத் என்பவர் பெயரில் பதிவுசெய்யப்பட்டிருந்த இரகசிய தொலைபேசிகள் ஊடாக உரையாடுவதை விசாரணையாளர்கள் அறிந்தனர்.
இந்நிலையில், சார்கோஸி சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு ஒன்றின் தகவல்களை இரகசியமாக பெறுவதற்காக நீதிபதி கில்பேர்ட் அஸிபேர்ட்டுக்கு மொனாக்கோவில் உயர் வேலைவாய்ப்பொன்றை வழங்குவதற்கு சார்கோஸியும் சட்டத்தரணி ஹேர்ஸோக்கும் வாக்குறுதி அளித்தனர் என்ற சந்தேகம் தொலைபேசி உரையாடல்களை ஆராய்ந்த புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது.
நீதிபதி அஸிபேர்ட்டுக்கு அத்தகைய பதவி எதுவும் கிடைக்கவில்லை. சார்கோஸி தகவல்களை நாடிய குறித்த வழக்கு விசாரணையும் பின்னர் கைவிடப்பட்டது.
எனினும், நீதிபதிக்கு பதவி வழங்குவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாவிட்டாலும் அவ்வாறு வாக்குறுதி அளித்தமையானது பிரெஞ்சு சட்டத்தின்படி ஓர் ஊழல் ஆகும் என வழக்குத் தொடுநர்கள் குற்றம் சுமத்தினர்.
நீதிபதி அஸிபேர்ட்டுக்கு உதவுவதில் தீய நோக்கம் எதுவும் இல்லை எனவும், தான் தவறு எதுவும் செய்யவில்லை எனவும் சார்கோஸி கூறினார்.
ஆனால், மேற்படி குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் நிக்கலஸ் சார்கோஸி, சட்டத்தரணி தியெறி ஹேர்ஸோக், நீதிபதி அஸிபேர்ட் ஆகியோருக்கு 2021 மார்ச் மாதம் தலா 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்தண்டனையில் 2 வருடகாலம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையாகும்.
பிரெஞ்சு சட்டத்தின்படி, ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பது குறித்தகாலத்தில் மீண்டும் குற்றம் செய்யாவிட்டால் சிறைக்கு வெளியில் இருக்கலாம்.
அதேவேளை, 2 வருடங்களுக்கு குறைந்த சிறைத்தண்டனை பெற்றவர்கள் சிறைக்கு செல்லாமல், நடமாட்டத்தை கண்காணிப்பதற்கான சாதனத்தை அணிந்த நிலையில் வீட்டுக்காவலில் இருப்பதற்கு அனுமதிக்கப்படுவர்.
இத்தீர்ப்புக்கு எதிராக நிக்கலஸ் சார்கோஸி மேன்முறையீடு செய்தார். 2023 ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அத்தீர்ப்பை உறுதிப்படுத்தியது.
அதையடுத்து உச்சநீதிமன்றத்திலும் சார்கோஸி மேன்முறையீடு செய்தார்.
இந்நிலையில் சார்கோஸிக்கான தண்டனையை மேற்படி உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி தீர்ப்பளித்தது.
நீதிபதி அஸிபேரட் மற்றும் சட்டத்தரணி ஹர்ஸோக் 3 வருடங்களுக்கு சட்டத்தரணியாக பணியாற்றுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுவே பிரான்ஸின் அதிஉயர் நீதிமன்றம் என்பதால் இத்தீர்ப்புக்கு எதிராக சார்கோஸி மேன்முறையீடு செய்ய முடியாது. ஆனால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் தான் மேற்முறையீடு செய்யவுள்ளதாக சார்கோஸி தெரிவித்துள்ளார். தனக்கு இழைக்கப்பட்ட ஆழமான அநீதியை ஏற்றுக்கொள்ளத் தான் தயாரில்லை என அவர் கூறியுள்ளார்.
ஆனால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் சார்கோஸி மேன்முறையீடு செய்தாலும் பிரெஞ்சு உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாற்ற முடியாது. ஆனால், மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய சமவாயம் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்க முடியும்.
அதேவேளை, தனது சேவை பெறுநர் பிரெஞ்சு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு கட்டுப்படுவார் என சார்கோஸியின் சட்டத்தரணி பட்றிஸ் ஸ்பினோசி தெரிவித்துள்ளார். இதன்படி, நடமாட்டத்தை கண்காணிக்கும் சாதனம் பொருத்தப்பட்டு வீட்டுச் சிறையில் இருப்பதற்கு இணங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது
நவீன பிரான்ஸ் வரலாற்றில் ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்ட இரண்டாவது ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி. ஆனால், சிறைத்தண்டனை அனுபவிக்கும் நிர்ப்பந்தத்தை எதிர்கொண்ட முதல் பிரெஞ்சு ஜனாதிபதி இவரே.
1995 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டுவரை பிரெஞ்சு ஜனாதிபதியாக பதவி வகித்த ஜக் சிராக், 1977 முதல் 1995 பாரிஸ் மேயராக பதவி வகித்தகாலத்தில் அரச நிதியை துஷ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கில் ஜக் சிராக்குக்கு 2 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை 2011 ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை என்பதால் அவர் சிறைக்குச் செல்ல நேரிடவில்லை.
இந்நிலையில், 2 ஆம் உலக யுத்தத்துக்குப் பின்னர் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முதல் பிரெஞ்சு ஜனாதிபதி சார்கோஸி ஆவார்.
ஏனைய வழக்குகள்
நிக்கலஸ் சார்கோஸி எதிர்கொண்ட வழக்கு இது மாத்திரமல்ல. 2007 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு லிபியாவின் கடாபி அரசாங்கத்திடமிருந்து இரகசியமாக நிதி பெற்றமை, 2012 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பிரசாரத்துக்கு அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதலான நிதியை செலவிட்டதுடன், அதை மறைப்பதற்கு முயற்சித்தமை ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளையும் சார்கோஸி எதிர்கொண்டுள்ளார்.
2012 ஆம் ஆண்டு தேர்தல் பிரசார செலவு தொடர்பான வழக்கில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 2021 செப்டெம்பரில் ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்தீர்ப்புக்கு எதிராக அவர் மேன்முறையீடு செய்த போதிலும் அவர் குற்றவாளி என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. எனினும் அவருக்கான தண்டனை 6 மாத சிறைத்தண்டனையுடன் 6 மாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையாக குறைக்கப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சார்கோஸி மேன்முறையீடு செய்ததால் அத்தீர்ப்பு அமுல்படுத்தப்படவில்லை.
இதேவேளை 2007 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்துக்கு லிபியாவின் கேணல் கடாபி அரசாங்கத்திடமிருந்து நிக்கலஸ் சார்கோஸி இரகசியமாக பணம் பெற்றார் என்ற குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கு விசாரணை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.
-ஆர்.சேதுராமன்-