சமஷ்டி என்ற கருத்தை துணிச்சலோடு முன்வைத்தவர் வேறு யாருமல்ல, இலங்கையின் முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா.
அதே பண்டாரநாயக்கா 1956 ஆண்டு தனிச்சிங்களச் சட்டதை கொண்டு வந்தது மட்டுமல்ல, 1957 ஆம் ஆண்டு சிங்கள ஸ்ரீ வாகனங்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி குழப்பத்தை உண்டாக்கியதும், 1958 ஆம் ஆண்டு தமிழர்களுக்கெதிரான முதலாவது இனக்கலவரத்தை தூண்டியதும் இதன் எதிர் விளைவாக தமிழர்கள் சமஷ்டி ஆட்சி கோரிக்கையை முன்வைத்து போராடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதும் அதன் இன்னொரு விஸ்வரூபமாக ஆயுதப்போராட்டம். வெடித்ததும் தமிழர்கள் அரசியல் பயணத்தில் முக்கிய சம்பவங்களாகும்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 75 ஆவது ஆண்டு நிறைவு விழாவை (பவள விழா) கடந்த 18.12.2024 திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவிடத்தில் தமிழரசுக் கட்சியின் தற்போதைய தலைவர்கள் ஒன்றிணைந்து அனுஷ்டித்துள்ளனர்.
எனவே தான் பவள விழாக்காணும் தமிழரசுக்கட்சி எத்தகைய சூழ் நிலையில் ஸ்தாபிக்கப்பட்டது? அது காவிவந்த சமஷ்டிக் கொள்கையின் தாற்பரியம் என்ன என்பதை புதிய தலைமுறையினர் அறிந்து கொள்ள அந்த வரலாறு இங்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
பிரித்தானியாவிலுள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகமொன்றில் சட்டத்துறையில் பட்டம் பெற்று தாயகம் திரும்பிய பண்டாரநாயக்கா, நேரடியாகவே இலங்கை அரசியலில் நுழைந்தார்.
1926 ஆம் ஆண்டு யாழ். இளைஞர் காங்கிரஸின் அழைப்பின்பேரில் அங்கு சென்று உரையாற்றியபோது ‘பல இனங்கள் வாழும் இலங்கைக்கு சமஷ்டி ஆட்சி முறையே சிறந்தது’ என்று விளக்கிக் கூறியதுடன் ஐக்கிய அமெரிக்கா, சுவிட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் சிறப்பான ஜனநாயக ஆட்சி நடைபெறுகிறதென்றால் அதற்குக் காரணம் அங்கு காணப்படும் சமஷ்டி வடிவிலான ஆட்சி முறையே என்று கூறியிருந்தார். இதை ஏற்றுக் கொண்ட யாழ். இளைஞர்கள் பண்டாவின் இக்கருத்தை கை தட்டி வரவேற்றனர்.
அப்போது தந்தை செல்வநாயகம் அரசியலுக்கு வரவுமில்லை. தமிழரசுக்கட்சியை ஸ்தாபிக்கவுமில்லை. இச்சம்பவம் நடந்து சுமார் 23 வருடங்களுக்குப்பின்தான் தந்தை செல்வா தலைமையிலான இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு கால்கோள் இடப்பட்டது.
பண்டாரநாயக்கா 1926 ஆம் ஆண்டு யாழில் நிகழ்த்திய சமஷ்டி பற்றிய உரை, யாழ்ப்பாண புத்திஜீவிகள் மற்றும் கல்வி மான்கள் மட்டத்தில் ஒரு கனவாகவும் அரசியல் ஞானமாகவும் 100 வருடங்களுக்கு முன் கருதப்பட்டது. அப்பொழுதெல்லாம் யாழ்ப்பாண இளைஞர்கள் மத்தியில் அரசியல் தீவிரம், சுயநிர்ணய உரிமை முகிழ்ந்திருக்கவில்லை.
யாழ். ராஜ்ஜியத்தின் வீழ்ச்சிக்குப்பின் (குறிப்பாக 1620 இல் யாழ்ப்பாணம் போர்த்துக்கேயரின் நேர்முக ஆட்சிக்குள் கொண்டு வரப்பட்டது) யாழ். குடா நாட்டின் பாரம்பரியங்கள், சமய அனுஷ்ட்டானங்கள், கந்தப்புராணக் கலாசாரங்கள் மீது மக்கள் கொண்டிருந்த நாட்டத்தின் காரணமாக யாழ். குடாநாடு ஓர் அடக்கப்பட்ட அரசியல் உணர்வுகளை கொண்டதாகவே காணப்பட்டது.
இருந்தபோதிலும் 1921 யாழில் நிறுவப்பட்ட தமிழர் மகாஜனசபை, ஒட்டுமொத்தமான தமிழர்களின் அரசியல் அபிலாஷைகளை அடைவதற்காக எல்லா மட்டங்களிலுமுள்ள தமிழரை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தது. (கலாநிதி முருகர் குணசிங்கம், இலங்கைத் தமிழர்)
எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்கா (1899—1959) பிறப்பால் ஒரு அங்கிலிக்கன் மதத்தைச் சேர்ந்தவர். இவர் கண்டி ராஜ்ஜியத்தில் ஆலயம் ஒன்றில் பூசகராக கடமையாற்றிய நீலப் பெருமாள் பண்டாரம் என்பவரிடம் இருந்து வளர்ந்தவரென்றும் கூறப்படுகிறது.
இவர் தந்தை சொலமன் டயஸ் பண்டார நாயக்க. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பிரித்தானியாவிலுள்ள ஒக்ஸ்பர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் வாய்ப்பை பெற்று சட்டத்தரணியாக நாடு திரும்பினார்.
அரசியலில் ஆர்வம் கொள்ளக் காரணம் இவரது பல்கலைக்கழக ஆசிரியர்களாவர். 1926 கொழும்பு மாநகரசபை உறுப்பினராகவும் 1931 முதல் 1947 வரை இலங்கை அரச கழகத்திலும் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார்.
அவர் கிறிஸ்தவ மதத்தை துறந்து தன்னையொரு பௌத்தனாக அடையாளம் காட்டியமைக்கு அரசியல் பிரவேசமே காரணமாகும். ஆரம்ப காலத்தில் ஐக்கிய தேசியக்கட்சியில் (1946 முதல் 1951) இணைந்திருந்த இவர் அதிலிருந்து பிரிந்து 1951 ஆம் ஆண்டு(2.9.1951) ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி என்ற புதிய கட்சியொன்றை ஆரம்பித்து அதன் தலைவரானார்.
யாழ்ப்பாணத்தில் பண்டாரநாயக்க கூறிய சமஷ்டி பற்றிய கருத்துக்கள் தந்தை செல்வாவின் அரசியல் சிந்தனைக்கு தீனி போட்ட நிலையில் பின்னாளில் இதுபற்றி ஆழமான நம்பிக்கை கொண்டவராக தந்தை செல்வநாயகம் விளங்கியதன் காரணமாகவே சமஷ்டிக் கட்சியாக இலங்கை தமிழரசுக்கட்சியை உருவாக்கினார்.
அதே தலைவர் பின்னாளில் தமிழரசுக் கட்சியின் சமஷ்டிக் கோரிக்கை தோல்விகண்டு விட்டதாக ஒப்புக் கொண்ட சம்பவம், 1972 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி காங்கேசன்துறையில் நடந்த மாபெருங்கூட்டத்தில் இடம் பெற்றது.
அன்றைய தினம் (1972.1.12) ஆறு தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வல மொன்றை நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தன. இதற்கு தலைமை தாங்கிய தந்தை செல்வா, ‘நாம் முன்னெடுத்துச் செல்லும் சமஷ்டிக் கோரிக்கை தோல்வி கண்டு விட்டது.
சமஷ்டிக் கோரிக்கை வெற்றி பெறுவதற்கு சிங்கள மக்களின் ஒத்துழைப்பு தேவை. 1960 ஆம் ஆண்டு முதல் 1972 ஆம் ஆண்டுவரை சிங்களக் கட்சிகளின் ஆதரவை பெறுவதற்காக நாம் எடுத்த அத்தனை முயற்சிகளும் வெற்றி பெறவில்லை’ என பகிரங்கமாக அக்கூட்டத்தில் ஒத்துக் கொண்டார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக சமஷ்டி முறையிலான தீர்வே உரித்துடையது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக் கூடியதும் அதுவே, என்பதை தந்தை செல்வநாயகம் தொடக்கம் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் தமிழ்த்தலைவர்கள் வரை கடந்த 75 வருட காலம்வரை வலியுறுத்தி வந்தபோதும், அது இன்னும் எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது என்பதை சகல தரப்பினரும் அறிவர்.
அண்மையில் (7.12.2024) இலங்கைக்கு விஜயம் செய்திருந்த சுவிட்ஸர்லாந்து இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின்னை வடக்கு, மக்கள் பிரதி நிதிகள் சந்தித்து உரையாடியபோது புதிய அரசியல் அமைப்பினூடாக சமஷ்டி அடிப்படையிலான நிரந்தரமான தீர்வு ஒன்று ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என்று தெரிவித்திருந்தனர்.
இதே கோரிக்கையை கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய விஜயத்தை மேற்கொண்டதை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சமஷ்டியை கோருவதற்கு இந்தியா முழு ஆதரவு வழங்க வேண்டுமென்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இதிலிருந்து ஒன்றைப்புரிந்து கொள்ள முடிகிறது, தமிழ்த்தலைமைகள் சமஷ்டிக் கோரிக்கையை இன்னும் கைவிடவில்லை என்பதே அது.
தென்னிலங்கை அரசியல் தலைமைகளை பொறுத்தவரை சமஷ்டி என்பது நாட்டைப் பிரித்துவிடும் சாத்தான். சமஷ்டித்தீர்வை தமிழர்களுக்கு வழங்கி விட்டால் இலங்கைத்தீவு இரு நாடாகிவிடும், தமிழ் ராஜ்ஜியம் ஒன்று உருவாகுவதற்கு வழிவகுத்துவிடும், இது சிங்கள மக்களின் பௌத்த மேலாதிக்கத்தை அழித்துவிடும் என்ற அச்சம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள்.
இது பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களால் வெளிக்காட்டப்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாகவே சிங்கள மக்கள் சமஷ்டி மீது அடங்காச்சினம் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள் என்பது தெளிவாக தெரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
சுதந்திரத்துக்குப்பின் இலங்கையை ஆட்சி செய்த சிங்களத் தலைமைகளான டி.எஸ். சேனநாயக்க, எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, டட்லி சேனநாயக்க, சேர். ஜோன் கொத்தலாவல, டபிள்யூ. தஹநாயக்க, ஜே.ஆர் ஜயவர்தன, ஆர். பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்கா, மஹிந்த ராஜபக் ஷ , மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக் ஷ, ரணில் விக்கிரமசிங்க இவர்கள் யாருமே சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வை அங்கீகரித்தவர்களாகவோ ஏற்றுக் கொண்டவர்களாகவோ இருக்கவில்லை.
சமஷ்டி ஆட்சி முறை இலங்கைத்தீவை பிரிவினைக்கு கொண்டு சென்றுவிடுமென்ற கடுமையான இனவாத பிரசாரத்தை செய்த தலைவர்களில் டி.எஸ்.சேனநாயக்கா, ஜே.ஆர். ஜயவர்தன முக்கிய தலைவர்களாவர்.
தந்தை செல்வா தலைமையில் 1949 ஆம் ஆண்டுக்குப்பின் சமஷ்டி பற்றிய பிரசாரங்கள் வளர்ச்சி அடைந்து தமிழ் மக்கள் மத்தியில் சமஷ்டி பற்றிய ஆழமான நம்பிக்கைகள் வளர்ந்து வந்த நிலையில் தந்தை செல்வாவின் தலைமையையும், தமிழரசுக்கட்சியின் வளர்ச்சியையும் விரும்பாத, நேரடியாகவே எதிர்த்துக் கொண்டிருந்த தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் கொக்குவில் இந்துக்கல்லூரியில் விவாத மேடை ஒன்றை அமைத்து சமஷ்டி பற்றி விவாதிப்பதற்கு தந்தை செல்வாவுக்கு பகிரங்க அழைப்பொன்றை விடுத்திருந்தார்.
30.08.1950 ஆம் திகதி நடைபெறவிருந்த இந்த விவாதத்துக்கான அழைப்பை தந்தை செல்வா ஏற்றுக் கொள்ளவில்லை. 1951 ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜி.ஜி. பொன்னம்பலத்தின் அழைப்பை ஏற்று யாழ்ப்பாணம் வந்த பிரதமர் டி.எஸ். சேனநாயக்க, தமிழரசுக்கட்சியின் சமஷ்டிக் கோரிக்கையை பிரிவினைவாத கோரிக்கை என கடுமையாக விமர்சித்தது மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களுக்கு சென்று தொடர்ச்சியாக அதற்கு எதிரான பிரசாரங்களை மேற்கொண்டார்.
சமஷ்டிக் கோரிக்கையை பிரிவினைவாத கோரிக்கையாக சிங்கள மக்களுக்கு முதலாவதாக போதித்த தலைவர் டி.எஸ். சேனநாயக்க. இவருடன் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கிய பிரமுகராக விளங்கிய ஜயவர்தனவும் இப்பிரசாரத்தை தொடர்ந்து முன்னெடுத்தார். இந்தப்பிர சார நடவடிக்கைகள் சிங்கள பேரினவாதிகள் மத்தியில் தவறான பிரம்மையை உருவாக்கியது.
தென்னிலங்கை தலைமைகள் எவ்வாறு கருதியபோதும், தந்தை செல்வநாயகம் சமஷ்டி முறையிலான தீர்வைத்தவிர தமிழர்களுக்கு ஏற்புடையதான அரசியல் தீர்வு எதுவும் இருக்க முடியாது என்பதில் திடமான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார்.
அதுபோலவே அவர் தலை மையிலான இலங்கை தமிழரசுக்கட்சியும் கடந்த 75 வருடங்களுக்கு மேலாக சமஷ்டி முறையிலான தீர்வைப் பெறுவதற்காக ஒப்பந்தங்கள், உண்ணாவிரதப் போராட்ட ங்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்கள் என பல போராட்டங்களை நடத்தியபோதும், எதையுமே சாதிக்க முடியவில்லை என்ற அவ நம்பிக்கை நிலையே தமிழ் மக்களின் அதிருப்திக்கு காரணமாக இருந்துவந்துள்ளது.
1987 ஆம் ஆண்டு இந்திய அரசின் அனுசரணையோடு இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு அமைவாக 13ஆவது திருத்தம் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போதும் சமஷ்டி ஆட்சி முறைக்கு முன்னுரை எழுதப்பட்டிருப்பதாக இந்திய தரப்பால் கூறப்பட்டது.
ஆனால், ஆயுதக்குழுக்களாக இருக்கலாம், அன்றி மிதவாத போக்குடைய கட்சிகளாக இருக்கலாம், 13 ஆவது திருத்தத்தை வட, கிழக்கு மக்களுக்கான பொருத்தமான அரசியல் தீர்வாக ஏற்றுக் கொள்ளவில்லை. இதன் காரணமாகவே யுத்த மௌனிப்புக்குப் பின்னும் தமிழ்த் தேசியக்கட்சிகள் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளன.
திருமலை நவம்
(தொடரும்)