அண்மையில் நாட்டில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களை தொடர்ந்து நுளம்புகளை விடவும் எலிகளே இன்னும் ஆபத்தானவையாக இலங்கையில் உருவெடுத்துள்ளன.

கடந்த 2023ஆம் ஆண்டு பதிவாகிய 9,000 எலிக்காய்ச்சல் நோயாளர்களில் கிட்டத்தட்ட 200 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் வைத்தியர் குமுது வீரகோன் தெரிவிக்கும் நிலையில், எலிக்காய்ச்சல் காரணமாக இந்த வருடத்தில் 11 மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள அனர்த்தங்களைத் தொடர்ந்து அண்மைய நாட்களாக எலிக்காய்ச்சல் மேலும் உக்கிரமடைந்துள்ளதுடன், வடக்கு மாகாணத்தையே அதிலும் குறிப்பாக யாழ்.மாவட்டத்தையே எலிகள் புரட்டிப்போடத் தொடங்கியுள்ளன.

வடக்கில் கடந்த இருவாரத்தில் மட்டும் எலிக்காய்ச்சலினால் 8 பேர் பலியாகியுள்ளதுடன், 110க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடக்கில் எலிக்காய்ச்சல் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்துவதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும்,தேவையான ஆய்வுகளை மேற்கொள்வதற்காகவும் மத்திய சுகாதார அமைச்சின் தொற்றுநோய்த் தடுப்பு பிரிவிலிருந்து வைத்திய நிபுணர்கள் குழுவொன்று யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விரைந்து தடுப்பு, மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

இவ்வாறு எலிக்காய்ச்சலால் (leptospirosis) மரணமடைவோர், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், இது குறித்து அவதானமாக இருக்குமாறும் மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் எலிக்காய்ச்சல் தொடர்ந்து அதிகரிக்கலாம் எனவும் தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் சுகத் சமரவீர எச்சரித்துள்ளார். எனவே இங்கு எலிக்காய்ச்சல் ஏற்படும் விதம், அதனால் ஏற்படும் பாதிப்புக்கள், தடுப்பு முறைகள் தொடர்பில் விரிவாகப் பார்ப்போம்.

இலங்கையைப் பொறுத்தவரையில் மழை காலத்துடன் சேர்த்து சில நோய்கள் தீவிரமடைவது வழமை.அவ்வாறான நோய்களில் ஒன்று தான் இந்த எலிக்காய்ச்சல். பெரும்பாலான வளர்முக நாடுகளில் எலிக்காய்ச்சல் ஒரு பொது சுகாதார பிரச்சினையாக விளங்குகின்றது.

இந்நோய் 1886 ஆம் ஆண்டில் தான் ஜேர்மனியின் சேரிப்புறங்களில் முதன் முதலாகத் தீவிரமாகப் பரவியது. அதனைத் தொடர்ந்தே இந்த எலிக்காய்ச்சல் குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் நிலைமை உலகில் ஏற்பட்டது. உலகில் வருடமொன்றுக்கு ஏழு மில்லியன் முதல் பத்து மில்லியன் வரையானோர் எலிக்காய்ச்சல் நோய்க்கு உள்ளாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும் உயிரிழப்போரின் எண்ணிக்கை இதுவரையும் சரியாக மதிப்பிடப்படவில்லை.

வளர்முக நாடுகளில் விவசாயிகளுக்கும் சேரிப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் எலிக்காய்ச்சல் அண்மைக்காலமாக இலங்கையில் தலைதூக்கி உள்ளது. இனிவரும் காலம் தொடர் மழைக்காலம் என்பதனால் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகரிக்குமென எச்சரிக்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சல் தொடர்பிலான விழிப்புணர்வின்மையும் இவ்விடயத்தில் மக்களின் அக்கறையின்மையுமே இலங்கையில் வருடா வருடம் ஆயிரக்கணக்கானோர் இந்நோய்க்கு உள்ளாவதுடன், அவர்களில் பலர் உயிரிழக்கவும் காரணமாகவுள்ளது.

இலங்கையை பொறுத்தவரையில் காலி, அநுராதபுரம், கண்டி, இரத்தினபுரி, குருநாகல், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, அநுராதபுரம், பொலனறுவை, குருநாகல், மொனறாகலை, இரத்தினபுரி, கேகாலை,யாழ்ப்பாணம், மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தல் அதிகமாகவுள்ளது. எலிக்காய்ச்சல் 100 பேருக்கு வந்தால் 30 பேருக்கு மரணத்தை ஏற்படுத்திவிடும். ஆங்கில மருத்துவத்தில் இதை ‘லெப்டோஸ்பைரோசிஸ்’ (Leptospirosis) என்று அழைக்கிறார்கள்.

எப்படி ஏற்படுகின்றது?

எலிக்காய்ச்சல் என்பது நீரினாலேயே பரவக்கூடியது என்பதினால் இது பெரும்பாலும் விவசாய இடங்களிலும் நகரப்பகுதிகளிலுமே அதிகமாக பரவி வருகின்றது. நீருடன் விவசாயம் சம்பந்தப்பட்டது என்பதனால் அங்கு பரவுவது சரி. நகரப்பகுதிகளில் எப்படிப் பரவும் என்ற சந்தேகம் இயல்பாகவே தோன்றும். நகர்ப்புறங்களில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணமே தெருக்களில் தண்ணீர் தேங்குவதுதான்.

தற்போது ஏரிகள், குளங்கள், குட்டைகள் என்று இயற்கை தந்த நீராதாரங்கள் அனைத்தும் அடுக்குமாடிக் கட்டிடங்களாக மாறிவிட்ட காரணத்தால், கனமழை பெய்தாலே, தண்ணீர் வடிய வழியில்லாமல், தெருக்களெல்லாம் குளங்கள் ஆகிவிடுவதைப் பார்க்கிறோம். எனவே தான் முன்பு இது கிராமத்து நோயாக இருந்தது. இப்போது இது நகரத்து நோயாகவும் மாறிவிட்டது.

கால்வாய் சீரமைப்பும், வீதி பராமரிப்பும் சரியில்லாத காரணத்தால் மழைநீர், குடிநீர், கழிவுநீர் எல்லாமே கலந்து நுளம்புகளும் எலிகளும் ‘மாநாடு’ நடத்தும் இடங்களாக வீதிகளும் அடுக்குமாடி குடியிருப்புகளும் மாறிவிட்டன. இதன் விளைவாக வரக்கூடிய பல நோய்களின் பட்டியலில் எலிக்காய்ச்சலும் இப்போது இடம்பெற்றுவிட்டது.

எலிக்காய்ச்சலைப் பரப்பும் கிருமி

‘லெப்டோஸ்பைரா’ எனும் பக்டீரியா கிருமிகள் இந்த நோயை உண்டாக்குகின்றன.இவை ஸ்போரோகீட்ஸ் எனும் இனத்தைச் சேர்ந்தவை. நுண்ணோக்கியில் பார்த்தால் ஆங்கில எழுத்து ‘எஸ்’ வடிவத்தில் ஒரு தொங்கும் தராசு ஊக்கைப்போல இவை காட்சி தரும். இந்த பக்டீரியாவில் இரண்டு வகைகள் உள்ளன.1. லெப்டோஸ்பைரா இன்டிரோகன்ஸ் (Leptospira interrogans).2. லெப்டோஸ்பைரா பைஃபிளக்சா (Leptospira biflexa). இவற்றில் இரண்டாவது இனம் சாதுவானது.

முதல் வகையினால் பாதிக்கப்படுபவர்களாக எலி நடமாட்டம் அதிகமாக உள்ள இடங்களில் வாழ்வோர் ,விவசாயிகள் மற்றும் பண்ணை வேலை ஆட்கள்,ஆடு, மாடு வளர்ப்போர் மற்றும் மேய்ப்போர், மீன் பிடிப்போர், தோட்டத் தொழிலாளிகள்,விலங்கினக் காப்பாளர்கள், கால்நடைப் பணியாளர்கள், பால் பண்ணைகளில் பணிபுரிவோர், வளர்ப்புப் பிராணிகளை வளர்ப்போர், சாக்கடை மற்றும் கழிவு நீரைச் சுத்தம் செய்வோர் உள்ளனர்.

எப்படிப் பரவும் ?

லெப்டோஸ்பைரா’ எனும் பக்டீரியா எலிகள் மற்றும் பெருச்சாளிகள் மூலம் பரவுவதுதான் அதிகம். என்றாலும், ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை போன்ற பல விலங்குகளிடமும் இந்தக் கிருமிகள் காணப்படுவது உண்டு. இவற்றின் சிறுநீரில் இந்தக் கிருமிகள் வெளியேறுவது வழக்கம். கனமழை பெய்யும் இடங்களில் வடிகால் அமைப்பு சரியில்லை என்றால், மழை நீர் வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கும். வீட்டில் வாழும் எலிகள் அந்தத் தண்ணீருக்கு வரும். அப்போது எலிகளின் சிறுநீர் அதில் கலந்துவிடும். காலில் காலணி அணிவது போன்ற தகுந்த பாதுகாப்பு இல்லாமல் தேங்கிய தண்ணீரிலும் மண் சகதியிலும் மக்கள் நடக்கும்போது, பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் புகுந்துவிடும்.

கிராமப் புறங்களை பொறுத்தவரையில் குளம், குட்டை, வாய்க்கால் ,நீர் நிலைகளில் தான் மக்கள் குளிப்பார்கள். இவற்றை எலிகள் மற்றும் பெருச்சாளிகள் ஆடு, மாடு, நாய், பூனை, பன்றி, குதிரை போன்றவையும் நீர் அருந்த பயன்படுத்தும். அத்துடன் இவ்வாறானவற்றில் சிலர் தமது இந்த விலங்கினங்களை குளிப்பாட்டுவார்கள். இதனால் இவற்றின் சிறுநீர் இதில் கலந்திருக்கும்.

அந்த சிறுநீரிலுள்ள கிருமிகள் குளிப்பவரின் கண், மூக்கு, வாய் வழியாக நுழைந்து, அங்குள்ள சிலேட்டுமப் படலத்தைத் துளைத்துக் கொண்டு உடலுக்குள் நுழைந்துவிடும். அவர்களுக்கும் நோய் பரவும். இது உடலுக்குள் நுழைய பாதங்களில் உள்ள சிறு கீறல் அல்லது சிராய்ப்பு போதும், . விவசாய வேலை செய்யும் கிராம மக்கள் பலருக்கும் சேற்றுப்புண் இருக்க அதிக வாய்ப்புண்டு. இதன் வழியாகவும் எலிக்காய்ச்சல் கிருமிகள் உடலுக்குள் பரவிவிடும்.

இந்த எலிகள் உணவுப் பண்டங்களை தீண்டுவதால் நோய்க் கிருமி தொற்றலாம். உணவு பண்டங்களில் சிறுநீர் கழிப்பதால், வீடுகளில் உள்ள நீர்த் தாங்கிகளில் எலிகள் இறக்கலாம் ,அல்லது சிறுநீர் கழிக்கலாம். இவ்வாறும் இந்த நோய் வரலாம். இப்படிப் பல வழிகளில் நம் உடலுக்குள் நுழையும் எலிக்காய்ச்சல் கிருமிகள் அதற்கான அறிகுறிகள் 5 முதல் 12 நாட்களுக்குள் வெளிப்படும். இருப்பினும் இக்கிருமித் தொற்றுக்கு உள்ளான சிலருக்கு எந்தவொரு அறிகுறியும் கூட வெளிப்படாது. இந்த நோயானது மனிதரில் இருந்து மனிதருக்குத் தொற்றுவதில்லை.

அறிகுறிகள் என்ன?

கடுமையான குளிர் காய்ச்சல், தலைவலி, கண்கள் சிவப்பது, தாங்க முடியாத தசைவலி, உடல்வலி, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி, கடும் மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுதல், சிறுநீருடன் இரத்தம் கலந்து வெளியேறுதல், சிறுநீர் வெளியேறுவது குறைதல், வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் ஒரு வாரம் வரை தொல்லை கொடுக்கும்.

இவற்றில் கண்கள் சிவப்பது ஒரு முக்கியமான அறிகுறி. பலருக்கும் இத்துடன் நோயின் அறிகுறிகள் மறைந்து, நோய் குணமாகிவிடும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய் தீவிரமடையும். நோய்க் கிருமிகள் பாதிக்கப்பட்ட நபரின் ரத்தத்தில் பயணம் செய்து, கல்லீரல், சிறுநீரகம், நுரையீரல், இதயம், இரைப்பை, மூளை போன்றவற்றுக்குப் பரவி, அந்தந்த உறுப்புகளையும் பாதிக்கும். அப்போது அடுத்தகட்ட அறிகுறிகள் தோன்றும்.

எந்த உறுப்பைக் கிருமிகள் பாதிக்கின்றனவோ அதைப் பொறுத்து அறிகுறிகள் தோன்றும். எடுத்துக்காட்டாக, கல்லீரல் பாதிக்கப்பட்டவருக்கு, மேற்சொன்ன அறிகுறிகளுடன் மஞ்சள் காமாலை ஏற்படும். கல்லீரல் வீக்கமடையும். சிறுநீரகம் பாதிக்கப்பட்டால், சிறுநீர் பிரிவதில் பிரச்சினை உண்டாகும். அப்போது கால், கை, முகம், வயிறு வீங்கும். மூளை பாதிக்கப்பட்டால், மூளைக் காய்ச்சலுக்கு உரிய எல்லா அறிகுறிகளும் தோன்றும். நுரையீரல் பாதிக்கப்படும்போது நிமோனியா நோய் வந்து, இருமல், இளைப்பு வரும். இரைப்பை பாதிக்கப்படும்போது ரத்த வாந்தி வரும். குடல் பாதிக்கப்பட்டால் மலத்தில் ரத்தம் வெளியேறும். இது இதயத்தைத் தாக்கினால், நெஞ்சுவலி, மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

இந்த நோய் கடுமையாக பாதிக்கப்பட்டவருக்கு கல்லீரலும் சிறுநீரகமும் மோசமாகும். இதற்கு ‘வியில்ஸ் நோய்’ என்று பெயர். மஞ்சள் காமாலைதான் இதன் முக்கிய அறிகுறியாக இருக்கும். சிலருக்கு ரத்த உறைவுக் கோளாறுகளும் சேர்ந்து கொள்ளும். இந்தக் கிருமிகள் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இவைதான் ரத்தம் உறைவதற்கு உதவும் முக்கிய அணுக்கள். இவற்றின் எண்ணிக்கை குறையும் போது, பல் ஈறு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர்ப் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும்.

என்ன சிகிச்சை ?

இணையக அணுக்கள் பரிசோதனை’ (Microscopic Agglutination Test – MAT) எலிக் காய்ச்சலை உறுதிசெய்ய உதவுகிற முக்கியமான பரிசோதனை. இத்துடன் பொதுவான ரத்தப் பரிசோதனைகள், சிறுநீர்ப் பரிசோதனைகள், கல்லீரலுக்குரிய பரிசோதனைகள், சிறுநீரகப் பாதிப்பை அறியும் பரிசோதனைகள், ஐஜிஎம் எலிசா பரிசோதனை (IgM ELISA Rapid Test), பி.சி. ஆர் பரிசோதனை (Real time DNA PCR Test), முதுகுத் தண்டுவட நீர்ப் பரிசோதனை ஆகியவை இந்த நோயை உறுதி செய்யவும் இதன் பாதிப்புகளைத் தெரிந்து கொள்ளவும் உதவுகின்றன.

இந்த நோய்க்கு பலதரப்பட்ட நோய்முறி மருந்துகள் உள்ளன. நோயின் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு சென்று விட்டால் இதைக் குணப்படுத்திவிடலாம். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் முறைப்படி மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

மேலும், கல்லீரல், சிறுநீரகம் போன்றவற்றிலும் பாதிப்பு இருந்தால், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படும். ஆரம்பகட்ட அறிகுறிகள் சாதாரண வைரஸ் காய்ச்சல் போலவே இருப்பதால், பெரும்பாலானோர் நோயைச் சரியாகக் கவனிக்கத் தவறுகின்றனர்.

மேலும், இந்த நோயின்போது காமாலை ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், அதை சாதாரண மஞ்சள் காமாலை என்று நினைத்து வீட்டுச் சிகிச்சைகளில் இறங்கி விடுகின்றனர். இதனால், இந்த நோய்க்கான முறையான சிகிச்சை உடனே கிடைக்க வழியில்லாமல், நோயை அதிகப்படுத்திக்கொள்கின்றனர்.

தடுப்பது எப்படி?

வீடுகளிலோ வீதிகளிலோ நீரை தேங்கவிட வேண்டாம்.வயல் வேலை மற்றும் தோட்ட வேலைகளுக்குச் செல்லும்போது கை உறை அணிவது, பாதத்தை மூடி காலணி அணிவது போன்ற தகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டும். குளம், குட்டை, நீர் தேங்கி நிற்கும் இடங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும். அசுத்த தண்ணீரில் குளிக்கவோ அசுத்த தண்ணீரை குடிக்கவோ கூடாது.

முக்கியமாக, மழைக்காலங்களில் வெறுங்காலோடு நடக்க வேண்டாம். மண் சகதியில் வெறுங்காலை வைக்கக் கூடாது. வீட்டிலும் வயலிலும் எலி மற்றும் பெருச்சாளிகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் தண்ணீரைக் கொதிக்கவைத்து, ஆற வைத்துக் குடிக்க வேண்டும். காய்கறி, பழங்களை நன்கு கழுவிச் சுத்தம் செய்த பிறகே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

சுய சுத்தம் மிக முக்கியம். குறிப்பாக, கைகளையும் பாதங்களையும் சோப்பு போட்டுக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.கை, கால்களில் சேற்றுப் புண், சிராய்ப்புகள், காயங்கள் இருந்தால் உடனடியாக சிகிச்சை பெற்று குணப்படுத்திக்கொள்ள வேண்டும்.

வீட்டில் அழுகிய உணவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி விட வேண்டும். இது எலிகளின் நடமாட்டத்தைக் குறைக்கும். அத்துடன் குடிநீரில் குளோரின் கலந்து பயன்படுத்துதல், காய்ச்சி வடிகட்டிய குடிநீரை அருந்துதல், நீச்சல் குளங்களில் குளோரினேஷன் செய்தல், குடிநீர் குழாய்களில் கசிவு இல்லாதவாறு பராமரித்தல், எலிகளை அழித்தல், மூலம் எலிக்காய்ச்சலிலிருந்து எம்மையும் எமது எதிர்கால சந்ததியினரையும் பாதுகாக்க முடியும்.

எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கு பீடை நாசினிகள், எலிப் பொறிகள், எலி வலைகள் என்பவற்றைப் பயன்படுத்தலாம். அத்தோடு எலிகளை வேட்டையாடும் பாம்பு, ஆந்தை, மற்றும் ஓனான்கள் என்பற்றைக் கொல்வதைத் தவிர்ப்பதும் பாரம்பரிய முறைகளைப் பாவிப்பதும் இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பெரிதும் உதவும்.

இது ஒரு மோசமான நோய். மரணத்தின் வாசலுக்கே அழைத்துச் சென்றுவிடும்.சரியான சிகிச்சை கிடைத்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்புண்டு. இல்லையென்றால், உயிரிழப்பு ஏற்படும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட பலர் என்ன நோய் எனத்தெரியாது பல கை வைத்தியங்களைச் செய்துவிட்டு, நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற செல்வார்கள். அப்போது சிகிச்சை பலனளிக்காமல் பலரும் உயிரிழக்க நேரிடுகின்றது.

எனவே, தற்போது மழைக்காலம் ஆரம்பித்து விட்டதனால் சந்தேகத்திற்கிடமான நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகிலுள்ள வைத்தியசாலையை நாடி மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை பெற்றுக் கொள்வதே உயிர் காக்கும்.

Share.
Leave A Reply