தமிழகத்தின் பட்டாசு ஆலையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், அங்கு மீட்புப் பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, கோட்டூர் – அருப்புக்கோட்டை வீதியில் உள்ள பொம்மையாபுரத்தில், சிவகாசியைச் சேர்ந்த நபருக்கு சொந்தமான பட்டாசு ஆலையிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

வழமைபோன்று இந்த ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகளில் சுமார் 50 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில், இன்று (04) காலை 9.30 மணியளவில், பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருள் கலக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வேளை திடீர் உராய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், பட்டாசு ஆலையில் பயங்கர வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து காரணமாக பட்டாசு ஆலையின் 4 அறைகள் தரைமட்டமாகின.

இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு, பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிலரில் நிலை கவலைக்கிடமாக உள்ளதாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply