1948 இல் யூத குடியேற்றவாசிகளுக்காக கொள்ளையடிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் இஸ்ரேல் நிறுவப்பட்ட பதினொரு ஆண்டுகளுக்குப் பிறகு, வளைகுடா நாடுகளில் பணிபுரியும் ஆர்வமுள்ள பலஸ்தீன நிபுணர்களின் குழு 1959 இல் அல் பத்தாஹ் என்ற அரசியல் மற்றும் இராணுவ அமைப்பை உருவாக்கியது.
அல்ஜீரிய சுதந்திரப் போராட்டத்தின் வகை சார்ந்த ஆயுதப் போராட்டத்தின் மூலம் பலஸ்தீனத்தை இஸ்ரேலிடமிருந்து விடுவிப்பதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.
கலீல் அல்-வசீர், யசிர் அரபாத், சாலாஹ் கலாப் ஆகியோர் இதன் ஸ்தாபர்கள். காலித் அல்-ஹசன் மற்றும் பிறர், பின்னர் பலஸ்தீன விடுதலை அமைப்பில் (பி. எல். ஓ.) முக்கிய பங்கு வகித்தனர்.
1980 களின் பிற்பகுதியில் இந்த இயக்கம் இராஜதந்திர வழிகள் மூலம் இரு நாட்டு தீர்வைத் தேடத் தொடங்கியது. மேலும் அதன் தலைவர்கள் தான் ஒஸ்லோ சமாதான முன்னெடுப்புகளிலும் முக்கிய பங்கு வகித்தனர். இதுவே துரோகத்தனமான பலஸ்தீன அதிகார சபையையும் நிறுவியது.
பத்தாஹ் ஆதிக்கம் செலுத்திய பலஸ்தீன அதிகார சபை, 65 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மேற்குக் கரையில் அமெரிக்காவால் வடிவமைக்கப்பட்ட சதித்திட்டத்துக்குரிய பலஸ்தீன எதிர்ப்பை நசுக்கும் வகையில் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் உதவும் முகமாக பலஸ்தீனர்களைக் கொல்லத் தொடங்கியுள்ளது.
இஸ்ரேல் ஒரு வருடத்திற்கும் 4 மாதங்களுக்கும் மேலாக பலஸ்தீனர்களை கொன்று குவித்துவரும் நிலையில் அமெரிக்க – இஸ்ரேலிய விசுவாசியாக “தேர்ந்தெடுக்கப்பட்ட” மஹ்மூத் அப்பாஸ், தனது இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க எஜ மானர்களை சமாதானப்படுத்தும் வகையில் ஜெனினில் உள்ள முக்கிய எதிர்ப்பு போராளிகளை கொடூரமாகக் கொலை செய்தார்.
இதற்காக அவர் தனது அமெரிக்க பயிற்சி பெற்ற 2,000 வலுவான படைகளைப் பயன்படுத்தினார்.
அப்பாஸின் படைவீரர்கள் முதலில் ஜெனினில் தங்கள் கொலைகளை மையப்படுத்தினர். மேலும் நப்லுஸ் மற்றும் துலாரே உள்ளிட்ட பிற பகுதிகளுக்கும் பின்னர் விரிவுபடுத்தினர்.
ஆயுதமேந்திய பலஸ்தீன எதிர்ப்புக் குழுக்களை முற்றிலுமாக அழிப்பதை நோக்கமாகக் கொண்டு அவர்கள் செயல்பட்டனர். வடக்கு மேற்குக் கரையில் இஸ்ரேல் எந்த எதிர்ப்பும் இல்லாமல் தனது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்த இது வழி வகுத்தது.
அமெரிக்கா நீண்ட காலத்திற்கு முன்பே இத்தகைய ஒடுக்குமுறையை வேண்டி நின்றது. இந்த அமெரிக்க முன்முயற்சி ஜோர்டானில் உள்ள அமெரிக்க பயிற்றுவிப்பாளர்களால் சிறப்பு பயிற்சி பெற்ற விசேட பலஸ்தீன அதிகார சபையின் பாதுகாப்பு படைகள் என்ற பிரிவை உருவாக்க ஏதுவாய் அமைந்தது. தற்போது ஜெனினில் நடந்து வரும் நடவடிக்கைகளை துல்லியமாக மேற்கொள்வதும் இந்த பிரிவுதான்.
1974 ஆம் ஆண்டில் பி.எல்.ஓ தனது 10 அம்ச திட்டத்தை முன் வைத்த போது இஸ்ரேலை அங்கீகரித்து, துண்டிக்கப்பட்ட பலஸ்தீன அரசுக்கு ஈடாக ஒரு அரசியல் தீர்வை நோக்கி செல்ல வழி வகுத்தது. அப்பாஸ் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான எல்லா வகையான ஆயுத எதிர்ப்பையும் கைவிடுவதை ஆதரித்தார்.
முதல் இன்டிபாடாவை (1987 -1991) நசுக்க இஸ்ரேல் தவறியபோது, அது அதன் விரிவாக்க மற்றும் குடியேற்றக் கொள்கைகளைப் பாதுகாக்கும் ஒரு அரசியல் பாதையை ஏற்றுக் கொண்டது.
இந்த பாதை 1993 ஒஸ்லோ உடன்படிக்கைகளில் உச்சக்கட்டத்தை அடைய உதவியது. பலஸ்தீனர்கள் சார்பாக வெள்ளை மாளிகையின் புல்வெளியில் அப்பாஸ் இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அரபாத் மற்றும் அப்பாஸ் தலைமையிலான பலஸ்தீன பிரதிநிதிகள் ஆரம்பத்தில் தங்கள் முக்கிய தனித்துவ அடையாளத்தையும் பின்னர் வலுவான செல்வாக்கையும் சரணடைய வைத்தனர்.
இது பலஸ்தீனத் தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பரப்பில் 78 சதவீதத்தை சியோனிச ஆட்சியின் அங்கீகாரத்துக்குள் கொண்டு வந்தது.
இதற்கு ஈடாக, இஸ்ரேல் எந்தப் பயனும் அற்ற ஒரு அரசியல் செயல்முறையில் ஈடுபடுவதாக மட்டுமே உறுதியளித்தது. இது 1999 இற்குள் ஒரு சுதந்திர பலஸ்தீன அரசுடன் முடிவடைந்திருக்க வேண்டும். ஆயினும்கூட மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இது நடக்கவில்லை.
ஒஸ்லோவில் சியோனிச அரசு இரு நாட்டுத் தீர்வு என்று அழைக்கப்படுவதைக் கொன்று விட்டது அது மட்டுமல்லாமல், மேற்குக் கரையில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை ஆறு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
1993 இல் சுமார் 115,000 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று 750,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் “அகண்ட இஸ்ரேல்” இற்கான திட்டங்களும் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
மூன்று தசாப்தங்களாக ஒஸ்லோ உடன்படிக்கைகள் குடியேற்ற காலனித்துவத்தையும் நிறவெறியையும் நிலைநிறுத்தும் ஒரு தவறான “அமைதி கட்டமைப்பை” உருவாக்கி உள்ளதே தவிர வேறொன்றையும் வழங்கவில்லை. ஒஸ்லோ உடன்படிக்கைகள் பலஸ்தீன மக்களை தோல்வியடையச் செய்து, சமாதானத்தின் அடிப்படை அர்த்தத்தை சிதைத்தன.
2015 சர்வதேச நெருக்கடி குழு அறிக்கையின்படி, பெரும்பாலான இஸ்ரேலிய அதிகாரிகள் அப்பாஸை தங்கள் மிக முக்கியமான “மூலோபாய சொத்தாக” கருதுகின்றனர். அவரது தலைமைத்துவ பாணி ஒப்பீட்டளவில் துடிப்பான பலஸ்தீன தேசிய இயக்கத்தை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் ஒரு துணை நிறுவனமாக மாற்றியது.
இதை பெரும்பாலானவர்கள் “ஐந்து நட்சத்திர ஆக்கிரமிப்பு” என்று வர்ணிக்கின்றனர். ஏனெனில் இது சியோனிச ஆட்சியை ஒரு ஆக்கிரமிப்பு சக்தியாக வெளிக்காட்டும் தோற்றத்தில் இருந்து விடுவித்தது.
பலஸ்தீன பாதுகாப்பு படைகளுக்கான பிரதான பாதுகாப்புக் கோட்பாடு பலஸ்தீன மக்கள் மையங்களை காவல் காப்பதும் மற்றும் பாதுகாப்பதும் ஆகும்.
ஆனால் அப்பாஸ் தனது பதவிக் காலத்தில் அதை ஒரு மிருகத்தனமான பாதுகாப்புப் படையாக மாற்றுவதற்கான அமெரிக்காவின் கட்டளையை ஏற்றுக் கொண்டார்.
பலஸ்தீன மக்கள் மையங்களை காவல் காப்பதற்கு பதிலாக இது இஸ்ரேலிய குடியேற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு இராணுவத்தை முழுமையாகப் பாதுகாக்கின்றது.
அமெரிக்கா மற்றும் சியோனிச ஆட்சியுடன் ஒருங்கிணைந்து, அப்பாஸ் ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கினார். அதன் பிரதான நோக்கம் ஆக்கிரமிப்புக்கு எதிரான எந்தவொரு எதிர்ப்பையும் அல்லது நடவடிக்கைகளையும் முறியடிக்க இஸ்ரேலிய இராணுவத்துடன் பாதுகாப்பு ரீதியாக ஒருங்கிணைந்து செயற்படுவதாகும்.
2006 சட்டப்பேரவைத் தேர்தலில் ஹமாஸ் வெற்றி பெற்றபோது, அப்பாஸ், அமெரிக்கர்கள் மற்றும் இஸ்ரேலியர்களுடன் ஒருங்கிணைந்து, ஹமாஸ் தலைமையிலான அரசாங்கம் செயல்படுவதைத் தடுத்தார்.
உண்மையில், அப்பாஸின் பாதுகாப்புப் படைகள்தான் மீண்டும் அமெரிக்கர்களுடன் இணைந்து, 2007அ ல் காஸாவில் ஹமாஸின் அரசாங்கத்தை கவிழ்க்க முயன்றன. ஆனால், ஹமாஸால் அது முறியடிக்கப்பட்டது. காஸாவை ஹமாஸ் கைப்பற்றியது. இதன் விளைவாக இரண்டு தனித்தனி பலஸ்தீன அரசுகள் உருவாகின.
ஆயுதமேந்திய மற்றும் மக்கள் போராட்டத்தை இணைக்கும் இந்த புதிய எதிர்ப்புக் குழுக்களின் எழுச்சி, முந்தைய உத்திகளை விட மிகவும் வெற்றிகரமானது என்று இன்று நிரூபிக்கப்படலாம்.
இந்த அண்மைய எழுச்சிக்கு முன்னதாக அதிகார சபை தேர்தல்களை இரத்துச் செய்தது. காரணம், தேர்தலின் மூலம் அது எதிர்பார்த்த வெட்கக் கேடான தோல்வி. ஜெருசலேமில் பலஸ்தீனர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை இஸ்ரேல் இரத்துசெய்ததை சாட்டாக வைத்து பலஸ்தீன அதிகார சபை தேர்தல்களை இரத்து செய்தது.
இந்த வரலாற்று தருணம் ஜெனின் படைப்பிரிவுகள் மற்றும் பிற எதிர்ப்புக் குழுக்களை உருவாக்குவதற்கான சூழலை உருவாக்கியது. இதில் பிரபலமான “லயன்ஸ் டென்” அடங்கும். இது இன்டிஃபாடாவின் முந்தைய அலைகளிலிருந்து ஒரு மாற்றத்தைக் குறிக்கிறது. முக்கியமாக ஆயுதமேந்திய எதிர்ப்பை இது நம்பியுள்ளது.
ஆக்கிரமிப்புப் படைகள் மற்றும் ஆயுதமேந்திய குடியேற்ற வாசிகள் ஆகிய இரு பிரிவினருக்கும் எதிராக நேரடி மோதல்களுக்கு இந்தக் குழு அழைப்பு விடுக்கிறது. அதன் அழைப்புகள் கவனிக்கப்படுகின்றன. புதிய எதிர்ப்பு இயக்கம் ஒரு முழு இன்டிபாடாவாக மாறுமா என்பதைப் பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
2017 இல் வெளிநாட்டில் உள்ள பலஸ்தீன ‘பிரபல மாநாடு’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்ட பின் முதல் தடவையாக நேரடியாகவும் வன்மையாகவும் அது பலஸ்தீன அதிகார சபையை கண்டித்துள்ளது. மேற்குக்கரை பிரதேசத்தில் அதிகார சபையின் செயற்பாடுகளே இதற்கு காரணம்.
பலஸ்தீன இளைய தலைமுறையினர் அவமானப்படுத்தப்படுவது, சித்திர வதை செய்யப்படுவது, மஹ்மூத் அப்பாஸுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்ப வற்புறுத்தப்படுவது, அவர்கள் ஜீவ ரவைகளால் சுடப்படுவது என எல்லாமே சிவப்புக் கோட்டை தாண்டி உள்ளன.
இஸ்ரேல் இராணுவத்துடனான ஒத்துழைப்புடன் கூடிய பாதுகாப்பு போக்கை தனது பாதையாகத் தெரிவு செய்துள்ள பலஸ்தீன அதிகார சபை தலைமைபீடத்துடன் எந்த வகையிலும் இணைந்து செல்ல முடியாது என்ற ஒரு இக்கட்டன நிலையை இது ஏற்படுத்தி உள்ளது.
மக்களின் உயிர்களைப் பறிகொடுத்து இஸ்ரேல் தரப்புடன் இணைந்து போவதை நிரந்தர மூலோபாயமாகக் கொண்டுள்ள இந்தத் தரப்புடன் பலஸ்தீன மக்கள் இணங்கிச் செல்வதென்பது முடியாத ஒரு விடயமாகவே உள்ளது.
-லத்தீப் பாரூக்-