Toyosu மீன் மார்கெட் உலகிலேயே மிகப் பெரிய மீன் சந்தையாகக் கருதப்படுகிறது. இங்குத் தினமும் அதிக விலைக்கு டூனா மீன்கள் ஏலம் விடப்படுகின்றன.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள ஒரு உணவகம் ஒரு பைக்கின் அளவிலும் எடையிலும் உள்ள ப்ளூஃபின் டூனா (Bluefin Tuna) மீனை 207 மில்லியன் யென் கொடுத்து ஏலத்தில் வாங்கியுள்ளது.

டோக்கியோவின் Toyosu மீன் மார்கெட்டில் இந்த ஏலம் நடைபெற்றுள்ளது. இதுவரை இந்த மார்கெட்டில் ஏலம் எடுக்கப்பட்டதிலேயே இரண்டாவது அதிக விலை கொடுக்கப்பட்டது இந்தமுறைதான் என்கின்றனர்.

276 கிலோ எடையுள்ள இந்த மீனை ஒனோடெரா க்ரூப் என்ற உணவகம் வாங்கியுள்ளது. இவர்களுக்கு ஜப்பான் உள்ளிட்ட 3 நாடுகளில் பல கிளைகள் உள்ளன. இந்த மீனுக்கு இந்திய மதிப்பில் 11.25 கோடி ரூபாய் விலை கொடுத்துள்ளனர்.

வருடத்தின் முதல் ஏலத்தில் டூனா மீனை வாங்குவது ஒனோடெரா நிறுவனத்தால் ராசியாகப் பார்க்கப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளாக ஏலத்தில் அதிக விலை கொடுக்கும் நிறுவனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு 114 மில்லியன் யென்களுக்கு ஏலம் எடுத்துள்ளது.

1999 முதல் நடைபெற்று வரும் இந்த ஏலத்தில் மிக அதிகபட்சமாக 2019 ஆம் ஆண்டு 278 கிலோ எடையுள்ள மீனுக்கு 333.6 மில்லியன் யென் கிட்டத்தட்ட 18 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது.

Toyosu மீன் மார்கெட் உலகிலேயே மிகப் பெரிய மீன் சந்தையாகக் கருதப்படுகிறது. இங்குத் தினமும் அதிக விலைக்கு டூனா மீன்கள் ஏலம் விடப்படுகின்றன. டூனா மீன்கள் அவற்றின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்காக மதிப்புமிக்கதாக உள்ளன. அதிகமாக வேட்டையாடப்பட்டு, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதும் அதிக விலைக்கு விற்கப்படுவதற்கான காரணமாகக் கூறப்படுகிறது.

ப்ளூஃபின் டூனா ஜப்பானின் கலாச்சாரத்தில் இணைந்திருக்கிறது. ஜப்பானின் பாரம்பரிய உணவுகளான சுஷி, சஷ்மி போன்ற உணவுகள் உலகம் முழுவதும் விரும்பப்படுவதால் பெரிய உணவகங்களால் பெருமளவில் வாங்கப்படுகிறது.

 

Share.
Leave A Reply