கோவையில் தனியார் கலைக்கல்லுாரியில் இளங்கலை மூன்றாமாண்டு படித்து வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர், ஒருவர் தனது பிறந்தநாளன்று தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு அவர் பதிவு செய்ததாக கூறி, ஒரு ஆடியோ, உள்ளுர் ஊடகங்களில் வெளியானது. அதில் சக மாணவர்கள் தன்னை துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருப்பூரை சேர்ந்த நாகராஜ் என்பவரின் இரண்டாவது மகன் சத்யநாராயணன் (வயது 21). இவர் கோவையிலுள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லுாரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். தினமும் திருப்பூரிலிருந்து பஸ்சில் கல்லுாரிக்குச் சென்று வந்துள்ளார்.
ஜனவரி நான்காம் தேதியன்று இவருக்குப் பிறந்த நாள். அன்று காலையில் மாடியிலுள்ள இவரது அறையிலிருந்து வெகுநேரமாகியும் வராததால் அவருடைய பெற்றோர் சென்று பார்த்தபோது, அந்த அறைக்குள் தற்கொலை செய்து இறந்து கிடந்துள்ளார்.
மாணவரின் தற்கொலை தொடர்பாக நல்லுார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில், சத்யநாராயணனின் தந்தை நாகராஜ் புகாரில் கூறிய விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதில், ”கடந்த ஜனவரி 3-ஆம் தேதியன்று கல்லுாரியிலிருந்து திரும்பிய எனது மகன் சோகமாக இருந்தான்.
தன்னை சக மாணவர் ஒருவர் (பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் சேர்ந்து, கெட்ட வார்த்தைகளால் திட்டி, அடித்து துன்புறுத்தி வருவதாக ஏற்கனவே என்னிடம் கூறியிருந்தான்.
ஜனவரி 3-ஆம் தேதியன்றும் தன்னை அவர்கள் வகுப்பறையில் அடித்ததாகக் கூறினான். நான் மறுநாள் கல்லுாரிக்குச் சென்று புகார் கொடுக்கலாம் என்று கூறியிருந்தேன். அதற்குள் தற்கொலை செய்து கொண்டான். தற்கொலைக்கு முன்பு காரணத்தை அலைபேசியில் ஆடியோவாக பதிவு செய்துள்ளான்” என்று நாகராஜ் தெரிவித்துள்ளார்.
சத்யநாராயணன் தற்கொலை செய்வதற்கு முன் ஆடியோ பதிவு செய்துள்ளார் என அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.
அந்த ஆடியோ பதிவில் 3 நிமிடங்கள் அவர் பேசியுள்ளார். அழுகையுடனும், பெருமூச்சுடனும் துவங்கும் அந்த ஆடியோவில், பெரும்பாலான நிமிடங்கள் அவர் அழுது கொண்டே இடையிடையே பேசியிருக்கிறார்.
ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டு, அதிலிருந்து கல்லுாரிக்கு வரவே பயமாக இருக்கிறது என்று பேசியுள்ளார்.
பெண் பேராசிரியருக்கு பேசி பதிவு செய்த ஆடியோவை, அவர் அந்த பேராசிரியருக்கு அனுப்பவில்லை என்று மாணவரின் உறவினர் ஒருவர் தெரிவித்தார்.
பிபிசி தமிழிடம் பேசிய சத்யநாராயணனின் உறவினர் வடிவேல், ”துன்புறுத்தல் குறித்து கல்லுாரியில் புகார் கொடுத்துள்ளான். தொடர் அச்சுறுத்தலால்தான் அவன் இந்த முடிவை எடுத்துள்ளான்.” என்றார்.
”அவன் புகார் கொடுத்தபோது, அந்த மாணவர்களிடம் மன்னிப்புக்கடிதம் மட்டுமே வாங்கியுள்ளனர். அவன் தற்கொலை செய்த பின்புதான் சஸ்பெண்ட் செய்துள்ளனர். ஓர் உயிர் போனதைப் பற்றி யாருமே கவலைப்படுவதாகத் தெரியவில்லை.” என்றும் கூறினார்.
‘விசாரணையைத் துவக்கியுள்ளோம்’
இதுகுறித்து நல்லுார் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, ”முதற்கட்டமாக தற்கொலை என்பதற்கான வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாரும் கைது செய்யப்படவில்லை. தற்கொலை திருப்பூரில் நடந்திருந்தாலும் அதற்கான காரணங்கள் குறித்து, கோவையில் அவர் படித்து வந்த கல்லுாரியில்தான் விசாரிக்க வேண்டியுள்ளது. விசாரணையைத் துவக்கியுள்ளோம்.” என்றார்.
மேலும் பேசிய அவர், ”அவசரப்பட்டு யாரையும் கைது செய்ய முடியாது. அந்த மாணவன் படித்த கல்லுாரியில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் மத்தியில் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். கல்லுாரி மாணவர்கள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தீர விசாரித்த பின்பே எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும். ” என்றார்.
மாணவன் சத்ய நாராயணன் தற்கொலை செய்த பின்பு, கல்லுாரி நிர்வாகம் தரப்பில் ஊடகங்களிடம் தரப்பட்டுள்ள விளக்கத்தில், ”மாணவன் சத்யநாராயணன் தன்னை சில மாணவர்கள் தொடர்ந்து தொந்தரவு செய்திருப்பதாக புகார் செய்திருந்தார்.
புகாரை விசாரித்ததில் அது உண்மையென்று தெரியவந்து, அவரைத் தொந்தரவு செய்து வந்த 3 மாணவர்களை 15 நாட்கள் இடை நீக்கம் செய்துள்ளோம். அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.” என்று கூறப்பட்டிருந்தது.
கல்லூரி முதல்வர் சரவணன் கருத்தை பெற பிபிசி தமிழ் சார்பில் பல முறை தொடர்பு கொண்டபோது, அவரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் அழைத்துப் பதிலளிப்பார் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
– இது, பிபிசி நியூஸ்-