இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் நடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற போது, பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கட்சியின் தலைவரான மாவை சேனாதிராஜா அந்தப் பதவியில் இருந்து எப்படியோ அகற்றப்பட்டு, பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேவேளை, மாவை சேனாதிராஜா, கட்சியின் அரசியல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல, கடந்த தேர்தல்களில் கட்சிக்கு எதிராக, கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக, தேர்தல்களில் போட்டியிட்டவர்கள் அல்லது பிரசாரம் செய்தவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி நீக்கப்பட்டவர்களில், ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிட்ட பா.அரியநேத்திரனும் ஒருவர்.
ஆனால், அவருக்கு ஆதரவு வழங்கிய, அல்லது அவருக்காக பிரச்சாரம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன் மீதோ, சிறிநேசன் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கட்சிக்குள் மாவை சேனாதிராஜாவுக்கு ஆதரவாகவும், பொதுச்செயலாளர் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு எதிராகவும், கருத்துக்களை வெளியிட்டு வந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் சிவமோகன் கூட கட்சியில் இருந்து இடைநிறுத்தப்பட்டிருக்கிறார்.
ஆயினும், 2023இல் உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, தமிழரசு கட்சியின் கிளிநொச்சி வேட்பாளர்கள் அனைவரையும் சிறிதரனே தெரிவு செய்த நிலையில், அவர்களை தோற்கடிப்பதற்காக, தமிழரசு கட்சியின் இன்னொரு அணி சுயேட்சையாக களமிறக்கப்பட்டது. அந்த தேர்தல் நடைபெறாமல் போனதால், அப்பொழுது அந்த பலப்பரீட்சை நடக்கவில்லை.
அப்போது சுயேட்சையாக களமிறங்கியவர்களின் பின்னால், பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சுமந்திரன் இருந்தார் என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன.
ஆயினும் வண்டிச் சின்னத்தில் உள்ளூராட்சி தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்கள் எவரும் தமிழரசுக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரியவில்லை.
அவர்கள் சுமந்திரன் ஆதரவாளர்கள் என்பதால், அவராலேயே களமறக்கப்பட்டனர் என்பதாலேயே அவ்வாறு நீக்கப்படவில்லை என்ற கருத்துக்கள் உள்ளன.
தமிழரசு கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவுகள், அந்த கட்சியின் சொந்த முடிவுகள். அதில் யாரும் தலையிட முடியாது. அவர்கள் விரும்பிய முடிவை எடுக்கலாம், எடுக்காமல் போகலாம்.
ஆனால், அந்தக் கட்சி மக்களின் அங்கீகாரத்தை பெறாதவரை தான் அப்படிக் கூறிக் கொள்ளலாம்.
மக்களின் அங்கீகாரத்தை பெற்ற ஒரு கட்சி, தங்களை ஜனநாயகம் நிரம்பிய கட்சி என்று கூறுகின்ற ஒரு கட்சியின் தலைவர்கள், இதனை உட்கட்சி விவகாரம் என கூற முடியாது.
அண்மையில் தமிழகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. அந்த கட்சியின் நிறுவுநரான மருத்துவர் ராமதாஸ் இளைஞர் அணி தலைவராக தனது மகள் வழிப் பேரனை நியமிக்கிறார். அதனை அவர் அறிவித்த போது மகன் அன்புமணி மேடையில் இருந்து கொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.
அப்போது ராமதாஸ் “இது நான் உருவாக்கிய கட்சி, நான் சொல்வதை தான் கேட்க வேண்டும், கேட்க முடியாதவர்கள் வெளியே போகலாம்” என்று மகன் அன்புமணியை பார்த்து சொல்கிறார்.
இந்த வாக்குவாதம் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இருவரும் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
ராமதாஸ் இன்னமும் இப்படிப்பட்ட ஒரு மனோநிலையில் இருப்பதால்தான், அந்த கட்சியினால் இன்னமும் குறிப்பிடத்தக்க ஆசனங்களை கூட கைப்பற்ற முடியாத நிலையில் இருக்கிறது.
அந்த கூட்டத்தில் ராமதாஸ், இது தனது கட்சி என்றும், தான் சொல்வதை கேட்க முடியாதவர்கள் வெளியே போங்கள் என கூறுவதற்கு உரித்து உடையவராக இருக்கலாம். ஏனென்றால் அவர் அதை சொந்தக் கட்சியாகவே நடத்துகிறார்.
ஆனால், தமிழரசுக் கட்சி அப்படி யாருடைய சொந்தக் கட்சியும் அல்ல. அப்படிக் கூறினால், இந்த கட்சியை உருவாக்கிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் கூட அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்.
ஏனென்றால் அவருடன் கூட சேர்ந்து, இந்த கட்சியை உருவாக்கியவர்களில் நாகநாதன், வன்னியசிங்கம் போன்றவர்களும் இருந்தனர்.
இலங்கை தமிழரசுக் கட்சி தங்களை அதிகபட்ச ஜனநாயகம் கொண்ட கட்சி என அடிக்கடி சொல்லிக் கொள்வது உண்டு. குறிப்பாக இரா.சம்பந்தன் உயிருடன் இருந்த காலகட்டத்தில், அதனை பலமுறை கூறியிருக்கிறார்.
இது ஜனநாயகம் நிரம்பிய கட்சி, இதில் யாரும் எப்படியும் கருத்து தெரிவிப்பதற்கு உரிமை உண்டு என அவர் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறார்
கட்சிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தவர்களும் கூட, மத்திய குழுவில் இருக்கிறார்கள் என்றும் கூட பகிரங்கமாக சிலர் கூறியிருந்தனர்.
ஆனால், இப்பொழுது அவ்வாறான மாற்றுக் கருத்துக்களை வெளியிட்டவர்கள், கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார்கள். மாற்று சிந்தனை கொண்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக களை எடுக்கப்படுகின்ற நிலை உருவாகி இருக்கிறது.
கட்சி இப்பொழுது ஜனநாயக பாதையில் இருந்து விலகி, கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரத்துவ பாதையை நோக்கி நகரத் தொடங்கி இருக்கிறது என்பதை அண்மைய மத்திய குழுக் கூட்டம் நிரூபித்திருக்கிறது.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரையில் தங்களை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்கிறது.
தமிழ் மக்களின் ஆணையை பெற்ற கட்சி என்று கூறிக் கொள்கிறது. தேர்தலில் அந்த கட்சி பெற்றுக் கொண்ட ஆசனங்கள் அதனை நிரூபித்திருக்கிறது.
ஆனால், மக்களின் ஆணையைப் பெற்ற கட்சி, மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாட்டை கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
கட்சிக்குள் சில முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், சிலருக்கு எதிராக நடந்து கொள்பவர்கள், ஓரங்கட்டி ஒதுக்கி தள்ளப்படுவது இப்பொழுது வழமையாக மாறி இருக்கிறது.
இது, ஜனநாயக சூழல் கட்சிக்குள் கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருவதை காட்டுகிறது.
இவ்வாறான நிலையை, கட்சிக்கு வாக்களித்தவர்கள் தட்டிக் கேட்க முடியாது என கூறமுடியாது. ஏனென்றால், அவர்கள் கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
அவர்கள் எந்தவொரு தனி நபருக்கும் வாக்களிக்கவில்லை. தமிழரசுக் கட்சியின் பெயருக்கும் சின்னத்திற்கும் தான், வாக்களித்தனர்.
ஆக, கட்சி மக்களுக்கு பொறுப்பு கூறும் கடப்பாட்டை கொண்டுள்ளது. கட்சியிடம் கேள்வி கேட்கும் உரிமை மக்களுக்கு இருக்கிறது.
அந்த வகையில் கட்சியின் தன்னிச்சையான போக்குகள் தொடர்பாக மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு தமிழரசுக் கட்சி பதிலளித்தே ஆக வேண்டும்.
பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தரப்பு தனித்தனியாக போட்டியிட்டதன் விளைவை நன்றாகவே அறுவடை செய்தது.
அதற்கு பின்னர் இனி இணைந்து செயல்படுவோம் என பல்வேறு தரப்புகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருகின்ற சூழலில், தமிழரசு கட்சி தமது கட்சிக்குள் முன்னெடுக்கின்ற களையெடுப்பு நடவடிக்கைகள், இப்போதைய சூழலை கெடுத்து விடும் ஆபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தமிழரசுக் கட்சி ஒரு தரப்பை பலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக உணர முடிகிறது.
இவ்வாறான நிலை, தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இணைந்து செயல்படும் முயற்சிகளுக்கு இடையூறாக அமைந்து விடும் என்ற கருத்து, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தினாலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.
அவர் கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தமிழரசுக் கட்சியை புறந்தள்ளி செயல்பட முடியாது என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
ஆனாலும் அந்த கட்சியின் போக்கு குறித்து அவர் வெளியிட்டுள்ள கவலை நியாயமானது.
ஏனென்றால் வெண்ணெய் திரளும் நேரத்தில் தாழியை உடைத்த கதையாக அமைந்து விடுமோ என்ற கரிசனை அவரிடம் தென்படுகிறது.
தமிழரசுக் கட்சியில் உருவாகி இருக்கும் நெருக்கடிகள் தீர்க்கப்பட்டால்தான் தமிழர் பிரச்சினைக்கான தீர்வைத் ஒருமித்த கருத்துடன் – ஒருமித்த நிலைப்பாட்டுடன் வலுவான ஒரு தரப்பாக முன்னெடுக்கக் கூடிய சாத்தியம் ஏற்படும்.
ஆனால், தமிழரசுக் கட்சி உள்கட்சி மோதல்களையும் முரண்பாடுகளையும் நீட்டிக்கொண்டே செல்வது, தமிழர் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளைத் தட்டிக் கழிப்பதற்கான வாய்ப்புகளையே சிங்கள ஆட்சியாளர்களுக்கு விட்டு வைக்கப் போகிறது.
-கபில்-