கனடாவின் அடுத்த பிரதமராக தமிழக வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 57) தேர்வாக வாய்ப்புள்ளது.
தற்போது கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் அனிதா ஆனந்த்தின் தந்தை தமிழகத்தைச் சேர்ந்தவர், தாய் பஞ்சாப்பை சேர்ந்தவர்.
கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோ (53) தனது பதவியை ராஜிநாமா செய்வதாக திங்கள்கிழமை அறிவித்தாா்.
நாடு முழுவதும் அவருக்கு ஆதரவு குறைந்துவருவது, அவா் மீது ஆளும் லிபரல் கட்சிக்குள்ளேயே அதிருப்தி எழுந்தது போன்ற பெரும் பின்னடைவுகளுக்குப் பிறகு அவா் இந்த முடிவை எடுத்துள்ளாா்.
மேலும், லிபரல் கட்சியின் புதிய தலைவரும் கனடா நாட்டின் புதிய பிரதமரும் மார்ச் 24 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்படுவார் என்று ட்ரூடோ அறிவித்துள்ளார்.
அனிதா ஆனந்த் யார்?
தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர் எஸ்.வி. ஆனந்த் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த மருத்துவர் சரோஜ் டி. ராம் தம்பதிக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்.
இவரது பெற்றோர்கள் கனடாவுக்கு புலம்பெயர்ந்த நிலையில், 1967 ஆம் ஆண்டு கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் அனிதா ஆனந்த பிறந்தார்.
கனடாவில் அரசியல் பட்டப்படிப்பும், பிரிட்டனில் சட்டமும் பயின்ற அனிதா ஆனந்த், 1995ஆம் ஆண்டு ஜான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன்னதாக கனடாவில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களில் சட்டத் துறை பேராசிரியராக சுமார் 25 ஆண்டுகள் அனிதா ஆனந்த் பணியாற்றியுள்ளார்.
அனிதா ஆனந்த் அரசியல் வாழ்க்கை
லிபரல் கட்சி சார்பில் முதல்முறையாக 2019 தேர்தலில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் வெற்றியை பதிவு செய்தார். அந்த ஆண்டே பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
இவர் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறை அமைச்சராக பொறுப்பேற்ற சில நாள்களிலேயே கரோனாவை உலக நாடுகள் எதிர்கொண்டது.
அனிதா ஆனந்த தலைமையிலான கொள்முதல் துறை வேகமாக செயல்பட்டதன் விளைவாக கனடாவில் கரோனாவுக்கான மருந்துகள், பரிசோதனைக் கருவிகள் மற்றும் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை. கரோனா பரிசோதனைக் கருவிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பெருமளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
2021 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனிதா ஆனந்த் மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து, கனடாவின் இரண்டாவது பெண் பாதுகாப்புத் துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
கனடாவின் ராணுவ பாலியல் வன்கொடுமை வழக்குகளின் விசாரணையை சிவில் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியின் பரிந்துரையை முழுமையாக ஏற்பதாக அனிதா அறிவித்தார்.
தொடர்ந்து, ராணுவம் மற்றும் ஆயுதப் படைகளில் பாலியல் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் பகிரங்கமாக அரசின் சார்பில் மன்னிப்பு கோரினார் அனிதா.
2024 ஆம் ஆண்டு கனடாவின் போக்குவரத்துத் துறை அமைச்சராக அனிதாவை பிரதமர் ட்ரூடோ நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில், லிப்ரல் கட்சியின் தலைவராகவும் கனடாவின் புதிய பிரதமராகவும் அனிதா ஆனந்த் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவுக்கு என்ன பயன்?
உலகில் அதிகளவிலான புலம்பெயர்ந்த இந்தியர்கள் வசிக்கும் நாடாக கனடா உள்ளது. இங்கு 18 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், காலிஸ்தான் பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்னையால் இந்தியா – கனடா இடையேயான தூதரக ரீதியான உறவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில், இந்திய பெண் ஒருவர் கனடாவின் பிரதமராகும் பட்சத்தில், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்த அதிக வாய்ப்புள்ளது.
ஆனால், ட்ரூடோ வழியை அனிதாவும் பின்பற்றினால், இருநாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் பின்னடைவு ஏற்படக்கூடும்.