”அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடா இணைய அந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்” என டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கனடாவில் அக்டோபர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் பிரதமராக இருக்கும் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக எதிர்ப்புகள் கிளம்பின.

இதனால், அவருக்கு ஆதரவு அளித்து வந்த என்.டி.பி. கட்சியும் தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. இதையடுத்து அவருக்கு நெருக்கடி அதிகரித்தது. மேலும், அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

இந்த நிலையில், லிபரல் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக அறிவித்த ட்ரூடோ, கட்சித் தலைவர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். என்றாலும், அடுத்த பிரதமர் தேர்வு செய்யப்படும்வரை தொடர்ந்து பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் ட்ரூடோஎக்ஸ் தளம்

இந்த நிலையில், அமெரிக்காவில் அடுத்த அதிபராகப் பதவியேற்க உள்ள டொனால்டு ட்ரம்ப், ”அமெரிக்காவின் 51வது மாநிலமாக கனடா இணைய அந்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்கவுள்ள ட்ரம்ப், ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்ததில் இருந்து அமெரிக்கா-கனடா இணைப்புக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், ’ஆயிரக்கணக்கானோர் மெக்சிகோ, கனடா வழியாக அமெரிக்காவுக்குள் நுழைந்துள்ளனர்.

இவர்களால் போதை மருந்து கடத்தல்கள் மற்றும் குற்றங்கள் அமெரிக்காவில் அதிகரித்துள்ளன.

இதைத் தடுக்கும் வகையில், கனடா இறக்குமதி பொருட்கள் மீது 25% வரி விதிக்கப்படும்’ என ட்ரம்ப் ஏற்கெனவே எச்சரித்திருந்தார்.

இதையடுத்து அமெரிக்காவுக்குச் சென்று ட்ரம்பைச் சந்தித்தார் ட்ரூடோ. அப்போதுகூட ட்ரம்ப், அதிக கட்டணங்களை தவிர்ப்பதற்காக கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலமாக மாற்றுவது குறித்து கேலி செய்திருந்தார்.

மேலும், “கனடாவை அமெரிக்காவின் 51வது மாகாணமாகப் பிரிக்கலாம். அதற்கு ஆளுநராக உங்களை நியமிக்கலாம்” என்றார். இதைக்கேட்டு இருவருமே சிரித்தனர்.

இதற்குப் பின்னர், இதுதொடர்பாக தன்னுடைய ‘ட்ரூத் சோஷியல்’ தளப் பக்கத்தில், “ஸ்டேட் ஆஃப் கனடாவின் கவர்னர் ஜஸ்டின் ட்ரூடோவுடன் இரவு உணவருந்தியது மகிழ்ச்சியாக இருந்தது’ என்று ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இது, மேலும் இணையத்தில் விவாத்தைத் தூண்டியது.

இந்த நிலையில், மீண்டும் கனடாவை இணைப்பது குறித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், ”அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக கனடா தேர்வு செய்யப்படுவதற்கு கனடா மக்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். வர்த்தகரீதியான அழுத்தங்களை அறிந்தே ட்ரூடோ ராஜினாமா செய்துள்ளார்.

கனடா அமெரிக்காவுடன் இணைந்தால் வரிகள் குறையும். மேலும், ரஷ்ய மற்றும் சீன கப்பல்களின் அச்சுறுத்தலில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இருக்கும். ஒன்றிணைவோம். அது பெரிய தேசமாக இருக்கும்” என ட்ரம்ப் தற்போது கூறியுள்ளார்.

ஆனால், ட்ரம்ப்பின் இந்த முன்மொழிவு குறித்து கனடா தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் அளிக்கப்படவில்லை.

Share.
Leave A Reply