அமெரிக்காவின் லோஸ் ஏஞ்சல்ஸின் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக பல கட்டிடங்கள், வீடுகள் எரிந்து நாசமாகின. மாநகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது. கிட்டத்தட்ட 30,000 மக்கள் வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்த காட்டுத் தீயின் காரணமாக, சான்டா மோனிகா மற்றும் மாலிபு இடையேயான பசிபிக் பாலிசேட்ஸ் பகுதியில் சுமார் 1,262 ஏக்கர் (510 ஹெக்டேர்) பரப்பு எரிந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, வறண்ட காலநிலை நீட்சியினால் உண்டாகும் காற்று காரணமாக பெரும் தீ ஆபத்து இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

அதிகாரிகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஒரு சில மணிநேரத்தில் தீ வேகமாக பரவியதால், ஆயிரக்கணக்கான மக்கள் நகரை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். டோபாங்கா கனியான் பகுதியில் இருந்து மக்கள் வெளியேறும்போது, ஏராளமான வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. தீ அங்கிருந்து பசிபிக் கடல் வரை பரவியது என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

தீயணைப்பு விமானங்களில் உள்ள வீரர்கள் கடலில் இருந்து தண்ணீரை எடுத்து பற்றி எரியும் வீடுகள் மீது பாய்ச்சி வருகின்றனர். தீ ஜூவாலைகள் வீடுகளை எரித்து நாசமாக்கின. கைவிடப்பட்ட வாகனங்கள் புல்டோசர்கள் மூலம் அகற்றப்பட்டன. இதனால் அவசர கால வாகனங்கள் கடந்து செல்ல முடிந்தது. பள்ளத்தாக்கிலிருந்து கடற்கரைக்கு செல்ல ஒரு ஒரு சாலை மட்டுமே இருப்பதாலும், ஒரே ஒரு கடற்கரை நெடுஞ்சாலை மட்டுமே பாதுகாப்பாக இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனால் மக்கள் நடை பயணமாக வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.

காட்டுத்தீ தொடங்குவதற்கு முன்பு, தேசிய வானிலை சேவை மையம், லாஸ் ஏஞ்சல் கவுண்டிக்கு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை தீவிர தீ பரவும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தது. காற்று மணிக்கு 50 முதல் 80 கி.மீ வேகத்திலும், மலை, மலையடிவார பகுதிகளில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று எச்சரித்திருந்தது.

பசிபிக் பாலிசேட்ஸ் பகுதி பல ஹாலிவுட் நட்சத்திரங்களின் இருப்பிடமாகும். பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ்வுட் தனது எக்ஸ் பக்கத்தில், “என்னால் வெளியேற முடிந்தது. ஆனால் எங்களின் வீடுகள் இன்னும் அங்கே இருக்கிறதா எனத் தெரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

சுமார், 25,000 மக்கள், 10,000-க்கும் அதிகமான வீடுகள் அச்சுறுத்தலில் உள்ளது. பசிபிக் பாலிசேட்ஸின் 23,431 ஏக்கரில் 5 சதவீதம் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனிடையே, கணிக்கமுடியாத வானிலை காரணமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கலிஃபோர்னியாவின் ரிவர்சைட் கவுண்டிக்கான தனது பயணத்தை ரத்து செய்துள்ளார். அங்கு அவர் புதிதாக இரண்டு நினைவுச் சின்னங்களை அறிவிக்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply