இயக்குநர் பாலா, அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள வணங்கான் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நாச்சியார் படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் வெளியாகும் பாலாவின் படம் என்பதால் வணங்கான் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

முன்பு சூர்யா நடிப்பதாகத் திட்டமிடப்பட்டு பின்னர் அருண் விஜய் நடிப்பில் உருவான படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்புகள் நிலவின.

இந்நிலையில், இந்தப் படம் குறித்து ஊடகங்களில் வெளியாகியுள்ள விமர்சனங்கள் கூறுவது என்ன? படம் எப்படி இருக்கிறது? இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

படத்தின் கதை என்ன?

கன்னியாகுமரியில் வசித்து வரும் கோட்டிக்கு (அருண் விஜய்) இருக்கும் ஒரே உறவு அவரது தங்கை (ரிதா) மட்டும்தான். ஆகவே, அவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பேரன்புடன் இருக்கின்றனர்.

வேலைக்குச் சென்று தனது தங்கையின் நலனில் மிகுந்த கவனத்துடன் இருப்பவர், சமூகத்தில் நடக்கும் பிரச்னைகளைக் கண்டு ஆத்திரப்பட்டு அடிதடியில் இறங்குகிறார்.

அருண் விஜய், வணங்கான்

காவல்துறையினரைக்கூட மதிக்காமல் அடிக்கும் அளவுக்கு கோபக்காரராக இருப்பதால் கோட்டி ஒரு மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் பாதுகாவலராக வேலைக்குச் சேர்த்துவிடப்படுகிறார்.

அங்கு கண் தெரியாத மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் சிறார்களிடம் மிக அன்புடன் நடந்துகொள்கிறார். அவர் அங்கு வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே கண் தெரியாத பெண்களுக்கு ஓர் அவலம் நிகழ்கிறது.

அதைச் செய்தது யார், மாற்றுத் திறனாளிகள் சரியாக நடத்தப்படுகிறார்களா என்பன போன்ற கேள்விகளுடன் வணங்கான் கதை நகர்கிறது.

 

பாலா படம் போலவே இல்லையா?

வணங்கானில் முக்கியமான, பேசப்பட வேண்டிய ஒரு பிரச்னையைக் கையில் எடுத்து, அன்றாடம் நாம் கடந்து செல்கின்ற செய்திகளுக்குப் பின்னால் அதை அனுபவிப்பவர்களுக்கு இருக்கும் வலியைத் தனது பாணியில் பாலா பேச முயன்றுள்ளதாக தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில் கூறியுள்ளது.

இருப்பினும், இதமான பாடலுடன் படம் தொடங்கியிருந்தாலும், சில நிமிடங்களில் வணங்கான் சோதிக்கவும் ஆரம்பித்துவிட்டதாகத் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

“முதல் பாதியில் ஏதாவது நல்ல காட்சி இருக்கிறதா என்று தேட வைக்கிறார். முதல் பாதி முடிவதற்கு முன் படத்தின் முக்கியக் காட்சி காட்டப்படுகிறது.

அந்தக் காட்சியை பாலா அப்படிக் காட்டியிருக்கக் கூடாது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் வன்முறைகளைப் பேசும்போது பார்வையாளர்களுக்கு அழுத்தம் ஏற்பட வேண்டும் என்பதற்காக பாலா போன்றோர் இப்படிச் சிந்திப்பது வருத்தத்தைக் கொடுக்கிறது” என்றும் தினமணி விமர்சித்துள்ளது.

அதோடு, “இரண்டாம் பாதியிலும் நிறைய சொதப்பல்கள். இது பாலா படம் போன்றே தெரியவில்லை. படத்தில் வேண்டுமென்றே அழுகையும் ரத்தமும் சிந்தப்பட்டு தேவையில்லாத முடிவாக கிளைமேக்ஸ் காட்சியை எழுதியது என வணங்கான் பல பலவீனங்களால் கடுமையாகத் தடுமாறுகிறது” என்றும் அந்த விமர்சனம் கூறியுள்ளது.

பலவீனமான கதைக்களம்?

“வழக்கம் போல, பாலாவுக்கான வன்முறை படம் முழுக்க பரவிக் கிடக்கிறது” என ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சித்துள்ளது.

இயக்குநர் பாலாவின் இயக்கம் பற்றிக் குறிப்பிட்டு, “அவ்வப்போது வந்து விழும் அவருக்கே உரித்தான ராவான கவுன்டர்கள் தியேட்டரை சிரிக்க வைக்கிறது, ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமான மொழியில் நடிக்க வைத்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது” என்று பாராட்டியுள்ளது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் விமர்சனத்தில் படத்தின் கதைக்களம் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கலாம் எனக் குறிப்பிட்டதோடு, “முதல் பாதி ஓரளவு சுவாரஸ்யமாக இருந்தாலும், கதைக்குள் செல்ல அதை முழுவதுமாக பாலா எடுத்துக்கொண்டது அபத்தம்” என்று எழுதியுள்ளது.

மேலும், “கிறிஸ்துவ மதத்தை வைத்து பாலா அடித்த சில காமெடிகளை அவர் தவிர்த்து இருக்கலாம். இரண்டாம் பாதியில் அருண் விஜய் என்ன ஆனார்? அவர் சொன்னது என்ன? பாலாவுக்கு உரித்தான டச் படத்தில் பல இடங்களில் மிஸ் ஆகிறது” என விமர்சித்துள்ளது.

தேவையற்ற பாலியல் வன்முறைக் காட்சிகள்’

பாலியல் வன்முறையைத் தேவையற்ற காட்சிகளுடன் இயக்குநர் பாலா சித்தரித்த விதம் கேள்விக்குரியது என்று இந்தியா டுடே விமர்சித்துள்ளது.

“பாலியல் வன்முறையைக் கையாளும் படங்கள் அதை உணர்ச்சிகரமாகக் கையாள வேண்டிய நேரம் இது. இயக்குநர்கள் உணர்வுபூர்வமாகக் கையாளக் கற்றுக்கொள்ள வேண்டும். மகாராஜா, வேட்டையனுக்கு பிறகு, வணங்கானும் அத்தகைய படங்களின் பட்டியலில் மற்றொரு படம்,” என்று இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

மேலும், தமிழ் சினிமாவை தொடர்ந்து பார்ப்பவர்களைப் பொருத்தவரை, நாச்சியாரும் நான் கடவுளும் கலந்த கலவையே வணங்கான் என்றும் அந்த விமர்சனம் கூறுகிறது.

அதோடு, “அருண் விஜய் சட்டத்தைக் கையில் எடுத்தவுடன், படம் எப்படி முடியும் என்பது படம் பார்ப்பவர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. வணங்கானில், பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடும் ஒரு நாயகன் இருக்கிறார்.

ஆனால் அவர் டினா (ரோஷினி பிரகாஷ்) என்ற பெண் தன்னைக் கேலி செய்ததற்காக அடிக்கும் ஒருவராகவும் இருக்கிறார்” என்றும் தெரிவித்துள்ளது.
வணங்கான் விமர்சனம்: பாலாவின் பாணியில் இல்லையா? படம் எப்படி இருக்கிறது?

வணங்கான் அரசியல்ரீதியாக சரியான முறையில் சித்தரிக்கப்படவில்லை என்றும் இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.

“ஒரு காட்சியில், சீன சுற்றுலாப் பயணிகள் குழுவிடம் நாய் இறைச்சி சாப்பிடுவதன் மூலம் கொரோனா வைரஸை பரப்புவதாக மக்கள் கூறுவதாகக் காட்டப்படுகிறது.”

இந்தியா டுடே விமர்சனத்தின்படி, அருண் விஜயின் நடிப்பும் நீதிமன்ற நடவடிக்கைகளும் படத்தை சுவாரஸ்யமாக்குகின்றன. இருப்பினும், ஒரு கதாபாத்திரத்தின் மரணத்துடன் படத்தை முடிக்க பாலா தேர்ந்தெடுத்த விதம், மீண்டும் அவரது நோக்கங்களைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நடிகர் அருண் விஜய் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருப்பதாகவும், ஆனால் கதைக்குப் பலமாக அவரது கதாபாத்திரம் சரியாக எழுதப்படவில்லை எனவும் தினமணி விமர்சித்துள்ளது.

தனது விமர்சனத்தில் அதுகுறித்து, “மீண்டும் ஒரு பிதாமகன் கதாபாத்திரத்தைப் பார்ப்பது போலவே அருண் விஜய் தெரிவதாக” கூறியுள்ளது.

மேலும், “பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த வணங்கான் பாலாவுக்கும் அருண் விஜய்க்கும் தமிழ் சினிமாவில் திருப்புமுனைப் படமாக இருக்கும் என்றே நம்பப்பட்டது. ஆனால், ஏமாற்றமே கிடைத்திருப்பதாக” விமர்சனம் எழுதியுள்ளது தினமணி.

Share.
Leave A Reply