ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வரும் செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது. நாட்டின் தற்போதைய அரசியல் சூழலிலும் இந்த விஜயம் தாக்கம் செலுத்தியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், ஜனாதிபதி அநுரவின் ஆட்சி வீழ்ச்சி பாதையில் செல்வதாக கூறுகின்றனர்.

அரசாங்கம் வீழ்ச்சி பாதையிலா?

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய மட்டத்திலும் அவை பேசும் பொருளாக மாறியுள்ளன. இந்த அரசியல் முன்னேற்றங்கள் கொழும்பு 7இல் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் புதன்கிழமை இடம்பெற்ற சம்பாஷணையில் கருப்பொருளாகியது.

‘தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சி காலத்தின் ஆரம்பத்திலேயே நெருக்கடிகளை சந்திக்கும் என்று நாம் நம்பவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத தோல்வியுற்ற அரசாங்மாகவே ஜனாதிபதி அநுரவின் ஆட்சி உள்ளது’ என ருவன் விஜேவர்தன சம்பாஷணையை ஆரம்பித்தார்.

‘அரசாங்கம் நாட்டில் கேலி கூத்து ஆடும் போது எதிர்க்கட்சி குறித்து பேச முடியாத நிலைமையே உள்ளது. ஏனெனில் தற்போது நாட்டில் அரசாங்கமுமு; இல்லை. எதிர்க்கட்சியும் இல்லை’ என வஜிர அபேவர்தன கூறினார்.

‘அரசி மற்றும் குரங்கு பிரச்சினையை சமாளிக்க முடியாது இருந்த அரசாங்கத்திற்கு தற்போது பஸ் மற்றும் முச்சக்கர வண்டி சங்க ங்களின் பிரச்சினை மேலேழுந்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியா வில்லை’ என சம்பாஷணையில் கலந்துக்கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.

‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முந்தைய சிரேஷ்ட அரச தலைவர்கள் அனைவரையும் ஜே.வி.பி கடுமையாக விமர்சித்தது. அந்த விமர்சனங்களே அவர்களுக்கு தற்போது நெருக்கடியாகிவிட்டது. ஆனால் தற்போதைய மக்கள் எதிர்ப்புகள் எதுவும் எதிர்க்கட்சிகள் உருவாக்கியது அல்ல. மாறாக மக்களே நிலைமை உணர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்றனர். உண்மையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி வலுவிழந்துள்ளது. அவர்களால் எதுவும் செய்ய முடியாது’ என நீண்ட மௌனத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.

‘ஆம். அது உண்மை தான். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கல்லறை மெழுகுவர்த்தியை ஏற்றி மாத்திரம் எதிர்க்கட்சியால் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது. அரசாங்கத்தின் இயலாமையும் எதிர்க்கட்சியின் பலவீனமும் நாட்டை சீரழிக்க போகின்றது’ என ராஜித சேனாரத்ன கூற அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.

‘பாராளுமன்ற உறுப்பினர் சமார சம்பத்தை, எதிர்க்கட்சி தலைவராக கருத தோன்றுகிறது. அவர் மாத்திரமே அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து மக்கள் எதிர்பார்ப்புகளை பாராளுமன்றத்தில் பேசுகின்றார். கிளின் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் அதற்கான செலவீனங்கள் குறித்து பாராளுமன்றத்தில் சமார சம்பத் கேள்வி எழுப்பியபோது அரச தரப்பு பதலளிக்க முடியாது திண்டாடியது. எப்போதும் பேசுபர் அன்று அமைதியாகிவிட்டார்’ என எதிர்க்கட்சி உறுப்பினர் கூற அனைவரும் பேரொலியுடன் சிரித்து விட்டனர்.

‘எதிர்க்கட்சி தலைவருக்கு யால சரணாலயத்திற்கு அருகில் வீடொன்றை கட்டிக்கொடுக்க வேண்டும். அப்போது அவர் யானைகள், சிறுத்தை புலி மற்றும் மயில் போன்றவற்றை பார்த்து அமைதியாக இருப்பார். ஏதிர்க்கட்சி வேலையை நாம் செய்யலாம். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்’ என நிமல் லான்சா கூறினார்.

‘சஜித் பிரேமதாச போன்ற ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக இருப்பது அரசாங்கத்திற்கே நன்மை தரும். ஆனால் அதற்கான வாய்ப்பை நாம் வழங்க கூடாது.’ ஏன வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

மீண்டும் யானை சின்னம்

‘ஐக்கிய தேசிய கட்சியை தலைமைத்துவமாக கொண்ட புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். நாடு பொருளாதார ரீதியில் சீரழிவை சந்திக்கும் என்று 2020 ஆண்டில் ஐ.தே.க எதிர்வு கூறியது. எனவே நாட்டிற்கு எந்தவொரு சந்தர்பத்திலும் நாம் பொய் கூற வில்லை. எனவே தான் நாம் தோல்வி அடைந்தோம். போய் கூறியவர்கள் ஆட்சி பீடம் ஏறி தற்போது நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எனவே புதிய கூட்டணி உருவாக்கப்படும்.

எதிர்க்கட்சிகள் இணைத்துக்கொள்ளப்படும். இனிவரும் தேர்தல்களில் ஐக்கிய தேசிய கட்சி கூட்டணியில் போட்டியிடுவோம். அப்போது யானை சின்னத்தில் விரும்பிய அனைவரும் போட்டியிடலாம். புpரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகள் ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த கூட்டணி உருவாகும்’ என ரணில் விக்கிரமசிங்க தெளிவுப்படுத்தினார்.

ரணில் – சஜித் சந்திப்பு

ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் கடந்த வாரத்தில் இருமுறை நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. புhனகல உபதிஸ்ஸ தேரரின் 75 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை விகாரையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ரணில் – சஜித் சந்தித்து கலந்துரையாடினர். இவர்கள் இருவரினதும் இந்த சந்திப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புரிதலுடன் இடம்பெற்றதாக முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.

“நாட்டில் மாற்றம் பெற்று வரும் அரசியல் முன்னேற்றங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சி எதிர்கொள்கின்ற அரசியல் ரீதியிலான அச்சங்கள், ஆளும் கட்சி முரண்பாடுகள் மற்றும் சஜித் பிரேமதாசவுக்கு எதிரான திட்டங்களில் ரணில் – அநுர கூட்டு திட்டம் குறித்து முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிடுகையில்,”

அரசாங்கத்தின் அச்சம்

அடுத்த மார்ச் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராகி வருகிறது. அரசாங்கம் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டிருப்பதால், பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்களை வெற்றிப்பெற முடியும் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது. மேலும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் படுதோல்வியடைந்ததால், இந்த உள்ளாட்சித் தேர்தலில் சிலிண்டர் அல்லது யானை சின்னத்தில் போட்டியிட முடியாது என ஜனாதிபதி அநுரகுமாரவின் அரசாங்கம் நம்புகின்றது. இருப்பினும் எதிர்க்கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக ரணிலின் நடவடிக்கையை ஜே.வி.பி தீவிரமாக கண்காணித்து வருகிறது. தற்போதும் அரசியல் ரீதியில் பல்வேறு நகர்வுகளை ரணில் முன்னெடுத்து வருகிறார். இதில் முதலாவது விடயமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒருங்கிணைப்புகள் முக்கியம் பெறுகின்றன. ஐ.தே.கவில் இருந்து பிரிந்து சென்று சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ள அனைவரையும் ஒன்றிணைக்க ரணில் திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலைமை அரசாங்கத்திற்கு எதிர்வரும் தேர்தல்களை எதிர்கொள்வதற்கு சவாலாகும் என்பது ஜே.வி.பி யின் நிலைப்பாடாக உள்ளது.

எனவே எதிர்க்கட்சிகளின் அரசியல் ரீதியிலான ஒழுங்கமைப்புகள் மற்றும் முன்னேற்றங்களை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.

ஆளும் கட்சி முரண்பாடுகள்

அநுர ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல், தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் பணிப்போர் காணப்பட்டன. ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுபவர்களை தோற்கடிப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆளும் கட்சி உள்வீட்டு கொந்தளிப்புகள் வெளிவந்தன. அரசாங்கத்தை முழுமையாக ஜே.வி.பி கொள்கையின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி கொள்கையில் சாராத தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் திரைக்கு பின்னால் குற்றம் சுமத்தி வருகின்றனர். இதுதவிர கடந்த வாரம் ஆளும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான நிர்மல் ரஞ்சித் தேவசிறி தனது முகநூலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறித்து இரண்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

நிர்மல் தேவசிறி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக அமைப்பில் மாபெரும் கருத்தியல் போராட்டத்தை முன்னெடுத்த புகழ்பெற்ற பேராசிரியராவார். முன்னாள் சபாநாயகர் அசோகா ரங்வலவின் கலாநிதி பட்டம் குறித்து பேராசிரியர் கருத்து தெரிவித்தபோது, முதல் முறையாக வெளிப்படையாக விமர்சித்திருந்தார். அதாவது, அவ்வாறானதொரு பிரச்சினை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய அசோக ரங்வல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். அவரது விமர்சனத்துக்கு பின்னரே எதிர்க்கட்சிகள் கூட இது குறித்து பேச ஆரம்பித்தன.

அந்த வகையில், அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரசாங்கம் மௌனம் சாதிப்பதைக் கடுமையாகக் கேள்வி எழுப்பி இரண்டு சிறப்புக் குறிப்புகளை நிர்மல் தனது முகநூலில் பதிவிட்டிருந்தார். அதில் ஒன்று, ‘தேசிய மக்கள் சக்தியின் அறிவுசார் வட்டம் அரசியலை கைவிட்டதாக தெரிகிறது’, இரண்டாவதாக, ‘அதிகார வாதத்தை தோற்கடித்து அரசைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தை யதார்த்தமாக்க முடியும்’ அதன்படி நிர்மலின் இரண்டாவது குறிப்பு ஜே.வி.பி யின் கொள்கை குறித்து கூறுவதை காண முடிகிறது. மேலும், நிர்மலின் இந்த அறிவிப்புகளின் பின்னர் ஆளும் கட்சிக்குள் நெருக்கடிகள் மேலும் வலுப்பெற்றுள்ளமை தெளிவாகத் தெரிந்தது.

நெருக்கடியின் அடுத்த அறிகுறி அமைச்சர் லால்காந்த மூலம் வெளிப்பட்டது. லால்காந்தவும் அண்மையில் சற்றே சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதுடன், மக்களின் அடுத்த சுனாமி அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவே வரும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் மூலம் அரச உத்தியோகத்தர்களின் செயற்திறன் தொடர்பில் லால்காந்த கடும் விமர்சனரீதியான கேள்விகளை எழுப்பியிருந்தார்.

சஜித்திற்கு எதிரான சதி

ரணில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் ஆரம்பித்திருந்த வேலைத்திட்டங்களின் தொடர்ச்சியாக தற்போது மேலும் சில செயற்பாடுகளையும் ஆரம்பித்திருக்கின்றார். கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்வியைத் தொடர்ந்து ஆட்சியைப் பொறுப்பேற்ற நாள் முதல் ஐக்கிய மக்கள் சக்தியை பலவீனமடையச் செய்ய வேண்டும் என்பதே ரணிலின் பிரதான குறிக்கோளாக இருந்தது. அதற்கான பல செயற்பாடுகளை ரணில் முன்னெடுத்திருந்தார். அதில் ஒன்றுதான் சஜித்துடமிருந்த எம்.பி.க்களுக்கு அமைச்சுப் பதவிகள் மற்றும் சலுகைகளை வழங்கி அரசாங்கத்தில் அமர்த்துவது.

ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, வடிவேல் சுரேஷ், வேலுகுமார் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த நடவடிக்கையின் பலனாக அரசாங்கத்தில் இணைந்தனர். மேலும் சில தெரிவு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு அரசாங்கத்தின் பரவலாக்கப்பட்ட நிதியிலிருந்து பணத்தை வழங்க ரணில் ஏற்பாடு செய்தார். நாட்டின் நிதி நெருக்கடி காரணமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ரணில் ஒத்திவைத்தார் என்று பலர் நினைத்தார்கள். ஆனால் அதன் பின்னணியில் உள்ள உண்மைக் கதை அதுவல்ல. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் அரசியல் ரீதியாக எழுச்சி பெறுவதைத் தடுப்பதற்காக ரணில் திட்டமிட்டே இதைச் செய்தார்.ஏனெனில் அப்போது உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தால் சஜித்தின் ஐக்கிய மக்கள் கூட்டணி பெரும்பாலான மாநகர சபைகள், நகர சபைகளை கைப்பற்றியிருக்கும்.

இதை நன்கு புரிந்துகொண்ட ரணில், ஐக்கிய மக்கள் சக்திக்கு அந்த வாய்ப்பை கொடுக்காது உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைத்தார். அதன்படி இன்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பலம் மட்டுமே உள்ளதுடன், இன்றும் உள்ளூராட்சி உறுப்பினர்களோ மாகாண சபை உறுப்பினர்களோ இல்லை. எனவே, கிராம மட்டத்தில் அதிகாரபூர்வமாக அடிமட்ட பொறிமுறையை சஜித் அணி கொண்டிருக்கவில்லை.

2023ஆம் ஆண்டில் பணமில்லை என்று ரணில் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைத்தபோது, ஜே.வி.பி. யோ அல்லது தேசிய மக்கள் சக்தியோ இணைந்து அதற்கு பாரியளவில் ஆட்சேபனைகளை தெரிவிக்கவில்லை, ஏனெனில் உள்ளுராட்சித் தேர்தல் நடத்தப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியின் அரசியல் வலையமைப்பு உருவாகுவதைத் தடுக்க முடியாது. 2018 ஆம் ஆண்டில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிடைத்த அரசியல் பலத்துடன் பொதுஜன பெரமுன கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்கியது. பொதுத் தேர்தலிலும் பொதுஜன பெரமுன மூன்றில் இரண்டு அதிகாரத்தைப் பெற்றமையை ஜே.வி.பி. உணர்ந்தது. அதனால்தான் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க ரணிலுக்கு மாற்று வழியில் அநுரவின் ஆதரவு கிடைத்தது.

துரதிர்ஷ்டவசமாக, இந்த அரசியல் உண்மையைப் புரிந்துகொள்ளும் திறன் அப்போது மக்களுக்கு இருக்க வில்லை. அந்த அரசியல் உண்மையைப் புரிந்துகொண்டிருந்தால் உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க ரணிலுக்கு இடமளித்திருக்க மாட்டார்கள். அவ்வாறு அந்த உண்மையை அவர்கள் அன்று புரிந்திருந்தால் இன்று நாட்டின் ஜனாதிபதியாக சஜித் இருந்திருப்பார்.

(லியோ நிரோஷ தர்ஷன்) Virakesari

Share.
Leave A Reply