பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யும் விடயத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் திணறிக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக, அரிசி விவகாரத்தில் அரசாங்கத்தினால் எந்த முடிவையும் எடுக்க முடியாத நிலை நீடிக்கிறது.
கடந்த செப்டெம்பர் மாதம் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர் தொடங்கிய இந்த அரிசி பிரச்சினை, அவர் 100 நாட்களை நிறைவு செய்த பின்னரும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், இந்தப் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அரிசி பிரச்சினைக்கு தாங்களும் தீர்வைத் தேடிக் கொண்டிருப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருக்கிறார்.
இது இந்த விவகாரத்தில் அரசாங்கம் என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போய் இருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டியிருக்கிறது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்ட போதும், இன்னமும் தீர்வைத் தேடிக் கொண்டிருப்பதாக அரசாங்கத்தினால் பொறுப்பின்றி கூற முடியாது.
ஏனென்றால், இது ஒரு அத்தியாவசிய பிரச்சினை, அன்றாட பிரச்சினை. நாளாந்தம் உணவுக்கு அரிசி தேவை.
அது சாதாரண மக்களுக்கு போதுமான அளவில் கிடைக்க வேண்டும். அதேவேளை நியாயமான விலையிலும் கிடைக்க வேண்டும்.
இந்த இரண்டு விடயங்களிலும் அரசாங்கத்தினால் தனது பொறுப்பை நிறைவேற்ற முடியவில்லை.
ஆட்சிக்கு வந்தவுடன் அரசாங்கம், அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி அளித்தது. அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என தெரிந்து கொண்ட பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டது.
தனியார்துறையினர் அரிசி இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டதன் மூலம், இதுவரையில் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்றிக் தொன்னுக்கும் அதிகமான அரிசி இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.
இந்த அரிசி இறக்குமதியின் மூலம் அரசாங்கம் மிகப்பெரிய வருமானத்தை பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு கிலோ அரிசிக்கு 65 ரூபாவை, அரசாங்கம் வரியாக அறவிடுகிறது.
இதன் மூலம் அரசாங்கம் குறைந்தபட்சம் 7 பில்லியன் ரூபாவுக்கும் மேல் வருமானத்தை பெற்றிருக்கிறது.
இந்த வருமானத்தின் மூலம் சுங்கத் திணைக்களமும், இறைவரித் திணைக்களமும் தங்களது, 2024ஆம் ஆண்டுக்குரிய வருமான இலக்குகளை எட்டி இருக்கின்றன.
ஆனால், சாதாரண மக்களுக்கு அந்த அரிசி போய்ச் சேரவில்லை. எல்லா இடங்களுக்கும் அரிசி விநியோகிக்கப்படவில்லை. அரிசி விலை குறையவில்லை.
2022இல், கடுமையான பொருளாதார நெருக்கடி இருந்த போது கூட, அரிசியின் விலை 180 ரூபாவைத் தாண்டவில்லை.
அந்தக் காலகட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தினால் குடும்பத்துக்கு 10 கிலோ அரிசி வீதம் இரண்டு முறை வழங்கப்பட்டது.
ஆனால், இந்த அரசாங்கத்தினால் நியாயமான விலைக்கு அரிசியைப் பெற்றுக் கொள்ள கொடுக்க முடியவில்லை.
இதற்கு அரிசி மாபியாக்கள் தான் காரணம் என்று அரசாங்கம் குற்றம்சாட்டுகிறது.
உள்நாட்டு அரிசி உற்பத்தி போதுமானளவுக்கு இருந்த போதும் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த சூழலை அரசாங்கம் கையாண்ட முறை சரியானதாக இருந்திருந்தால், இந்த பிரச்சினையை இலகுவாக தீர்த்திருக்க முடியும்.
உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டும் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. வெளிநாட்டு இறக்குமதியின் மூலமும் பிரச்சினையை தீர்க்கவில்லை.
மீசைக்கு ஆசை, கூழுக்கும் ஆசை என்ற அரசாங்கத்தின் நிலையே இதற்கு முக்கிய காரணம்.
அரிசியை இறக்குமதி செய்து தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என எதிர்பார்த்த அரசாங்கம், வரியை தளர்த்தியிருந்தால் விலையை குறைத்திருக்க முடியும்.
அரிசி மாபியாக்களையும், நட்டமடையச் செய்திருக்க முடியும். தட்டுப்பாட்டையும் போக்கியிருக்க முடியும்.
ஆனால், வரியை தளர்த்தாமல், அதனை அறவிட்டுக் கொண்டு இறக்குமதிக்கு அனுமதித்த போது தட்டுப்பாடும் நீங்கவில்லை, விலையும் குறையவில்லை.
இந்த இரண்டையும் சமாளிக்க கூடிய ஒரு முறையை அரசாங்கத்தினால் உருவாக்கவும் முடியவில்லை.
உற்பத்தி செய்யப்பட்ட அரிசியின் விநியோகத்தையும் சீர்படுத்த முடியவில்லை.
மொத்தத்தில் அரிசி விவகாரத்தில் அரசாங்கம் கடுமையாக திணறிக் கொண்டிருக்கிறது.
கோட்டாபய ராஜபக் ஷ அரசாங்கம் இதேபோன்ற நிலையை முன்னர் எதிர்நோக்கியது.
உளுந்து, பயறு, சோளம், மஞ்சள் போன்றவற்றின் இறக்குமதியை தடை செய்து விட்டு அவற்றின் விலை மோசமாக உயர்ந்த போது, அதனை கட்டுப்படுத்த முடியாத நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டது.
கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்ட போதும், அது ஒரு போதும் நடைமுறைக்கு வரவில்லை. அதனை நடைமுறைப்படுத்தவும் முடியாத நிலை ஏற்பட்டது.
அரிசிக்கு தட்டுப்பாடு வந்த போது, அரிசி களஞ்சியத்துக்கு சென்று கோட்டாபாய் ராஜபக் ஷ விசாரணைகளை நடத்தி, ஊடகங்களுக்கு படங்களையும் கொடுத்தார். ஆனால், கட்டுப்பாட்டு விலையை தீர்மானிப்பதில், நடைமுறைப்படுத்துவதில் அவரால் கடைசி வரை வெற்றி பெற முடியவில்லை.
பல்வேறு பொருட்களுக்கு இதே நிலை ஏற்பட்டது. அதுதான் கோட்டா அரசாங்கம் மீது மக்கள் மத்தியில் அதிருப்தியை விதைத்தது.
தற்போதைய அரசாங்கம் அவ்வாறான நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் அரிசி இறக்குமதிக்கு அனுமதி அளித்தது.
தனியாரிடம் அரிசி, நெல் கையிருப்பு சிக்கி இருப்பதால், அதை சரியாக மதிப்பீடு செய்ய முடியவில்லை, விநியோகிக்க முடியவில்லை என அரசாங்கம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியது.
அதனை அடிப்படையாக வைத்தே இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கியது.
ஆனால், யார் பதுக்குகிறார்கள் என்று குற்றம்சாட்டியதோ, அதே தனியாருக்கு அரிசி இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டது முட்டாள்தனம்.
அவர்களும் அரிசியை இறக்குமதி செய்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவை முற்று முழுதாக சந்தைக்கு வரவில்லை. அரசாங்கம் 230 ரூபாவுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயத்திருந்தாலும், சந்தையில் 300 ரூபாவுக்கும் கூட அரிசி விற்கப்படுகின்ற நிலை காணப்படுகிறது.
இந்த பொருளாதார நெருக்கடி குறுகிய காலத்தில் சமாளிக்கப்படாது போனால், அது ஒரு நீண்டகால பிரச்சினையாக மாறும். அரசாங்கம் எந்த ஒரு கட்டத்திலும், மக்களுக்கான பொது விநியோகத்தை உறுதிப்படுத்த முடியாமல் போகும்.
தனியாரிடம் அரிசி இருக்கிறதோ இல்லையோ, அவர்கள் பதுக்குகிறார்களோ இல்லையோ, அதனை கண்டறிந்து அந்தப் பிரச்சினையை கையாளுவதற்கு சரியான உபாயத்தை வகுக்க வேண்டியது அரசாங்கம் தான். அதனை விட்டுவிட்டு கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறினால் தான், இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது என புலம்பிக் கொண்டிருப்பதில் இனிமேலும் அர்த்தம் இல்லை.
ஏனென்றால், இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து நான்கு மாதங்கள் ஆகப் போகிறது.
கடந்த கால அரசாங்கங்களின் கொள்கைகளையும் நிலைப்பாடுகளையும் திட்டங்களையும் விமர்சித்துக் கொண்டிருப்பது, மாற்று சிந்தனை கொண்ட அரசாங்கத்திற்கான பண்பாக இருக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க ஒவ்வொரு குடும்பத்துக்கு 20 கிலோ அரிசியை வழங்கியது தான், தட்டுப்பாட்டுக்கு காரணம் என அமைச்சர் வசந்த சமரசிங்க பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
அது எந்த வகையிலும் தட்டுப்பாட்டுக்கு காரணமாக முடியாது. ஒருவர் ஒரு நாளைக்கு சாதாரணமாக உண்பதற்கு எடுத்துக் கொள்ளும் அரிசியைத் தான் உண்ண முடியும்.
ரணில் விக்கிரமசிங்க அரிசி கொடுத்த காலகட்டத்தில் அரிசி விற்பனை குறைந்திருக்கும். அது தட்டுப்பாட்டை ஏற்படுத்தியிருக்காது.
இதனைக் கூட புரிந்து கொள்ள முடியாதளவுக்கு, இந்த அரசாங்கத்தின் நிபுணத்துவம் வாய்ந்த அமைச்சர்கள் இருக்கிறார்கள்.
இந்த விடயத்தில் மாத்திரம் அல்ல, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெய்ஜிங் பயணத்திற்கு முன்னதாக, அவசர அவசரமாக, சீனாவுக்கு கோழி இறைச்சியை ஏற்றுமதி செய்வதற்கான நடைமுறைகளை உருவாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி அளித்து இருக்கிறது.
நாட்டில் உள்ள மக்கள் கோழி இறைச்சியை 1,200 ரூபாவுக்கு மேல் கொடுத்தே வாங்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
முட்டையை இந்தியாவில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டியிருக்கிறது.
இவ்வாறான நிலையில் கோழி இறைச்சி ஏற்றுமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டால், உள்நாட்டில் தேவைக்கு ஏற்ப இறைச்சியை பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை இருக்குமா என்ற கேள்வி இருக்கிறது.
ஏற்றுமதி பொருளாதாரம் முக்கியமானது என்றாலும், அது உள்நாட்டு நுகர்வுக்கு போதுமான பொருட்களை வைத்துக் கொண்டே ஏற்றுமதி செய்யப்பட வேண்டும்.
ஆனால், இலங்கையில் அவ்வாறு நடப்பதில்லை. ஏற்றுமதிக்கு முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், கழிவு பொருட்களே இங்கு சந்தைக்கு விடப்படுகின்றன.
இதனால் தரமான பொருட்கள் உள்ளூர் மக்களுக்கு கிடைப்பதில்லை. போதுமான அளவில் அவை கிடைப்பதில்லை. இது மக்களின் சுகாதாரம் ஊட்டச் சத்து போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
எல்லா விடயங்களிலும் பொருளாதார அலகுகளை வைத்து தீர்மானங்களை எடுக்க முடியாது.
இந்த அரசாங்கம் அவ்வாறான ஒரு சிந்தனையில் தான் செயல்படுகிறது என்பதை உணர முடிகிறது.
மக்களின் அன்றாட மற்றும் அடிப்படை தேவைகளை கூட சீராக கிடைக்கக் கூடிய நிலையை உருவாக்க முடியாது போனால் இந்த அரசாங்கத்தினால் கொள்கை ரீதியான எந்த மாற்றத்தையும் உருவாக்க முடியாது.
கார்வண்ணன் Virakesari