கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பட்டியல் பிரிவை சேர்ந்த 18 வயது மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 64 பேரில் இதுவரை 20 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
மாணவியின் பக்கத்து வீட்டார், அவரது தந்தையின் நண்பர்கள், அவரது விளையாட்டு பயிற்சியாளர்கள், 17 வயது சிறுவர்கள் இருவர் மற்றும் 19 முதல் 47 வயதுக்குட்பட்ட பலர் மீது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இரண்டு காவல் நிலையங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஐந்து ஆண்டுகளாக அந்த மாணவிக்கு இந்த பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளது. பட்டியல் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றத் தடுப்புச் சட்டம் (POCSO) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன”, என்று பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் தெரிவித்தார்.
இந்த சமயத்தில் மாணவிக்கு மூன்று முறை கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த, குழந்தைப் பருவத்தில் இருந்தே மாணவிக்கு நண்பராக இருந்த ஒருவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.
இந்த குற்றத்தில் ஈடுபட்ட போது அவருக்கு 13 வயதே இருக்கும் என்று கூறப்படுகிறது. கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஒன்றில் அவருக்கும் பங்கிருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“முதல் குற்றவாளியின் தொலைபேசியில் பாலியல் வன்கொடுமை நடந்ததற்கான ஆதாரங்கள் இருந்தன.
அதைக் காட்டியே மாணவியை மிரட்டி பலமுறை அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அவரது நண்பர்களிடமும் மாணவியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார்”, என்று பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை அலுவலர் சஜீவ் மணக்கட்டுப்புழா தெரிவித்தார்.
கடும்பஸ்ரீ “ஸ்னேஹிதா” திட்டத்தின் கீழ் சமூக ஆலோசகர்கள் குழு பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்குச் சென்ற போதுதான் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.
“இந்த திட்டத்தின் கீழ், பல்வேறு குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
அப்போதுதான் பாதிக்கப்பட்ட மாணவி தனது பள்ளிப் பருவத்தில் தான் அனுபவித்த கொடுமைகளைப் பற்றிப் பேச விரும்பினார்.
ஆனால் அவர் உயர் அதிகாரிகளிடம் மட்டுமே பேச வேண்டும் என்று விரும்பினார். அதனால் சமூக ஆலோசகர் நேரடியாக என்னைத் தொடர்பு கொண்டனர்”, என்று பத்தனம்திட்டா குழந்தைகள் நலக் குழுவின் வழக்கறிஞரும் தலைவருமான என்.ராஜீவ் பிபிசியிடம் கூறினார்.
பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது தாயும் குழந்தைகள் நலக் குழுவின் அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு மாணவி எங்கள் குழுவின் உளவியலாளரிடம் பேசினார்.
அறைக்கு வெளியே காத்திருந்த மாணவியின் தாயாரிடம், அவரது கணவரின் தொலைபேசியை கொண்டுவருமாறு கூறப்பட்டது. அதன் பின்பு குற்றவாளிகள் யாரென தெரியவந்தது”, என்று ராஜீவ் தெரிவித்தார்.
பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளை குழந்தைகள் நலக் குழு காவல் நிலைய அதிகாரியிடம் தெரிவிப்பதே வழக்கமாக கொண்டு செயல்படுகிறது.
“ஆனால், இந்த வழக்கு வேறுவிதமாக கையாள வேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். எனவே நாங்கள் காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தோம், அவர் உடனடியாக நடவடிக்கையைத் தொடங்கினார்”, என்று ராஜீவ் கூறினார்.
இதற்கிடையில், இந்த வழக்கு குறித்து விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையம் கேரள மாநில அரசை கோரியுள்ளது. கேரள மகளிர் ஆணையம் இந்த வழக்கை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவியும் அவரது தாயாரும் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.