ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் தற்போது வலியுறுத்தப்படுகிறது. இதற்கான கலந்துரையாடல்கள் சகல மட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இடம்பெற்றது. இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கூட்டத்தில் பங்குபற்றியிருந்த சகல உறுப்பினர்களும் எதிர்வரும் தேர்தல்களில் வெற்றிவாகை சூட வேண்டுமானால் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.
கபீர் ஹாசிம், ஹர்ஷ டி சில்வா உட்பட்டோர் இந்த விடயத்தை ஆணித்தரமாக எடுத்துக் கூறியுள்ளனர். கடந்த கால தேர்தல் முடிவுகளை விளக்கிக் கூறி இதற்கான தமது வாதங்களை இவர்கள் முன்வைத்துள்ளனர்.
நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் 90 வீதத்துக்கும் மேற்பட்டவர்கள் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருந்ததுடன் இதற்கு கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச இணங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
முதலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைய வேண்டும் என்ற விடயம் தொடர்பில் எதிர்மறைவான கருத்துக்களை சஜித் பிரேமதாச தெரிவித்திருந்த போதிலும் சகலரும் வலியுறுத்தியதையடுத்து இணைப்புக் குறித்த பேச்சுக்கு அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஆனாலும், எதிர்வரும் தேர்தல்களில் ஒன்றிணைந்தாலும் தொலைபேசி சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கருத்து கூறியுள்ளார்.
முதலில் இரு தரப்பும் இணைவது குறித்து பேசுவோம். அதற்கான நடவடிக்கைகளை எடுப்போம். அதன் பின்னர் தேர்தலுக்கான சின்னம் தொடர்பில் தீர்மானிக்க முடியும். பொதுச் சின்னத்திலும் போட்டியிட முடியும். எனவே, முதலில் இணைவதற்கு நடவடிக்கை எடுப்போம் என்று பெரும்பான்மையான நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் முழுமையான விருப்பமின்றிய நிலையில் இணைப்புக் குறித்த பேச்சுக்களுக்கு சஜித் பிரேமதாச சம்மதம் வெளியிட்டிருக்கின்றார்.
ரில்வினின் நிழல் ஆட்சி
இதுவரை காலமும் எதிர்க்கட்சியில் இருந்து வந்த மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தற்போது ஆளும் கட்சியாக பரிணமித்துள்ளது. ஜே.வி.பி.யானது அரசியலில் ஈடுபட்டாலும் கட்சியின் கொள்கைக்கிணங்கவே இதுவரை செயற்பட்டு வந்தது.
ஜே.வி.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் தமது கொடுப்பனவுகளை கட்சிக்கு வழங்கி, அதில் ஒரு பகுதியினை பெற்றுக்கொள்ளும் நடைமுறையே இதுவரை காலமும் இருந்து வந்தது.
தற்போது ஜே.வி.பி. ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ளதுடன் பாராளுமன்றத்தில் 159 உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள், எவ்வாறு வழங்கப்படுகின்றது என்ற விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பப்படுகின்றது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தனித்தனியாக வங்கிக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன. அவர்களது சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அந்த வங்கிக் கணக்குக்கே செல்வதாகவும் கட்சி உறுப்பினர்களிடமிருந்து காசோலைகளைப் பெற்று அதனை கட்சி பெற்றுக் கொள்வதுடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிலிருந்து ஒரு தொகைக் கொடுப்பனவு வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனைவிட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு செயலாளர் மற்றும் உதவியாளர் ,சாரதி போன்ற நியமனங்களை வழங்க முடியும். இந்த பதவிகளுக்கும் கட்சியே ஆட்களை நியமித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆட்சி அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியிருந்தாலும் அதன் செயற்பாடுகளை ஜே.வி.பி.யே மேற்கொண்டு வருகின்றது. ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வா நிழல் ஆட்சியை நடத்தி வருவதாகவே அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்கிறார். இந்த விஜயம் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அவதானத்திற்கு உட்பட்டுள்ளது.
இலங்கைக்கான உதவிகள் குறித்து விளக்கிய உயர்ஸ்தானிகர்
ஜனாதிபதியின் சீன விஜயம் தொடர்பில் இந்தியாவும் கவனம் செலுத்தி வருகின்றது. ஜனாதிபதியின் விஜயத்துக்கு முன்னர் கடந்த 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தேசிய பத்திரிகைகளின் ஆசிரியர் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை சந்தித்திருந்தார்.
உயர்ஸ்தானிகரத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கைக்கு இந்தியா ஆற்றிவரும் உதவிகள் தொடர்பில் அவர் எடுத்துக் கூறியிருந்தார்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்த போதும் இந்தியா பல்வேறு உதவிகளை அளித்திருந்தது. தற்போதும் இலங்கைக்கான உதவிகளை இந்தியா தொடர்ந்து வழங்கி வருவதாகவும் உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டினார்.
கடன் உதவியாக வழங்கப்பட்ட நிதியில் 780 மில்லியன் டொலரை அன்பளிப்பாக மாற்றியுள்ளதாகவும் அவர் புள்ளிவிபரங்களுடன் எடுத்துக் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்வதற்கு 23 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனைவிட ஆய்வுக் கப்பல் விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி அநுரவின் இந்திய விஜயத்தின் போது ஆய்வுக் கப்பல் விவகாரம் குறித்து பேசவில்லை.
ஆனாலும், இந்தியாவின் பாதுகாப்புக்கு குந்தகமான வகையில் இலங்கையை பயன்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என்ற உறுதிமொழியை ஜனாதிபதி வழங்கியிருந்தார்.
ஆய்வுக் கப்பல்களை அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் இலங்கையே தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
எட்கா ஒப்பந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தையினை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறித்தும் அவர் விளக்கிக் கூறினார். இலங்கைக்கு இந்தியப் பிரதமர் மோடி இவ்வருடம் விஜயம் செய்வார் என்றும் அவர் எடுத்துக் கூறினார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு விஜயம் செய்யும் நிலையில் இலங்கைக்கு வழங்கிய உதவிகள் மற்றும் ஒத்துழைப்புக்களை வெளிக்காட்டும் வகையில் உயர்ஸ்தானிகர் கருத்துக்களை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
அரசாங்கம் வீழ்ச்சி பாதையிலா?
நாட்டின் தற்போதைய அரசியல் சூழலிலும் ஜனாதிபதியின் சீன விஜயம் தாக்கம் செலுத்தியுள்ளது. மக்களின் எதிர்பார்ப்புகளை அரசாங்கத்தினால் நிறைவேற்ற முடியாது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், ஜனாதிபதி அநுரவின் ஆட்சி வீழ்ச்சி பாதையில் செல்வதாக கூறுகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு சர்ச்சைகள் , விமரசனங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய மட்டத்திலும் அவை பேசு பொருட்களாக மாறியுள்ளன. இந்த அரசியல் நிலைமை கொழும்பு 7இல் அமைந்துள்ள ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சம்பாஷணையின் கருப்பொருளாகியது.
‘தற்போதைய அரசாங்கம் தனது ஆட்சி காலத்தின் ஆரம்பத்திலேயே நெருக்கடிகளை சந்திக்கும் என்று நாம் நம்பவில்லை. மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத தோல்வியுற்ற அரசாங்கமாகவே ஜனாதிபதி அநுரவின் ஆட்சி உள்ளது’ என்று ருவான் விஜேவர்தன சம்பாஷணையை ஆரம்பித்தார்.
‘அரசாங்கம் நாட்டில் கேலிக் கூத்து ஆடும் போது எதிர்க்கட்சி குறித்து பேச முடியாத நிலைமையே உள்ளது. ஏனெனில் தற்போது நாட்டில் அரசாங்கமும் இல்லை.
எதிர்க்கட்சியும் இல்லை’ என வஜிர அபேவர்தன கூறினார்.’அரிசி மற்றும் குரங்கு பிரச்சினையை சமாளிக்க முடியாது இருந்த அரசாங்கத்திற்கு தற்போது பஸ் மற்றும் முச்சக்கர வண்டி சங்கங்களின் பிரச்சினை மேலெழுந்துள்ளது. மக்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை அரசாங்கத்தால் நிறைவேற்ற முடியவில்லை’ என சம்பாஷணையில் கலந்துக்கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார்.
‘ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முன்னர் சிரேஷ்ட அரசத் தலைவர்கள் அனைவரையும் ஜே.வி.பி. கடுமையாக விமர்சித்தது. அந்த விமர்சனங்களே அவர்களுக்கு தற்போது நெருக்கடியாகி விட்டது. ஆனால் தற்போதைய மக்கள் எதிர்ப்புகள் எதுவும் எதிர்க்கட்சிகள் உருவாக்கியது அல்ல.
மாறாக மக்களே நிலைமையை உணர்ந்து அரசாங்கத்திற்கு எதிராக விமர்சனங்களை முன்வைக்கின்றனர். உண்மையில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சி வலுவிழந்துள்ளது. அவர்களால் எதுவும் செய்ய முடியாது’ என நீண்ட மௌனத்தின் பின்னர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்தார்.
‘ஆம். அது உண்மை தான். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கல்லறையில் மெழுகுவர்த்தியை ஏற்றுவதன் மூலம் மாத்திரம் எதிர்க்கட்சியால் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாது.
அரசாங்கத்தின் இயலாமையும் எதிர்க்கட்சியின் பலவீனமும் தான் நாட்டை சீரழிக்கப் போகின்றது’ என ராஜித சேனாரத்ன கூற அனைவரும் அதனை ஏற்றுக்கொண்டனர்.’பாராளுமன்ற உறுப்பினர் சமார சம்பத்தை தான் , எதிர்க்கட்சித் தலைவராக கருதத் தோன்றுகிறது.
அவர் மாத்திரமே அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து மக்கள் எதிர்பார்ப்புகளை பாராளுமன்றத்தில் பேசுகின்றார். கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் அதற்கான செலவினங்கள் குறித்து பாராளுமன்றத்தில் சமார சம்பத் கேள்வி எழுப்பிய போது அரச தரப்பு பதிலளிக்க முடியாது திண்டாடியது. எப்போதும் பேசுபவர் அன்று அமைதியாகி விட்டார் ‘ என எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூற அனைவரும் பேரொலியுடன் சிரித்தனர்.
‘எதிர்க்கட்சித் தலைவருக்கு யால சரணாலயத்திற்கு அருகில் வீடொன்றை கட்டிக்கொடுக்க வேண்டும். அப்போது அவர் யானைகள், சிறுத்தை, புலி மற்றும் மயில் போன்றவற்றை பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பார். எதிர்க்கட்சி வேலையை நாம் செய்யலாம். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்’ என நிமல் லான்சா கூறினார்.
‘சஜித் பிரேமதாச போன்ற ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராக இருப்பது அரசாங்கத்திற்கே நன்மை தரும். ஆனால் அதற்கான வாய்ப்பை நாம் வழங்கக் கூடாது’ என வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
மீண்டும் யானை சின்னம்
‘ஐக்கிய தேசியக் கட்சியை தலைமைத்துவமாகக் கொண்ட புதிய கூட்டணி ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். நாடு பொருளாதார ரீதியில் சீரழிவை சந்திக்கும் என்று 2020 ஆண்டில் ஐ.தே.க. எதிர்வு கூறியது.
எனவே நாட்டிற்கு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் பொய் கூறவில்லை. எனவே தான் நாம் தோல்வி அடைந்தோம். பொய் கூறியவர்கள் ஆட்சி பீடம் ஏறி தற்போது நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். எனவே புதிய கூட்டணி உருவாக்கப்படும்.
எதிர்க்கட்சிகளும் இதில் இணைத்துக்கொள்ளப்படும். இனிவரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி கூட்டணியில் போட்டியிடுவோம். அப்போது அனைவரும் யானை சின்னத்தில் போட்டியிடலாம். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சு வார்த்தைகள் ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எனவே கூடிய விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்த கூட்டணி உருவாகும்’ என ரணில் விக்கிரமசிங்க இங்கு தெளிவுப்படுத்தினார்.
ரணில் – சஜித் சந்திப்பு
ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவரும் கடந்த வாரத்தில் நேருக்கு நேர் சந்தித்து கலந்துரையாடினர். இந்த சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
பூனகல உபதிஸ்ஸ தேரரின் 75 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு வெள்ளவத்தை விகாரையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ரணில் – சஜித் சந்தித்து கலந்துரையாடினர். இவர்கள் இருவரினதும் இந்த சந்திப்பு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு புரிதலுடன் இடம்பெற்றதாக முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.
ஆளும் கட்சிக்குள் முரண்பாடுகள்
அநுர ஜனாதிபதியாக பதவியேற்ற நாள் முதல், தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பி.க்கும் இடையில் பனிப்போர் காணப்பட்டது. ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தி ஊடாக போட்டியிடுபவர்களை தோற்கடிப்பதற்கு திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக ஆளும் கட்சி உள்வீட்டு கொந்தளிப்புகள் வெளிவந்தன.
அரசாங்கத்தை முழுமையாக ஜே.வி.பி. யின் கொள்கையின் பக்கம் திருப்ப வேண்டும் என்ற திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் கொள்கையில் சாராத தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் திரைக்கு பின்னால் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இதுதவிர கடந்த வாரம் ஆளும் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான நிர்மல் ரஞ்சித் தேவசிறி தனது முகநூலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறித்து இரண்டு கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
நிர்மல் தேவசிறி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதற்கு பல்கலைக்கழக அமைப்பில் மாபெரும் கருத்தியல் போராட்டத்தை முன்னெடுத்த புகழ்பெற்ற பேராசிரியராவார். முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வலவின் கலாநிதி பட்டம் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக விமர்சித்திருந்தார்.
அதாவது, அவ்வாறானதொரு பிரச்சினை ஏற்பட்டால் அதனை உடனடியாக சரி செய்ய அசோக்க ரன்வல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்காமல் பதவியை விட்டு விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். அவரது விமர்சனத்துக்கு பின்னரே எதிர்க்கட்சிகள் கூட இது குறித்து பேச ஆரம்பித்தன.
அந்த வகையில், அரசியல் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் அரசாங்கம் மௌனம் சாதிப்பதைக் கடுமையாகக் கேள்வி எழுப்பி இரண்டு சிறப்புக் குறிப்புகளை நிர்மல் தேவசிறி தனது முகநூலில் பதிவிட்டிருந்தார்.
அதில் ஒன்று, ‘தேசிய மக்கள் சக்தியின் அறிவுசார் வட்டம் அரசியலை கைவிட்டதாக தெரிகிறது’, இரண்டாவதாக, ‘அதிகார வாதத்தை தோற்கடித்து அரசைக் காப்பாற்றுவதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்தை யதார்த்தமாக்க முடியும்’ அதன்படி நிர்மலின் இரண்டாவது குறிப்பில் ஜே.வி.பி.யின் கொள்கை குறித்து கூறுவதை காண முடிகிறது.
மேலும், நிர்மலின் இந்த அறிவிப்புகளின் பின்னர் ஆளும் கட்சிக்குள் நெருக்கடிகள் மேலும் வலுப்பெற்றுள்ளமை தெளிவாகத் தெரிந்தது.நெருக்கடியின் அடுத்த அறிகுறி அமைச்சர் லால்காந்த மூலம் வெளிப்பட்டது.
லால்காந்தவும் அண்மையில் சற்றே சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதுடன், மக்களின் அடுத்த சுனாமி அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவே வரும் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் மூலம் அரச உத்தியோகத்தர்களின் செயற்திறன் தொடர்பில் லால்காந்த கடும் விமர்சன ரீதியான கேள்விகளை எழுப்பியிருந்தார்.