கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், யோகி பாபு, வினய் ராய் நடிப்பில் ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் நேற்று (ஜனவரி 14) வெளியானது. இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டிரெய்லர், சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
பல வருடத்திற்கு பிறகு கிருத்திகா உதயநிதி ஒரு படத்தை இயக்கியுள்ளார். ஒரு பெரிய இடைவேளைக்கு பிறகு நடிகர் ரவி மோகன் ஒரு காதல் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இதுகுறித்து பல்வேறு ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?
படத்தின் கதை என்ன?
பெங்களூருவில் பணிபுரிந்து வரும் சித்தார்த்தின் (ரவி மோகன்) நிச்சயதார்த்தம் நின்றுவிடுகிறது. தனது நண்பரின் பேச்சைக் கேட்டு அவர் மருத்துவமனையில் உயிரணு தானம் செய்கிறார்.
மறுபுறம், ஸ்ரேயா (நித்யா மேனன்) தனது இணையரிடம் இருந்து சில காரணங்களுக்காக பிரிந்து வாழ்கிறார். அவருக்கு குழந்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.
செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பி மருத்துவமனை செல்லும் அவர், சித்தார்த்தின் உயிரணு மூலம் கருத்தரிக்கிறார்.
பின்னர் ஸ்ரேயா சித்தார்த்துக்கு அறிமுகமாகிறார். தன் குழந்தைக்கு தந்தை அவர்தான் என்று தெரியாமலேயே சித்தார்த் மீது ஸ்ரேயாவுக்கு காதல் உருவாகிறது. இதன் பிறகு இருவரின் வாழ்க்கையில் என்ன நடக்கிறது அதுதான் படத்தின் மீதி கதை.
காதலிக்க நேரமில்லை ஊடக விமர்சனம்
“இளம் தலைமுறையினருக்கான படம்”
“‘ஜென் Z’ தலைமுறையை ஈர்ப்பதற்கான ஒரு கதைக்களத்தை தேர்வு செய்துள்ளார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி.
Gay Parenting, உயிரணு தானம், தன்பாலின திருமணம் போன்ற தமிழ் சினிமாவில் பேசப்படாத விஷயங்கள் இந்த படத்தில் துணிச்சலுடன் பேசப்பட்டிருக்கிறது”, என்று இந்து தமிழ் திசை இந்த படத்தை பாராட்டியுள்ளது.
“இப்போது இருக்கும் இளைஞர்களிடம் உள்ள குழப்பங்களை பிரதிபலிக்கும் ஒரு காதல் கதையாக இந்த படத்தை கிருத்திகா உதயநிதி உருவாக்கியுள்ளார்.
அதிகம் பேசப்படாத விஷயங்களை துணிச்சலுடன் கூறி அதனை வெறும் தத்துவங்களாக பார்க்காமல், மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இத்திரைப்படத்தில் பேசப்பட்டுள்ளது”, என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்த படத்தை புகழ்ந்துள்ளது.
இது அனைத்து தரப்பு பார்வையாளர்களுக்கும ஏற்றவாறு இந்த படம் எடுக்கப்பட்டாலும். இன்னும் அழுத்தமான திரைக்கதை தேவைப்படுவதாக படத்தைப் பார்க்கும் போது மக்களுக்கு ஆங்காங்கே தோன்றலாம்”, என்று தினமணியின் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
“படத்தின் தொடக்கத்தில் வரும் எந்தவொரு காட்சிக்கும் சரியான பின்னணியோ, பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதிய வைக்கக் கூடியதாகவோ இல்லை.
குறிப்பாக நித்யா மேனனின் காதல் வாழ்க்கை முறிவுக்கு சொல்லப்படும் காரணமும், அவர் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு ஏற்படுவதற்கான காரணமும் சரியாக சொல்லப்படவில்லை”, என்று இந்து தமிழ் திசை கூறியுள்ளது.
மீண்டும் காதல் நாயகனாக ரவி
“கதையின் முக்கியமான புள்ளியாக நித்யா மேனன் இருந்து அற்புதமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார்.
பல வழிகளில், அவரது கதாபாத்திரம் ஓகே கண்மணியில் அவரது கதாபாத்திரத்தை பலருக்கு நினைவூட்டக்கூடும். ஆனால் இந்த படத்தில் நித்யா காதபத்திரம் செய்யும் சிறுசிறு விஷயங்களும் அவரை ரசிக்கும்படி இருக்கின்றன”, என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ளது.
“தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த நடிகர் ரவியை மீண்டும் ஒரு காதல் படத்தின் நாயகனாக இந்த திரைப்படத்தில் பார்த்ததில் புத்துணர்ச்சியாக இருந்தது.
ரவி மற்றும் நித்யா மேனன் ஆகியோரின் கதாபாத்திரங்கள் சரியாக அமைக்கப்படாமல் இருந்தாலும் அவர்களது நடிப்பு இதற்கு வலு சேர்த்துள்ளது. பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களில் நடக்கும் இந்த கதை அங்குள்ள மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது”, என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
“சினிமாவுக்கு உயிர்நாடியாக இருக்கும் உணர்ச்சிமிக்க காட்சிகள் இந்த படத்துக்கு கைக்கொடுக்கவில்லை. காட்சிகள் எந்தவித ஆழமும் இல்லாமல் மேம்போக்காக எழுதப்பட்டதால் அவை ரசிகர்களின் மனதில் எந்தவிதமான தக்கத்தையும் ஏற்படுத்தவில்லை”, என்று இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
“ரஹ்மானின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கும் தரத்தில் இனிமையாக வந்திருப்பது இந்த படத்துக்கு பலமாக இருக்கிறது. ஜெவியின் ஒளிப்பதிவில் பல காட்சிகள் கண்களைக் கவரும் வகை இருக்கின்றன”, என்று தினமணி குறிப்பிட்டுள்ளது.
“டி.ஜே.பானுவுக்கு இந்த படத்தில் வலுவான பங்கு இல்லை என்றாலும் அவர் சிறப்பாக நடித்துள்ளார். யோகி பாபுவின் நகைச்சுவை பெரிதாக எடுபடவில்லை என்றாலும், அவரது முந்தைய படங்களைப் போல எரிச்சல் ஊட்டவில்லை. வினய், லால், வினோதினி, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அனைவரும் நிறைவான நடிப்பை தந்திருக்கின்றனர்”, என்று இந்து தமிழ் திசை தெரிவித்துள்ளது.
இந்த படத்தில் நல்ல கதைக்கருவை எடுத்துக் கொண்ட இயக்குநர் அதற்கேற்ற சுவாரஸ்யமான திரைக்கதையை அளிக்காததால் காதலிக்க நேரமில்லை திரைப்படம் பேசப்படாத விஷயங்களை பற்றி பேசும் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாக மட்டுமே இருக்கிறது என்று அந்த விமர்சனம் கூறுகிறது.
–