ஆந்திரத்தில் நடைபெற்ற சேவல் சண்டை போட்டியில் இந்தாண்டு மட்டும் பந்தயத்தொகை ரூ.2,000 (இந்திய மதிப்பில்) கோடியைத் தாண்டியுள்ளது. அதிலும், ஒரு சேவல் சண்டையே போடாமல் வேடிக்கை மட்டும் பார்த்து ரூ.1.25 கோடியை வென்றிருக்கிறது.

பாரம்பரியம் கலாசாரத்தை மையமாகக் கொண்டு சேவல் போட்டிகள் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி மகரசங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திரத்தில் குறிப்பாக கோதாவரி மாவட்டத்தில் சேவல் பண்டிகை நடத்துவது மிக முக்கிய பாரம்பரிய விளையாட்டாகப் பார்க்கப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டு மட்டும் சுமார் ரூ.2,000 கோடி அளவிற்கு சேவல் பந்தயம் வெகுவிமர்சையாக நடத்தப்பட்டிருக்கிறது.

ஆந்திரத்தில் உள்ள கிருஷ்ணா மற்றும் என்டிஆர் மாவட்டங்களில் எடுபுகல்லு, ராமவரப்பாடு, இப்ராகிம்பட்டினம், மங்களகிரி, கன்னவரம், நுன்னா, திருவூரு, சிஞ்சிநாடா, பூலாப்பள்ளி மற்றும் பிற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் சேவல் சண்டையை கண்டுகளித்தனர்.

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரம் மற்றும் நர்சபுரம், ஏலூர் மாவட்டத்தில் உள்ள கைகளூர் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 1,000 இற்கும் மேற்பட்ட சேவல் சண்டை பந்தயங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

சேவல் சண்டை சூதாட்டமாக கருதப்பட்டாலும், இதனைத் தடுக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இருப்பினும், அரசியல்வாதிகளின் ஆதரவோடு சேவல் சண்டைப் போட்டிகள் சட்டவிரோதமாகவே வெகுவிமர்சையாக நடத்தப்பட்டு வருகிறது.

பொலிஸார் மற்றும் வருவாய்த்துறையினர் மீதும் அரசியல் தலைவர்கள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்துவதாக தெரிவிக்கின்றனர். பொதுமக்களுக்கும் இந்த விளையாட்டு மீதான ஆர்வம் அதிகமாக இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேற்கு கோதாவரி மாவட்டம் தாடேபள்ளியில் நடந்த போட்டியில் சேவல் பந்தய வளையத்துக்குள் சண்டையிடாமல் நின்ற ஒரு சேவல் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தது.

வளையத்துக்குள் போட்டியிட்ட 5 சேவல்களில் 4 சேவல்கள் தங்களுக்குள் சண்டையிட்டு மயக்க நிலையில் தோல்வியடைந்து போட்டியில் இருந்து வெளியேறியதும், சண்டையிடாமல் நின்ற இந்தச் சேவல், வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் பந்தயத்தில் குடிவாடா பிரபாகர் ராவ், நெமாலி புஞ்சு, பைபோகின வெங்கடராமையா மற்றும் ரத்தையா ரசங்கி புஞ்சு ஆகியோரின் சேவல்கள் போட்டியிட்டனர். இறுதியில் நெமலி புஞ்சுவின் சேவல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதுடன் ரூ.1.25 கோடி (இந்திய மதிப்பில்) பரிசையும் வென்றது.

திருச்சி எம். கே. ஷாகுல் ஹமீது

Share.
Leave A Reply