-தமிழகம் சென்ற தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுப்பதில் தான் அக்கறையாக இருந்தார்கள் என்றும், வடபகுதி மீனவர் அமைப்புகள் சில குற்றஞ்சாட்டியுள்ளன.

இந்திய மீனவர்களின் ஊடுருவல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் சட்ட ரீதியாக கடுமையாக நடந்து கொள்ளப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும், பிரதி அமைச்சர் ரத்ன கமகேயும் இது தொடர்பில் இலங்கை அரசின் அணுகுமுறை எவ்வாறானதாக இருக்கும் என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் கூறிவிட்டார்கள்.

எல்லை தாண்டி வரும் தமிழக மீனவர்கள் தொடா்ந்தும் கைது செய்யப்படுகிறார்கள். தமிழகத்தில் உருவாகும் எதிர்ப்புக்களையும் பொருட்படுத்தாமல் இவ்வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் மட்டும் 18 மீனவர்கள் கைதாகியுள்ளனர்.

தமிழகத்தில் இது எதிா்ப்பலையை உருவாகியிருந்தாலும், இவ் விடயத்தில் இலங்கை அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டால், இந்த ஊடுருவலை பெருமளவுக்குத் தடுக்க முடியும்.

சென்னையில் இவ்வார ஆரம்பத்தில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழகம் சென்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுவின் தலைவர் சிவஞானம் சிறிதரன் ஆகியோா் அங்கு தெரிவித்த கருத்துக்கள் இந்தப் பிரச்சினை குறித்த தமிழகத்தின் “புரிதல்” எந்த அளவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது.

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் இந்த மாநாட்டுக்குச் சென்றிருந்த போதிலும், இந்தப் பிரச்சனை தொடா்பாக அவா்கள் பேசவில்லை என்றும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுப்பதில் தான் அக்கறையாக இருந்தார்கள் என்றும், வடபகுதி மீனவர் அமைப்புகள் சில குற்றஞ்சாட்டியுள்ளன.

சிறீதரன் எம்.பி. இந்தப் பிரச்சனை தொடா்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு நேர ஒதுக்கீட்டைக் கேட்டுள்ளாரே தவிர, அது தொடா்பாக தமிழகத்தில் இருந்த போது முக்கிய பேச்சுக்கள் எதிலும் ஈடுபடவில்லை.

கருத்துக்களையும் வெளியிடவில்லை. “மீனவர்கள் பிரச்சினை தொடர்பாக தமிழக முதலமைச்சருடன் பேசுவதற்கு சந்தர்ப்பம் கேட்டுள்ளேன். வெகு விரைவில் இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பான சந்திப்பு நடைபெறும்” என்றும் சிறீதரன் கிளிநொச்சி திரும்பிய பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

தமிழக சட்டப் பேரவைக்கு தேர்தல் அடுத்த வருடத்தில் நடைபெற இருக்கும் நிலையில், இவ்வாறு பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தமிழக முதலமைச்சர் முன்வருவார் என்பது எதிா்பாா்க்கக்கூடியதல்ல. தமிழக அரசியல் தலைவா்களைப் பொறுத்தவரையில் அவா்களுக்கு தென் தமிழகத்தின் வாக்கு வங்கி பிரதானமானது.

ராமேஸ்வரம், கன்னியாகுமரி போன்ற பகுதிகளில் உள்ள மீனவா்களின் வாக்குகள் தீர்மானம் மிக்கவை. இந்தியப் பொதுத் தேர்தல் காலத்தில் இந்த வாக்குகளை இலக்கு வைத்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூட, ராமேஸ்வரத்தில் முக்கியமான உரைகளை நிகழ்த்தியிருந்தமை கவனிக்கத்தக்கது. அதனால், சிறீதரனின் கோரிக்கையை ஏற்று பேச்சுவார்த்தை ஒன்றுக்கு தமிழக முதலமைச்சர் முன்வருவார் என்பது எதிா்பாா்க்கக்கூடியதல்ல.

சென்னை மாநாட்டிற்கு தமிழ்ப் பிரதிநிதிகள் பயணமாகும் போதே இது தொடர்பில் வடபகுதியில் உள்ள மீனவர் அமைப்புக்களால் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தது.

தமிழக மீனவா்களின் ஊடுருவல்களால் வடபகுதி மீனவா்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடா்பாக இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழக முதலமைச்சருடனும், தி.மு.க. உட்பட முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனும் இலங்கையிலிருந்து செல்லும் பிரதிநிதிகள் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று கடற்றொழிலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் பகிரங்கமாகவே கோரிக்கைகளை முன் வைத்திருந்தார்கள்.

தமிழகத்தைப் பொறுத்த வரையில் மீனவர் பிரச்சினை ஒரு உணர்வுபூர்வமான விவகாரம். அதுவும் தேர்தல் சட்டமன்ற தேர்தல் எதிர்கொள்ளப்படும் நிலையில், அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை தமது அரசியலுக்கு தான் பயன்படுத்திக்கொள்ள முற்படுவார்கள்.

வடபகுதி மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தமிழகத்தின் “தமிழ்த் தேசிய“ அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு தெரியாதவையல்ல. ஆனால், அரசியலில் எந்த வேளையில் எதனைப் பேச வேண்டும் என்பதும் அவா்களுக்குத் தெரியும். வாக்கு வங்கிகளை இலக்கு வைத்ததாகவே அவா்களுடைய அரசியல் டிப்போதும் இருக்கும்.

மீன்பிடிப் படகுகளில் எல்லை தாண்டி வந்து பிடிபடுபவா்கள் அப்பாவி மீனவா்களாக இருக்கலாம்.

ஆனால், அவா்களை இயக்குபவா்கள் தமிழகத்தின் அரசியல் செல்வாக்கு மிக்க பெரும் முதலாளிகள். அவா்களிடம்தான் பெறுமதிவாய்ந்த ட்ரோலா் படகுகள் பெருமளவுக்கு உள்ளன.

மீன்வளத்தையும், கடல் வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதையும்விட உடனடியாக இலாபம் பெறுவதுதான் அவா்களுடைய இலக்கு. அவா்களுடைய நலன்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை தமிழக அரசியல் தலைவா்களுக்கும் உள்ளது. இந்த நிலையில்தான் தமிழக முதலமைச்சரும் இருக்கிறாா்.

முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

கடிதத்தில், இலங்கை அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விரைவாக விடுவிக்க இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண, இரு நாடுகளின் அதிகாரிகளும் உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவை மீண்டும் புதுப்பிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மீனவா்கள் கைது செய்யப்படும் போது, தமிழக முதல்வா் வழமையாக அனுப்பும் கடிதம்தான் இது. இதனை சில தினங்களுக்கு முன்னரும் அவா் அனுப்பியுள்ளாா்.

ஈழத் தமிழ் அரசியல் தலைவா்களைப் பொறுத்தவரையில், இவ்விடயத்தில் அவா்கள் பெருமளவுக்கு நழுவல் போக்கில்தான் செயற்பட்டுவருகின்றாா்கள். வடபகுதி மீனவா்களுக்கும் அவா்களின் இந்தப் போக்கு சீற்றத்தைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றது.

அதனால்தான், “இந்தப் பிரச்சினை – வடபகுதி மீனவா்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் தொடா்பாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினிடம் சொல்வதற்கு உங்களுக்கு பயமிருக்கலாம்.

ஆனால் வெளியே வந்து அங்குள்ள ஊடகங்களுக்கு என்றாலும் எமது மீனவர்களது வளங்கள் அழிப்பது குறித்து சொல்லுங்கள். எங்களது மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை சொல்லுங்கள்” என்று யாழ்ப்பாணம் மாவட்ட மீனவ சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் உப தலைவர் ரட்ணகுமார் தெரிவித்திருந்தமை கவனிக்கத்தக்கது.

பொதுத் தோ்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகள் வடபகுதியில் சந்தித்த தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்தால், மீனவா் பிரச்சினையில் அவா்கள் கையாண்ட நழுவல் போக்கும் ஒரு காரணம். வடபகுதியில் சுமாா் 50 ஆயிரம் மீனவா்கள் உள்ளாா்கள். அவா்களை நம்பி சுமாா் இரண்டரை இலட்சம் போ் அவா்களுடைய குடும்பத்தினராக உள்ளனா்.

பொதுத் தோ்தல் பரப்புரைகளின் போது, மீனவா்களுடைய பிரச்சினைகளை கையில் எடுத்தது தேசிய மக்கள் சக்தி மட்டும்தான். பாசையூரில் நடைபெற்ற இறுதிப் பரப்புரையின் போது கூட, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பிரச்சினை குறித்து பேசினாா். பொதுத் தோ்தலின் முடிவுகள் அதனைப் பிரதிபலித்தது.

இப்போதும், தேசிய மக்கள் சக்திதான் இந்தப் பிரச்சினையை கையில் எடுக்கின்றது. “தமிழக மீனவர்கள் எதேச்சதிகார போக்கில் இலங்கையின் கடல் வளங்களைச் சூறையாடுகிறன்றனர். அதனை தடுப்பதற்கே அரசாங்கம் சட்டத்தைக் கடுமையாக்கியுள்ளதுடன், கைதுகளையும் மேற்கொண்டு வருகின்றது” என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தமிழகத்தில் வைத்தே தெரிவித்திருக்கின்றாா்.

“தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு அனுப்பும் கடிதத்தில் தமிழக மீனவர்களின் அத்து மீறிய செயல்பாடுகள் குறித்து குறிப்பிடுவதில்லை.

யுத்தத்தால் நீண்டகாலம் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போதுதான் ஓரளவு மீண்டெழும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்” என்றும் தெரிவித்திருக்கும் சந்திரசேகா், “அவர்களின் வாழ்வாதாரம் சுரண்படும்போது அவர்களால் அடுத்த கட்டமாக என்ன செய்ய முடியும்?” என்றும் அவா் கேள்வி எழுப்பியிருக்கின்றாா்.

“பொட்டம் ட்ரோலிங் முறைமை எனப்படும் ட்ரோலர் படகுகளில் சட்டவிரோதமாக மீன்பிடியில் தமிழக மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று தமிழக முதலமைச்சரின் கோரிக்கை வைத்துள்ள அமைச்சா் சந்திரசேகா்,

“அந்த முறையை தடை செய்ய வேண்டும்” என்றும், “இலங்கையில் சட்டவிரோத மீன்பிடி முறை தடைசெய்யப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்கு கடல்வளத்தை பாதுகாத்து கொடுக்க வேண்டும். அதனையே இந்தியாவிடமும் தமிழக முதல்வரிடமும் கோருகிறோம்” என்றும் சென்னையில் வைத்து தமிழக ஊடகங்களில் கூறியிருக்கின்றாா்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் பேசத் தயங்கும், தமிழ் மக்களின் முக்கியமான ஒரு பிரச்சினையை இப்போதும் ஆளும் கட்சிதான் கைகளில் எடுத்து வைத்திருக்கின்றது.

இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காண்பதற்கு, இழுவை மடி வலைகள் மீதான தடையை கடுமையாக அமுல் செய்வது. எல்லைதாண்டும் மீனவா்களை கைது செய்வது. படகுகளைத் தடுத்து வைப்பது என்பவற்றை தொடா்ந்தும் நடைமுறைப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் தீா்வாக இருக்கும் என்றே தெரிகிறது. நீண்ட கால அடிப்படையில், ஊடுருவலைத் தடுப்பதற்கு இதுதான் வழி என்பதை அவா்கள் கண்டுணா்ந்துள்ளாா்கள் என்றே தெரிகின்றது!

-ஆா்.பாரதி-

Share.
Leave A Reply