சுமார் 400 வருடகாலம் பழமைவாய்ந்த தேசிய இறையாண்மை வரை முறைகளை மீறும் வகையில் உக்ரேன் மீது 2022இல் ரஷ்யா படை எடுத்தது. இது உலக ஒழுங்கில் ஏற்பட்ட பாரிய மாற்றமாக சர்வதேச ஆய்வாளர்கள் கருதினர்.

இன்று இந்த ஒழுங்கை வலியுறுத்தும் வகையில் அமெரிக்காவில் ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ள டொனால்ட் ட்ரம்ப், பனாமா கால்வாயையும் கிறீன்லாந்தையும் அமெரிக்கா தனது இறையாண்மைக்குள் கொண்டு வர விரும்புவதாக அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாது, கனடாவையும் ஒரு அமெரிக்க மாநிலமாக இணைத்து கொள்வது குறித்து பேசியபோது கனேடிய தலைமை மிக கடுமையான தொனியில் மறுத்துள்ளது.

கடந்த வாரம் பனாமா கால்வாய் விவகாரத்திலும் கிறீன்லாந்து மீதும் இராணுவ மற்றும் பொருளாதார அழுத்தத் தலையீடுகள் செய்யப்படுமா என்று வினவியபோது ட்ரம்ப் ”இல்லை என்னால் அந்த இரண்டையும் உறுதியாக கூறமுடியாது. ஆனால், ஒன்று மட்டும் கூற முடியும், எமது பொருளாதார பாதுகாப்புக்கு அவை தேவையாக உள்ளன” என்று கூறி உள்ளார்.

சுதந்திர பாராளுமன்ற அதிகார கட்டமைப்புகளுடன் டென்மார்க்கின் பிராந்தியமான கிறீன்லாந்தில் தலையீடு செய்யும் ட்ரம்ப்பின் கூற்று ஐரோப்பிய தலைவர்களை அதிர்ச்சிக்குள் உள்ளாக்கி உள்ளது.

ஜனநாயக நாடுகள் மத்தியில் அடிப்படை புரிந்துணர்வு ஒன்று உள்ளது. அது தமக்கிடையே எழும் முரன்பாடுகளை பேசித்தீர்த்து கொள்வதுடன் தமக்கிடையே எழக்கூடிய பதட்டநிலைகளை தவிர்த்து கொள்வதாகும்.

இந்த வகையில் அமெரிக்க அபிலாஷைகளுக்கு ஏற்ப ஐரோப்பிய நாடுகள் விட்டு கொடுத்து செல்லுமா என்பது ஒரு புறமாகவும் அல்லது அவை கூட்டாக ஐரோப்பிய இறையாண்மைக்கு சார்பாக நின்று அமெரிக்க ஏகாதிபத்திய விரிவாக்கத்தை தடுத்து நிறுத்துமா என்பது இன்னும் ஒரு புறமாகவும் உள்ளது.

டென்மார்க்கும் அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியனும் வட அத்திலாந்திக் பாதுகாப்பு அமைப்பான நேட்டோ அங்கத்தவர்களாக உள்ளன.

கிறீன்லாந்து தொடர்பான அமெரிக்க அதிபரின் கூற்றுக்கு ஆதரவாகவும் செயற்பட முடியாது எதிராகவும் செயற்பட முடியாத நிலையில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டே உள்ளார்.

மார்க் ருட்டே அண்மையில் நேட்டோ தலைவராக புதிதாக தெரிவு செய்யப்பட்டவராவார். ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் நேட்டோ தலைவரை மிக அதிக அழுத்தத்திற்கு உள்ளாக்கி உள்ளனர். கிறீன்லாந்தில் ஆயுதப்படைகளை பயன்படுத்தி தனது கட்டுபாட்டை அமெரிக்கா நிலைநிறுத்தாது என்று ட்ரம்ப் உறுதியாக கூறாத நிலையையிட்டு ஐரோப்பிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் அதிக கேள்விகளை எழுப்பி உள்ளனர்.

ட்ரம்ப் ஏற்கெனவே, தான் பதவி ஏற்றதன் பின்பு நேட்டோக்வுக்கான அமெரிக்க பங்களிப்பை அதிக அளவில் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக எதையும் கூற முடியாத நிலையில் நேட்டோ தலைவர் உள்ளார்.

ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்புக்கு கிறீன்லாந்து குறித்து ஏன் இந்த அளவு ஆர்வம் என்பது இங்கே உள்ள முக்கியமான கேள்வியாகும். அடிப்படையில் கிறீன்லாந்து டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகனிலும் பார்க்க நியூயோர்க்குக்கு மிக அருகாமையில் உள்ளது

ஆனால், இது மாத்திரம் அமெரிக்க முதலாளி வர்க்கத்தை கவரவில்லை . 2023 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தால் எடுக்கப்பட்ட தரவுகளின் படி கிறீன்லாந்தில் இருக்கக் கூடிய 34 வகையான தாதுப் பொருட்களில் 25 வகையானவை உலகிலே வேறு இடங்களில் பெற்றுக் கொள்ள முடியாத அருமையாக கனிம வளங்களாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கிறீன்லாந்தில் எண்ணெய் மற்றும் எரிவாயு மிக அதிக அளவில் கிடைக்க கூடியதாக உள்ளது . பனிபாறைகளால் மூடப்பட்டு கிடந்த நிலம் தற்பொழுது பூகோள தட்ப வெட்ப நிலை அதிகரித்து வரும் காரணத்தால் அதிக அளவில் வெற்றுத் தரைகளாக வெளி தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் அங்கு அகழ்வு பணிகளை ஆரம்பிப்பது மிகவும் இலகுவானதாக உள்ளது என்று ஐரோப்பிய புவியியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பூகோளத்தின் வடக்கு உச்சியிலே உள்ள ஆட்டிக் பகுதியில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்த ஆய்வு நிறுவனங்கள் தமது வளர்ச்சிக்கு தேவையான கனிமவளங்களை தேடி மிக வேகமாக போட்டி போட்டு வருகின்றன.

18ஆம் நூற்றாண்டிலிருந்து கிறீன்லாந்து டென்மார்க்கின் காலணி பிராந்தியமாக இருந்து வருகிறது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின்பு கிறீன்லன்ட் காலனித்துவத்திலிருந்து விடுபட்டதாக அறிவிக்க பட்டபோதிலும் டென்மார்க் தனது நிர்வாகக் கட்டுபாடுகளை செய்து வருகிறது.

இதற்காக வருடா வருடம் 565 மில்லியன் டொலர் வரையிலான நிதி ஒதுக்கீடு டென்மார்க்கினால் செய்யப்படுகிறது. இதனால் கிறீன்லாந்தின் இறையாண்மை தமது அதிகாரத்திற்குட்பட்டது என்ற டென்மார்க் உரிமைகோரி வருகிறது. கிறீன்லாந்தின் கனிம வளங்களும் பூகோள மூலோபாய அமைவும் டென்மார்க்கின் அதீத சிரத்தைக்குள்ளாகி உள்ளன.

அதேவேளை கடந்த காலங்களில் கிறீன்லாந்தில் சனத்தொகை அதிகரிப்பை தடுக்கும் வகையில் பெண்கள் பலவந்தமாக கருத்தடைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வந்துள்ளனர். அதையும் மீறி குழந்தைகளை பெற்று கொண்ட போதிலும் பெற்றாரின் விருப்பத்திற்கு மாறாக குழந்தைகள் டென்மார்க்கிற்கு எடுத்து செல்லப்பட்டு பராமரிக்கப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன.

1979ஆம் ஆண்டு தமக்கென பாராளுமன்றம் ஒன்றை உருவாக்கி கொண்டதிலிருந்து இனவிருத்திக்கு எதிரான நடவடிக்கைகளில் இருந்து பெருமளவில் மீட்சி கண்டு வருவதாக குறிப்பிடப்பட்ட போதிலும் வெளிவிவகார நடவடிக்கைகளும் பாதுகாப்புக் கொள்கையும் கொப்பன்ஹேகனாலேயே கையாளப்படுகின்றன.

நிலப்பரப்பில் உலகிலேயே மிகவும் பெரிய தீவு என்ற பெயர் பெற்ற கிறீன்லாந்தில் தற்போது வாழும் மக்கள் வெறும் 60,000 மட்டுமே. இவர்கள் தாம் தனி நாடாக வாழ விரும்புவதாக அறிவித்து வருகின்றனர். தமது நிலமும் அதை சூழ்ந்த பனிப்பாறைகளும் வட அத்திலாந்திக் கடலும் தமது இறையாண்மைக்கு உட்பட்டது என்று கூறி உள்ளனர்.

அத்துடன் தாம் ஒரு பொழுதும் அமெரிக்க அதிகாரத்தின் கீழ் வாழ விரும்ப வில்லை என்று அறிவித்துள்ளனர்.

கொப்பன்ஹேகனுடன் பேச்சுகள் நடத்துவதன் மூலம் சிறிது சிறிதாக பரவலாக்கம் செய்யப்பட்ட ஆதிகாரங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நகர்த்தி வருவதாக உள்ளூர் மக்களின் அறிக்கைகள் கூறுகின்றன.

ட்ரம்ப் அவர்களின் விருப்பம் அண்மையில் வெளியானதை தொடர்ந்து டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் புதிய பாதுகாப்பு கட்டமைப்புகளை கிறீன்லாந்து மக்கள் மத்தியிலேயே உருவாக்கும் வகையில் நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதமளவில் டென்மார்க் பாராளுமன்ற தேர்தல் இடம்பெற உள்ளது. இந்த கால கட்டத்தை சாதகமாக பயன்படுத்தும் வகையில் தமக்கான சர்வஜன வாக்கெடுப்பாக கருதி, சுதந்திரமான தனி நாட்டுக்கான வேண்டுகோளாக முன்வைப்பதற்கு கிறீன்லாந்து மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிறீன்லாந்து மக்களை பொறுத்த வரையில் தமது நிலம் தமக்கே சொந்தம் தமது எதிர்காலத்தை தாமே தீர்மானிக்கும் சட்டஉரிமை கொண்டவர்கள் என்பதில் உறுதியாக உள்ளனர். வல்லரசுகளுக்கோ பாரிய பனிப்பாறைகளுக்கு அடியில் கிடைக்க கூடிய கனிமவளங்கள் அந்த பிராந்தியத்தில் வாழ கூடிய மக்கள்தொகையை நிர்வகிப்பதில் ஏற்படக் கூடிய செலவுகளிலும் பார்க்க அதிக லாபம் தர கூடியது.

-லோகன் பரமசாமி-

Share.
Leave A Reply