உத்தர பிரதேசத்தில், குடிகார கணவர்களின் துன்புறுத்தல்களால் அவர்களுடைய மனைவிகள் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர்.

உத்தர பிரதேசத்தின் தியோரியா நகரில், சிவன் கோவில் ஒன்று உள்ளது. கவிதா மற்றும் குஞ்சா என்ற பப்லு ஆகிய 2 பெண்கள் இந்த கோவிலுக்கு வந்தனர். அவர்கள் இருவரும் நேற்று முன்தினம் (23) மாலை, ஒருவருக்கொருவர் மாலை மாற்றியபடி திருமணம் செய்துகொண்டனர்.

இதனை பார்த்து கோவிலுக்கு வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதில், குஞ்சா மணமகன் போல் கவிதாவின் நெற்றியில் குங்குமம் வைத்ததுடன், இருவரும் மாலை போட்டு சடங்குகளை செய்து, திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் பற்றி குஞ்சா கூறும்போது,

“நாங்கள் இருவரும் முதன்முதலாக இன்ஸ்டாகிராம் வழியே தொடர்பு கொண்டோம். எங்களுடைய இருவரின் கணவர்களும் மதுபானத்திற்கு அடிமையானவர்கள். குடித்து விட்டு போதையில் வந்து தகராறில் ஈடுபடுவார்கள். இந்த தகவலை நாங்கள் பரிமாறி கொண்டோம்.

ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம்” என்றார்.

“கணவர்களால் துன்புறுத்தல்களுக்கு ஆளான நாங்கள், அமைதி மற்றும் அன்பான வாழ்க்கையை மேற்கொள்ள முடிவு செய்தோம். ஒரு தம்பதியாக கோரக்பூரில் வசிக்க போகிறோம். நாங்கள் இருவரும் குடும்பம் நடத்துவதற்காக வேலைக்கு செல்வோம்” எனவும் கூறினார்.

திருமணம் பற்றி கோவில் பூசாரி உமா சங்கர் பாண்டே கூறும்போது,

“அந்த பெண்கள் 2 பேரும் திருமண மாலைகள் மற்றும் குங்குமம் ஆகியவற்றை வாங்கி கொண்டு வந்து, சடங்குகளை செய்தனர். அதன்பின்னர் அமைதியாக திரும்ப சென்று விட்டனர்” என்றார்.

 

Share.
Leave A Reply