‘ரஷ்யாவின் வாசலில் யாரோ நிற்கிறார்கள். அதைப் பற்றிய அவர்களின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’ எனும் ரஷ்யாவுக்கு ஆதரவான டொனால்ட் ட்ரம்ப் கருத்துகள் உக்ரைனை கொதிப்படைய வைத்துள்ளன.

போர் 2022இல் தொடங்குவதற்கு முன்பு, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கலாம். உக்ரைனை நேட்டோவில் சேர்க்காமல் விலக்கி வைக்க ட்ரம்ப் ஒப்புக் கொண்டிருப்பார். மேலும் ஜோ பைடன் விரும்பத்தகாத பிற சலுகைகளையும் ரஷ்யாவிற்கு வழங்கியிருப்பார் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் ரஷ்யா_-உக்ரைன் போரை நூறு நாட்களில் முடிவுக்குக் கொண்டு வரும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளார்.

இன்னமும் இத்திட்டம் பற்றிய அதிகாரபூர்வ முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

ஆனால் டொனால்ட் ட்ரம்பின் குழு ஏப்ரல் மாதத்திற்குள் மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. குடியரசுக் கட்சித் தலைவரும் அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் ​ெமாஸ்கோவிற்கு வழங்கிய நிபந்தனைகள் பற்றியும் தெளிவாக விளக்கப்படவில்லை.

டொனால்ட் ட்ரம்ப் கடந்த திங்களன்று ஜனவரி 20இல் பதவியேற்ற நாளில் பல நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.

உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது அவரது முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

உக்ரைனுக்கான ட்ரம்பின் சிறப்புத் தூதர் ஓய்வுபெற்ற அமெரிக்க ஜெனரல் கீத் கெல்லாக் இது குறித்து கூறுகையில் “இராஜாங்க தொழில்முறை மட்டத்தில் ஒரு இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறேம், அதை நூறு நாட்களில் நிர்ணயிப்போம்” என்று கூறினார்.

அடுத்த மாதம் இப்போரின் மூன்றாவது ஆண்டு நிறைவு அடைய உள்ளது. ஆனால் ட்ரம்பின் உக்ரைன் நூறு நாள் போர் நிறுத்த திட்டம் எவ்வளவு நம்பிக்கையுடன் தோன்றினாலும், நூறு நாட்கள் என்பது மிகவும் கடினமான ஒன்றாகும் எனக் கூறப்படுகிறது.

‘ரஷ்யாவை மீண்டும் சிறியதாக்குங்கள்’ என ட்ரம்ப் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் போது கூறிய வார்த்தைகள் ரஷ்யாவை மேலும் கொதிப்படைய வைத்துள்ளன.

மே 2023 இல், ட்ரம்ப் தெரிவித்த “நான் அதிகாரபூர்வமாக ஜனாதிபதியானால் 24 மணி நேரத்திற்குள் மோதல் முற்றிலும் முடிந்துவிடும்” என்று கூறியமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இவ்வருட ஜனவரி 7இல் அமெரிக்காவின் புளோரிடாவில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் “உக்ரைன் போரை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவீர்கள்?” என்று கேட்டதற்கு, ட்ரம்ப் “24 மணி நேரத்தில் அதைச் செய்வேன்” என்ற பிரசார அறிக்கையிலிருந்து விலகி, பேச்சுவார்த்தை மிகக் கடினமானது என்று தெரிவித்தார்.

அத்துடன் போர்நிறுத்தம் பற்றிய ட்ரம்பின் அவசரம் உக்ரைனை பதற்றப்படுத்தியுள்ளது.

“இந்தப் போரில் உக்ரைன் வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?” என்று அமெரிக்க அன்றைய துணைத் தலைவர் கமலா ஹாரிஸுடனான ஒரு பிரசார விவாதத்தின் போது வினவப்பட்ட போது, ​​”போர் நிறுத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உயிர்களைக் காப்பாற்ற விரும்புகிறேன்” என்றே பதிலளித்தார்.

ட்ரம்பின் பதவியேற்பின் பின்னர் அடுத்த நாள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் உதவியாளர் நிகோலாய் பட்ருஷேவ், “உக்ரைன் இல்லாமல், ஐரோப்பிய ஒன்றியம் இல்லாமல் அமெரிக்காவும் ரஷ்யாவும் உக்ரைன் உடன்பாட்டை எட்ட வேண்டும்” என்று கூறினார்.

ஆயினும் போர்நிறுத்தத்திற்கு கிவ்வும் ​மொஸ்கோவும் பொருந்தாத விதிமுறைகளை வெளிப்படுத்தி வருகின்றன.

ரஷ்ய துருப்புகளை அதன் பிரதேசத்திலிருந்து முழுமையாக திரும்பப் பெறவும், உடனடி நேட்டோ உறுப்பினர் பதவியை பெறவும் கிவ் அரசு கோருகிறது.

ஆனால் ​ெமாஸ்கோ தான் கைப்பற்றி வைத்துள்ள எந்த நிலத்தையும் திருப்பித் தருவது குறித்து எந்த கேள்வியும் இல்லை என்றும், உக்ரைனை நேட்டோவிலிருந்து சேர விடாமல் தடுத்து, நீக்க விரும்புகிறது என்றும் கூறுகிறது.

அதேவேளை “ரஷ்யாவின் வீட்டு வாசலில் யாரோ இருக்கிறார்கள், அதைப் பற்றிய அவர்களின் உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது” எனும் ரஷ்யாவிக்கு ஆதரவான டொனால்ட் ட்ரம்ப் கருத்துகள் உக்ரைனை கொதிப்படைய வைத்துள்ளன.

உண்மையில் உக்ரைனிய போர் பெரும்பாலும் தரையில் நிலையானதாக இருப்பதால், வான்வெளியின் கட்டுப்பாடும், நிலையான போர் நிதியை தொடர்ந்து பெறுவதையும் பொருட்டே போரின் வெற்றியைத் தீர்மானிக்க அதிக வாய்ப்புள்ளது என்று இராணுவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் உக்ரைன் மேற்கத்தேய ஏவுகணைகளைப் பயன்படுத்துவதில் உள்ள தடைகளை நீக்கி, ரஷ்யாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

30 பில்லியன் ​ெடாலர் பாதுகாப்பு நிதியை உருவாக்கி, அதன் சொந்த ஆயுதங்களை பாரிய அளவில் உற்பத்தி செய்ய உக்ரைன் திட்டமிட்டுள்ளது.

கடந்த சில வாரங்களில் ரஷ்யாவில் அதன் மூலோபாய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் ரஷ்யாவின் போர் முயற்சிக்கு முக்கியமான இரசாயன வசதிகளைத் தாக்கியுள்ளது.

ரஷ்ய தாக்குதல்களைத் தொடர்ந்து தாங்கும் திறன் குறித்து உக்ரைன் சமீபத்தில் நம்பிக்கையுடன் உள்ளது.

அதே நேரத்தில் ரஷ்ய இராணுவத்தை சோர்வடையச் செய்யும், ரஷ்யாவில் போருக்கு அரசியல் ஆதரவை இழக்க வழிவகுக்க உக்ரைன் விரும்புகிறது.

தற்போது ரஷ்யாவின் பாதுகாப்புச் செலவு அதிக பணவீக்கத்திற்கும், 21 சதவீத மத்திய வங்கி வட்டி வீதத்திற்கும் வழிவகுத்துள்ளது. சில ஆய்வாளர்கள் புட்டினுக்கு வரவிருக்கும் நிதிச் சிக்கல்களை சுட்டிக்காட்டி போரை நிறுத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

​மொஸ்கோ இப்போது ஒரு இக்கட்டான நிலையை எதிர்கொள்கிறது. போரநிறுத்தத்தை அது எவ்வளவு காலம் தள்ளி வைக்கிறதோ, அவ்வளவு அதிகமாக கடன் நிகழ்வுகள், பெருநிறுவன மற்றும் வங்கி பிணை எடுப்புகள் போன்றவை, கட்டுப்பாடில்லாமல் எழ முடியும்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின், டொனால்ட் ட்ரம்ப் உட்பட சர்வதேசத் தலைவர்களுடன் பேச்சில் ஈடுபடுவதற்கான தனது திறந்த தன்மையை தொடர்ந்து கூறியுள்ளார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அண்மையில் தெரிவித்துள்ளார்.

–ஐங்கரன் விக்கினேஸ்வரா…

Share.
Leave A Reply