வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Yaan Bifengxia என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகை புலியின் சிறுநீரை ஒயினுடன் கலந்து குடித்தால் முடக்குவாதம், தசை வலி, சுளுக்கு போன்ற நோய்கள் குணமாகும் என அந்தப் பூங்காவிற்குள் பாட்டிலில்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன்மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

மேலும், சைபீரியன் புலியின் 250 கிராம் சிறுநீர் பாட்டில்கள் ஒவ்வொன்றும் 50 யுவான் அளவுக்கு (இந்திய மதிப்பில் ரூ.600) விற்கப்பட்டுள்ளது. இதை, பார்வையாளர் ஒரு தனது எக்ஸ் தளத்தில் எடுத்து பகிர்ந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இவ்விவகாரம் எதிர்வினையாற்றியுள்ளது. அதை வாங்கிய பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டுள்ளனர். அதில் ஒரு பயனர், “என் அப்பாவுக்காக இதை வாங்கினேன். ஆனால் எந்த விளைவையும் காண முடியவில்லை” எனப் பதிவிட்டுள்ளார். இன்னொருவர், “சிறுநீரில் பாக்டீரியா பரவாதா? இதைப் பற்றி யோசிப்பது மிகவும் நல்லது” என அறிவுரை வழங்கியுள்ளார்.

இதையடுத்து, இவ்விவகாரம் அந்த நாட்டு ஊடகத்துறை வரை விவாதத்தில் இறக்கியது. இதுகுறித்து சீனாவில் உள்ள ஹூபே மாகாண பாரம்பரிய சீன மருத்துவ மருத்துவமனையின் மருந்தாளர் ஒருவர், “ஆதாரம் இல்லாமல் அதன் மதிப்பை மிகைப்படுத்துவது பாரம்பரிய சீன மருத்துவத்தை சிதைக்கிறது. மேலும் இது புலியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கிறது. புலி சிறுநீர் ஒரு பாரம்பரிய மருந்து அல்ல. இதன் வாயிலாக எந்த மருத்துவ பயன்களும் நிரூபிக்கப்படவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

சீன மருத்துவ நூல்களில், புலி குறித்த மருத்துவக் குறிப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அத்தகைய வைத்திய முறைக்கு சீன அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால், இவ்விவகாரமும் சீன அரசாங்க கவனத்துக்குக் கொண்டுசெல்லப்படும் எனக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply