கம்புறுப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தறை வீதியிலுள்ள வீடொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை (31) இரண்டு பெண்கள் வீழ்ந்து கிடந்துள்ளதாக கம்புறுப்பிட்டிய பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
குறித்த இரு பெண்களில் ஒருவர் தலையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையிலும் மற்றையவர் கதிரையில் மயங்கிய நிலையிலும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவர் திருமணமாகாத 33 வயதுடைய கம்புறுபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியை ஆவார். மயங்கிக்கிடந்த பெண்ணை மீட்ட பொலிஸ் அதிகாரிகள் அவரை கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இறந்தவரான ஆசிரியை தனது தாய் மற்றும் சகோதரருடன் அந்த வீட்டில் வசித்து வந்தாகவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தவரின் தாய் எனவும், இது கொலைச் சம்பவம் எனவும் பொலிஸாரின் விசாரணையில் இருந்து தெரிவந்துள்ளது.
சந்தேகத்தின் பேரில் இறந்தவரின் 36 வயதான சகோதரர் மற்றும் 76 வயதான தாயை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் பொலிஸாருக்கு எழுதியதாக சந்தேகிக்கப்படும் இரத்தக்கறை படிந்த கடிதத்தைக் கண்டுபிடித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் தாயார், தனது மகளைக் கொலை செய்ததாக குறிப்பிட்டுள்ளார், மகள் தனக்கு தொந்தரவாக இருந்ததாகவும், அதிகப்படியான பேராசை காரணமாக 14 ஆண்டுகளாக சொத்துக்காக சண்டையிட்டு வந்ததாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கொலை இடம்பெற்ற நாளில் தனது கழுத்தை நெரிக்க மகள் வந்ததால் தான் இந்த கொலையை செய்ததாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
76 வயதான தாயாரும் அதிகப்படியான மருந்துகளை உட்கொண்டு நாற்காலியில் மயங்கிக் கிடந்துள்ளதாகவும், அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என்றும் பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
சடலம் கம்புறுப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கம்புருப்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.