மொனராகலை, கரடுகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீல்கல ஹெகொலொந்தெனிய பகுதியில், தனது மருமகனை துடைப்பத்தால் அடித்து பலத்த காயப்படுத்தி, அவரது மூன்று பற்களை உடைத்த மாமியார் சனிக்கிழமை (8) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிதிமாலியத்த, ஹேவன் வத்த பிரதேசத்தை சேர்ந்த கே.எம். சரத் குமார என்பவர் மூன்று வருடங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, மனைவி கணவனை விட்டு பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தனது தாயின் வீட்டில் தங்கியிருந்துள்ளார் .

கணவன் இது தொடர்பில் ரிதிமாலியத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த பின்னர் மாதத்திற்கு ஒரு முறை தனது மாமியார் வீட்டிற்கு சென்று இரண்டு குழந்தைகளையும் பார்க்க அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த நபர் 2024.11.31 ஆம் திகதி தனது மாமியார் வீட்டிற்கு சென்ற போது, ​​“ஏன் இங்கே வந்தாய்? உனக்கு இங்கே மனைவியோ குழந்தைகளோ இல்லை” என்று திட்டி அவர் முகத்திலும் துடைப்பத்தால் அடித்துள்ளார்.

இந்தத் தாக்குதலின் விளைவாக மருமகனின் மூன்று பற்கள் உடைந்து, பலத்த காயமடைந்து பிபில ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். மருத்துவ அறிக்கைகளின் பின்னர், சம்பவம் தொடர்பாக 48 வயதுடைய மாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பான கரடுகல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply