இலங்கை தமிழ் அரசியல் சமுதாயம் ஒரு குறுகிய கால இடைவெளியில் இரு மூத்த அரசியல் தலைவர்களை இழந்து விட்டது. இருவருக்கும் இடையில் சுமார் பத்து வயது வித்தியாசம் இருந்தபோதிலும், அவர்கள் ஆறு தசாப்தங்களுக்கும் அதிகமான காலத்தை இலங்கை தமிழர்களின் ஜனநாயக ரீதியான அரசியல் உரிமைப் போராட்டத்துக்காக அர்ப்பணித்தவர்கள்.
இராஜவரோதயம் சம்பந்தன் மரணமடைந்து ஏழு மாதங்கள் நிறைவடைவதற்கு இரு நாட்கள் இருந்த நிலையில் மாவை சேனாதிராஜா 2025 ஜனவரி 29 ஆம் திகதி புதன்கிழமை காலமானர். அவரது இறுதிக் கிரியைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊரான மாவிட்டபுரத்தில் பெருமளவு மக்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.
மாவை சேனாதிராஜாவையும் சம்பந்தனையும் பல்வேறு அம்சங்களில் ஒப்பீடு செய்யமுடியாது என்ற போதிலும், உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களுக்கும் அதிகமான காலப் பகுதியில் இலங்கை தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்த பிரதான அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்புக்களில் இருந்தவர்கள் என்ற வகையில் அவர்கள் இருவருக்கும் இடையில் ஓர் ஒற்றுமை இருந்தது.
தமிழ் அரசியல் சமுதாயம் முன்னெப்போதையும் விட படுமோசமான முறையில் சிதறுண்டு பொறுப்புவாய்ந்த ஒரு தலைமைத்துவம் இல்லாமல் நெருக்கடியில் சிக்கியிருப்பதால் இருவரும் தங்களது இறுதி நாட்களை பெரும் வேதனையுடனேயே கழித்திருப்பார்கள் என்பதில் இன்னொரு ஒற்றுமையும் அவர்களுக்கு இடையில் இருக்கிறது. அத்தகைய ஒரு துரதிர்ஷ்டவசமான நிலைக்கு அவர்களே பெருமளவுக்கு பொறுப்பும் கூட.
இறந்தவர்களைப் பற்றி கெடுதியாகப் பேசுவதை தவிர்ப்பது ஒரு பாரம்பரியப் பண்பாக பொதுவில் கருதப்படுகிறது. மனிதர்களாகப் பிறந்த நாம் எல்லோரும் ஒரு நாள் இறக்கத்தான் போகிறோம். ஆனால், வாழும் காலத்தில் எமது வாழ்க்கைமுறை மற்றும் செயற்பாடுகள் மூலமாக எத்தகைய மரபை நாம் விட்டுச்செல்லப் போகிறோம் என்பதே முக்கியமானதாகும். அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, இது மேலும் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
தங்களைப் பின்பற்றியவர்கள் தொடர்ந்து அரசியல் பயணத்தை முன்னெடுப்பதற்கு அரசியல் தலைவர்கள் விட்டுச் சென்றிருக்கக்கூடிய வழிகாட்டல்களையும் அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் செயற்பாடுகளில் இருந்து பெறக்கூடிய படிப்பினைகளையும் விமர்சன அடிப்படையில் ஆராய்வது எதிர்காலத்துக்கான சரியான பாதையை தீர்மானிக்க உதவும் என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.
மாணவப் பருவத்தில் இருந்தே இலங்கை தமிழரசு கட்சியின் செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சேனாதிராஜா தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தில் பல வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்ததுடன் கணிசமான தியாகங்களைச் செய்த ஓர் அரசியல் தலைவர். எஸ்.ஜே.வி. செல்வநாயகம், அப்பாபிள்ளை அமிர்தலிங்கம், எம். சிவசிதம்பரம் போன்ற முன்னைய முதுபெரும் தலைவர்களுடன் நெருக்கமாகச் செயற்பட்ட அவர் பேரினவாத மேலாதிக்கத்துக்கு எதிரான தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தின் அடையாளமாக நீண்ட காலமாக விளங்கிய ஒருவர்.
சேனாதிராஜாவை அரை நூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக அறிந்தவரான மூத்த பத்திரிகையாளரும் முக்கியமான அரசியல் ஆய்வாளருமான நண்பர் டி.பி.எஸ். ஜெயராஜ், சேனாதிராஜாவின் மறைவையடுத்து கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் தியாகங்கள் நிறைந்த போராட்டங்களைச் செய்த இளம் சேனாதிராஜாவை நினைவில் வைத்திருப்பவர்கள் அவரை கண்டனம் செய்யவோ அல்லது விமர்சனம் செய்யவோ தயங்குவார்கள் என்றும் அவரிடம் பிற்காலத்தில் ஏற்பட்ட விரும்பத்தகாத மாற்றத்துக்கு மத்தியிலும் கடந்த காலத்தை நினைவில் வைத்து அவர் மீது அவர்கள் தொடர்ந்தும் அனுதாபம் காட்டினார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சேனாதிராஜா அவரது இறுதிக்கால அரசியல் வாழ்க்கைக்காக அல்ல, கடந்தகால தியாகங்களுக்காக மாத்திரமே நினைவு கூரப்பட வேண்டியவர் என்பதே பெரும்பாலானவர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
அரசியல்வாதிகள் தங்களது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் எத்தகைய தியாகத்தைச் செய்திருந்தாலும், தலைமைத்துவப் பொறுப்புக்கு வந்த பிறகு அவர்கள் தாங்கள் தலைமை தாங்கும் இயக்கத்துக்கும் மக்களுக்கு எவ்வாறு வழிகாட்டுகிறார்கள் என்பதும் வாழும் முறையால் எவ்வாறு முன்னுதாரணமானவர்களாக விளங்குகிறார்கள் என்பதுமே அவர்களின் மரபாக வரலாற்றில் நினைவுகூரப்படும்.
உள்நாட்டுப் போரின் முடிவுக்கு பிறகு இலங்கை தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மடியில் தானாக வந்து வீழ்ந்தது. அதன் தலைவராக இருந்த சம்பந்தன், போருக்கு பின்னரான காலப் பகுதியில் தமிழ் மக்களின் வலுவான ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கூட்டமைப்பை கட்டியெழுப்புவதற்கு தன்னை எந்தளவுக்கு அர்ப்பணித்தார் என்பதும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் போராட்டத்தை சமகால உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு இசைவாக எந்தளவுக்கு நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னெடுப்பதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார் என்பதுமே அவரின் அரசியல் மரபாக நினைவு கூரப்படும் என்று கடந்த வருடம் நடுப்பகுதியில் அவரின் மறைவுக்கு பிறகு இந்த பத்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
2004 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வீடு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்ட காரணத்தினால், நீண்டகால உறங்கு நிலையில் இருந்த தமிழரசுக் கட்சி புத்துயிர் பெற்றது. அதற்கு பின்னரே அந்த கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான அங்கத்துவ கட்சியாக தன்னை ஒப்பீட்டளவில் முனைப்புடன் மீண்டும் காட்டிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை தோன்றியது. கடந்த இருபது வருடங்களாக ஒருவருக்கு பின் ஒருவராக தமிழரசு கட்சிக்கு தலைமை தாங்கிய சம்பந்தனையும் மாவை சேனாதிராஜாவையும் தவிர, கூட்டமைப்பின் சிதைவுக்கும் தமிழரசு கட்சியின் இன்றைய பரிதாபகரமான நிலைக்கும் வேறு யாரை பொறுப்பு என்று கூறமுடியும்?
தமிழரசுக் கட்சியைப் போன்று உள்ளக முரண்பாடுகளினால் சீரழிந்து கொண்டிருக்கும் வேறு எந்தவொரு கட்சியையும் இன்று இலங்கையில் காணமுடியாது. கடந்த வருட முற்பகுதியில் அந்த கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கு பொதுச் சபையில் நடத்தப்பட்ட தேர்தலும் இதற்கு முக்கியமான காரணம்.
தமிழரசுக் கட்சியின் 75 வருடகால வரலாற்றில் முன்னர் ஒருபோதுமே தலைவரை தெரிவு செய்வதற்கு தேர்தல் நடத்தப்பட்டதில்லை. தேர்தலை நடத்தினால் கட்சியின் அணிகளுக்குள் முரண்பாடுகள் வளர்வதை தவிர்க்க முடியாது என்பதை தெளிவாக உணர்ந்த காரணத்தினாலேயே தமிழரசு கட்சியின் தாபக தலைவர்கள் ஏகமனதாக தலைவரை தெரிவு செய்யும் பாரம்பரியத்தை கடைப்பிடித்து வந்தனர். 1970 களின் முற்பகுதியில் தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு அமிர்தலிங்கத்துடன் போட்டிடுவதற்கு முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராஜதுரை முயன்ற வேளையில் அவருக்கு செல்வநாயகம் ஆலோசனை கூறி இணங்கவைத்து, ஏகமனதாக அமிர்தலிங்கம் தெரிவாவதற்கு வழிவகுத்தார்.
புதிய தலைவரை பாரம்பரியத்தின் பிரகாரம் ஏகமனதாகவே தெரிவு செய்யவேண்டும் தமிழரசு கட்சியின் நலன்களில் அக்கறை கொண்ட தரப்புகள் இடையறாது வேண்டுகோளை விடுத்த போதிலும் கூட சம்பந்தனாலேயோ அல்லது சேனாதிராஜாவினாலேயோ தேர்தலை தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் நோக்கினால், அந்த தேர்தல் போட்டியின் விளைவாக ஏற்படக்கூடிய சூழ்நிலையை தங்களது அரசியல் நலன்களை பாதுகாப்பதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்துவதில் அவர்கள் மறைமுகமாக அக்கறை காட்டினார்கள் எனலாம்.
அத்துடன் அவர்கள் எதிர்காலத் தலைவர்களை உருவாக்குவதில் அக்கறை காட்டாமல் இறுதிவரை பதவிகளில் இருப்பதிலேயே நாட்டம் காட்டினார்கள். அதனால் கட்சிக்குள் அவர்கள் மீதான மதிப்பும் மரியாதையும் கூட குறைவடையத் தொடங்கியது. தங்களது அனுபவத்துக்கும் மூப்புக்கும் பொருத்தமான முறையில் நடுநிலையாக அவர்கள் செயற்படவில்லை. மாறாக முரண்பாடுகளை ஊக்குவிக்கக்கூடிய அணுகுமுறைகளையே அவர்கள் கடைப்பிடித்தார்கள் என்பதே உண்மையாகும்.
தமிழ் மக்களினதும் கட்சியினதும் நலன்களுக்கும் மேலாக சம்பந்தனும் சேனாதிராஜாவும் தங்களது அரசியல் நலன்களுக்கும் பதவி நிலைகளுக்கும் முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டார்கள். அதன் விளைவாகவே தமிழரசு கட்சி இன்று சீரழிவுக்கு உள்ளாகியிருக்கிறது. தலைவர் தேர்தல் ஒரே கட்சியைச் சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலானதாக அன்றி இரு அரசியல் எதிரிகளுக்கு இடையிலானதைப் போன்றே அமைந்திருந்தது. அந்த தேர்தலில் போட்டியிட்ட இருவரும் கடந்த ஒருவருட காலமாக கடைப்பிடித்து வருகின்ற அணுகுமுறைகளும் அவற்றின் விளைவாக வடக்கில் தமிழரசு கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கை இழந்த சூழ்நிலைகளும் புறம்பாக ஆராயப்பட வேண்டியவை.
சம்பந்தனின் மறைவுக்கு பிறகு கடந்த ஏழு மாதகாலமாக சேனாதிராஜா நடந்து கொண்ட விதம் அவரது பல தசாப்த கால அரசியல் அனுபவத்துக்கு எந்தவகையிலும் பொருத்தமானதாக அமைந்திருக்கவில்லை. அதன் விளைவாக தமிழரசுக் கட்சிக்குள் தனது அந்தஸ்தை தீர்மானிப்பதில் எந்த விதமான செல்வாக்கையும் செலுத்த முடியாத பரிதாப நிலை அவருக்கு ஏற்பட்டது மாத்திரமல்ல, அவருக்கு விசுவாசமானவர்கள் என்று தங்களை அடையாளம் காட்டிக் கொண்டவர்கள் கூட அவரைப் பாதுகாக்க முன்வராமல் வெறும் பார்வையாளர்களாக இருந்தனர்.
அரசியல் கட்சி ஒன்றின் தலைவர் எவ்வாறு செயற்படக்கூடாது என்பதற்கு மாத்திரமல்ல, ஒரு கட்சி அதன் மூத்த தலைவரை எவ்வாறு நடத்தக்கூடாது என்பதற்கும் கூட மாவை சேனாதிராஜா ஒரு உதாரணமாகும். இது நிச்சயமாக இன்றைய மற்றைய தமிழ் அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக தமிழரசு கட்சி அரசியல்வாதிகளுக்கு ஒரு படிப்பினையாக அமையவேண்டும். அதை அவர்கள் உணர்ந்து செயற்படுவார்கள் என்று நம்புவது கஷ்டம்.
வழமையாக அரசியல் தலைவர்களின் இறுதிச் சடங்குகள் பிளவுபட்டு நிற்கும் அவர்களின் கட்சிகளின் அணிகள் வேறுபாடுகளை மறந்து ஐக்கியப்பட்டுச் செயற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதே இயல்பாகும். ஆனால், ஒரு அரசியல் தலைவரின் இறுதிச்சடங்கு எவ்வாறு நடத்தப்படக்கூடாது என்பதற்கு கடந்த வாரம் மாவிட்டபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் உதாரணமாக அமைந்து விட்டது கவலைக்குரியதாகும்.
தமிழரசுக் கட்சிக்குள் பிளவுபட்டு நிற்கும் அணிகள் எதிர்காலத்தில் இணக்கப்பாட்டுக்கு வந்து ஐக்கியமாக அரசியல் பயணத்தை தொடராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்பதில் அக்கறைகொண்ட சக்திகளே மாவை சேனாதிராஜாவின் இறுதிச் சடங்குகளை பொறுப்பேற்று நடத்தினார்கள் போன்று தெரிகிறது.
வீரகத்தி தனபாலசிங்கம் Virakesari