இன்றளவில் திருமணம் நடப்பது என்பது மிகவும் சவாலான விஷயமாக மாறிவிட்டது, அதிலும் குறிப்பாக Arrange Marriage என்பது பெரும் தலைவலியுமாக மாறிவிட்டது. மணமகன் மணமகள் வீட்டார்கள் போட்டிப்போட்டு டிமாண்ட் வைக்கும் காரணத்தால் ஏகப்பட்ட நெருக்கடி.

இப்படியிருக்கும் சூழ்நிலையில், இதுவரையில் கேள்விப்படாத வித்தியாசமான காரணத்தைக் கூறி பெண் வீட்டார் ஒரு திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம், மூர்திஸாபூரில் நிச்சயக்கப்பட்ட ஒரு திருமணம், மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினரிடையே எந்தவிதமான கருத்து வேறுபாடும் இன்றி, திடீரென திருமணம் நிறுத்தப்பட்டது. திருமணம் நிறுத்தப்பட காரணம் என்னவென்று கேட்டால் தான் ஷாக்.

மணமகனின் CIBIL score மிகவும் மோசமான இருந்ததைத் தொடர்ந்து பெண்வீட்டார் இந்த திருமணத்தை நிறுத்தியுள்ள வினோதமான சம்பவம், திருமணங்களில் நிதி நிலைத்தன்மையின் முக்கியத்துவத்தைப் பற்றி சமூகவலைத்தளத்தில் புதிய விவாதம் தொடங்கியுள்ளது.

இரு குடும்பத்தினரும் ஏற்கனவே திருமணத்திற்குச் சம்மதித்து, திருமணத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. அப்போது மணமகளின் மாமா, மணமகனின் CIBIL மதிப்பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். சாதாரணமாகத் தோன்றிய இந்த விஷயம், திருமணத்தையே நிறுத்திவிட்டது.

மணமகனின் CIBIL மதிப்பெண்ணைப் பரிசோதித்ததில், அவர் பல்வேறு வங்கிகளில் இருந்து பல கடன்கள் வாங்கியிருப்பதும், அதைச் சரியாகச் செலுத்தாமல் இருப்பதும் சிபில் ஸ்கோர் வாயிலாகத் தெரியவந்தது. இது மணமகனின் நிதி நிலைமையைக் கேள்விக்குறியாகியது.

சிபில் ஸ்கோர் சொல்வது என்ன..?: குறைந்த CIBIL மதிப்பெண் என்பது, ஒரு நபர் தனது கடன்களைச் சரியாக நிர்வாகம் செய்யப்படுவதில்லை என்பதையும், தவணைத் தொகைகளைச் செலுத்தத் தவறுகிறார் அல்லது கடனையே திருப்பிச் செலுத்தாமல் இருக்கிறார் என்பதையும் குறிக்கிறது.

இன்றைய போட்டி மிகுந்த வாழ்க்கையில் நிதிநிலை மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்த மணமகளின் குடும்பத்தினருக்கு, இந்தத் தகவல் தனது மகளின் எதிர்கால நிதிப் பாதுகாப்பைப் பற்றிய கேள்விகளை எழுப்பியது. மணமகளின் மாமா-வின் கருத்தும் நியாயமாக இருந்ததைத் தொடர்ந்து இருவீட்டாரும் பேசி திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

அப்படி பார்த்தால் இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு திருமணம் மணமகனின் CIBIL ஸ்கோரால் நிறுத்தப்பட்டு உள்ளது. இனி வரும் காலத்தில் இந்திய திருமணத்தில் மணமகன், மணமகளின் சிபில் ஸ்கோர் முக்கியமான விஷயமாக மாறப்போகிறது.

CIBIL மதிப்பெண் என்பது 300 முதல் 900 வரை உள்ள மூன்று இலக்க எண். இது ஒரு நபரின் கடன் வரலாற்றின் ஸ்னாப்ஷாட் போன்றது. அதிக மதிப்பெண்கள், பொறுப்பான நிதி நிலையையும் மற்றும் குறைந்த மதிப்பெண்கள் என்பது நிதிச் சிக்கல்களைக் குறிக்கின்றன.

கடன் வழங்குபவர்கள், ஒரு தனி நபருக்கு கடன் கொடுப்பதன் மூலம் ஏற்படும் அபாயத்தை மதிப்பிடுவதற்கு CIBIL மதிப்பெண்களை பெரிதும் நம்புகின்றனர். தற்போது இது ஒரு திருமணத்தின் தலைவிதியை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Share.
Leave A Reply