ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், முன்னாள் இராணுவப் புலனாய்வுத்துறை பிரதானி மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவையும், கைது செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக பிவிதுரு ஹெலஉறுமயவின் தலைவரான உதயகம்மன்பில தெரிவித்திருக்கின்றார்.

கடந்த திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில் அவர் இது பற்றிய தகவல்களை வெளியிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் , ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பாக புதிய விசாரணைகளை முன்னெடுப்பதாக அறிவித்திருந்தது.

முன்னைய அரசாங்கங்கள் போல, இதற்கென எந்தவொரு விசாரணைக்குழுவும் அமைக்கப்படவில்லை.

அதற்குப் பதிலாக, குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளின் மூலமே இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதற்கென குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரியாக இருந்து, ஓய்வுபெற்ற ஷானி அபேசேகர, தற்காலிகமாக மீளவும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டார்.

இந்த விசாரணைகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளிப்படையாக தெரிவிக்கப்படவில்லை.

அதுபோல விசாரணையின் முன்னேற்றங்கள் தொடர்பான தகவல்கள் ஊடகங்களுக்கு பகிரப்படாமல் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கின்றன.

இத்தகைய நிலையில் சுரேஷ் சலேவை கைது செய்வதற்கான நகர்வுகளில் அரசாங்கம் இறங்கியிருப்பதாக உதய கம்மன்பில கூறியிருப்பது, எதனை அடிப்படையாக கொண்டது என்று தெரியவில்லை.

அவர் ஒன்றில், எழுந்தமானமான முறையில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்க வேண்டும். அல்லது சில தகவல்களை அடிப்படையாக வைத்து அவர் இதனை கூறி இருக்கலாம்.

அல்லது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சுரேஷ் சலே ஆகியோர் மீது சுமத்தப்பட்டிருக்கின்ற குற்றச்சாட்டுக்களின் உண்மைதன்மையின் அடிப்படையில், இதுதான் நடக்கப் போகிறது என்ற அனுமானத்தை கொண்டும் அவர் இதனை கூறியிருக்கலாம்.

விசாரணைகளின் போக்கு, எதனை இலக்கு வைத்து நகர்கிறது என்பதை உணர்ந்திருந்தால், அவர் இவ்வாறு அனுமானத்தின் அடிப்படையில் கூறியிருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு முக்கிய காரணமாக இருந்தவர் என சுரேஷ் சலே மீது குற்றம் சாட்டப்பட்டது.

ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் நோக்கில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் இந்த சதி திட்டம் தீட்டப்பட்டதாக, தற்போது சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ள, அசாத் மௌலானா சனல் 4 ஊடகத்திற்கு வழங்கிய சாட்சியத்தில் கூறியிருந்தார்.

பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனின் தனிப்பட்ட செயலாளராக இருந்த அசாத் மௌலானா, இந்த சதி திட்டத்தில் பிள்ளையானுக்கும் பங்கு இருந்தது என்றும், மட்டக்களப்பு சிறையில் இருந்து கொண்டு, பிள்ளையானிடம் சுரேஷ் சலே உதவிகளைப் பெற்றிருந்தார் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

புதிய அரசாங்கம் இந்த சாட்சியங்களையும் கவனத்தில் எடுத்து விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரிகிறது.

அதன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டால், யார் யார் குறி வைக்கப்பட்டுவார்கள் என்பதை அனுமானிப்பது கடினமான விடயம் அல்ல.

இந்தச் சூழலில் தான், கோட்டாபய ராஜபக்ஷவும், சுரேஷ் சலேவும் விரைவில் கைது செய்யப்படக் கூடும் என்ற அனுமானத்தை உதய கம்மன்பில வெளியிட்டிருக்கிறார்.

அவர் இவ்வாறு கூறியிருப்பதால், அவர்கள் குற்றவாளிகள் அல்ல என்று தீர்மானிக்கவும் முடியாது. சந்தேக நபர்களாக பெயரிடப்படமாட்டார்கள் என்று உத்தரவாதப்படுத்தவும் முடியாது.

ஏனென்றால், இந்த விவகாரத்துடன் அவர்கள் தொடர்புபட்டிருப்பதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. விசாரணைகளை திசை திருப்பியதாக, தடுத்து நிறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இந்த நிலையில் , அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் உண்மையா – பொய்யா? என்ற கோணத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகத் தெரிகிறது.

இந்த விசாரணைகளில் அவர்கள் குற்றவாளிகளாகவும் இனங்காணப்படலாம், நிரபராதிகளாகவும் அடையாளப்படுத்தப்படலாம்.

விசாரணைகளின் போக்கும், நீதிமன்ற விசாரணைகளும், குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான சாட்சியங்களும் தான், அதனை முடிவு செய்யும்.

அதனை யாரும் முன்கூட்டியே தீர்மானம் செய்ய முடியாது.

இவ்வாறான நிலையில், உதய கம்மன்பில, மக்களை முன்கூட்டிய சில தீர்மானங்களை எடுக்க வைக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அசாத் மௌலானாவை இந்த வழக்கில் சாட்சியம் அளிக்க வைப்பதற்காக, இலங்கைக்கு வரவழைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இதில் உண்மை இருப்பதாக தெரிகிறது. பொலிஸ் அதிகாரிகள் சிலரும் இதனை உறுதி செய்து இருக்கிறார்கள்.

அசாத் மௌலானா கல்முனை நீதிமன்றத்தினால் பயணத் தடை விதிக்கப்பட்ட ஒருவர்.

அந்த தடையை மீறியே, வெளிநாடு சென்று சுவிட்சர்லாந்தில் அடைக்கலம் தேடிக் கொண்டார்.

இந்த தடை அமுலில் இருக்கும் போது, அவர் நாடு திரும்ப முடியாது. அப்படித் திரும்பினால் விமான நிலையத்திலேயே கைது செய்யப்படுவார்.

அதனால் அவருக்கு எதிராக, கல்முனை நீதிமன்றம் பிறப்பித்த பயணத் தடை உத்தரவு நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அசாத் மௌலானா

அசாத் மௌலானாவின் இரண்டாவது மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தான் அந்த தடை விதிக்கப்பட்டது.

பிள்ளையான் கொடுத்த அழுத்தங்களை அடுத்தே, நீதிமன்றத்தில் அசாத் மௌலானா மீது முறைப்பாடு செய்ததாக, அவரது மனைவி நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்திருப்பதாக உதய கம்மன்பில தெரிவித்திருக்கிறார்.

இதன் அடிப்படையிலேயே, நீதிமன்றத்தினால் பயணத் தடை நீக்கப்பட்டிருப்பதாகவும் உதய கம்மன்பில கூறி இருக்கிறார்.

நடந்துவரும் இந்த சம்பவங்கள் அனைத்தும், உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கின் விசாரணைகளில் முன்னோக்கிய நகர்வுகள் இடம்பெறும் அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

ஏற்கெனவே பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தும், இந்த விசாரணைகள் ஒரு தீர்க்கமான பதிலைத் தரும் என்று நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

இப்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில், கோட்டாபய ராஜபக்ஷவோ, சுரேஷ் சலேயோ கைது செய்யப்பட்டால், அதனை ஒரு பழிவாங்கும் செயலாக அடையாளப்படுத்துவதற்கு, உதய கம்மன்பில போன்றவர்கள் தயாராகி வருகின்றனர்.

அவர்கள் கைது செய்யப்படுவார்களா இல்லையா என்பது இதுவரை நிச்சயமாகவில்லை.

அதற்குள், அவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் வகையில், அவர்களை காப்பாற்றும் வகையில், உதய கம்மன்பில போன்ற அதிதீவிர சிங்கள தேசியவாதிகள் செயற்படுகிறார்கள்.

இந்தளவுக்கும், உதய கம்மன்பில, விமல் வீரவன்ச போன்ற கடும்போக்காளர்கள், கோட்டாபய ராஜபக்ஷவுடன் முரண்பட்டு கொண்டு, அவரது அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.

ஆனால், இப்பொழுது மீண்டும் அவர்கள், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சார்பாக செயற்பட தொடங்கியிருப்பது, சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் தான் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

அவர்களுக்கு இடையிலான பழைய உறவு, மீண்டும் புதுப்பிக்கப்படுவதாக தெரிகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் விவகாரத்தில், புதிய அரசாங்கம் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் என்ன, என்பது பற்றி இன்னமும் தீர்க்கமாக தெரியாத போதும், அதனை முன்னிறுத்தி வெளியிடப்படும் கருத்துக்கள் சந்தேகங்களை எழுப்புகிறது.

விசாரணைகளை திசை திருப்பி, அரசியல் பழிவாங்கலே முன்னெடுக்கப்படுகிறது என்ற கருத்தை உருவாக்கி விட்டால், உண்மையான குற்றவாளிகளைத் தேடிப் பிடித்து தண்டிக்கின்ற நிலை ஏற்பட்டாலும் கூட, அவர்கள் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டார்கள் என்று அர்த்தம் கற்பிக்க முடியும்.

அப்படியொரு சூழலை உருவாக்குவதே உதய கம்மன்பிலவின் நோக்கமாகத் தெரிகிறது.

ராஜபக்ஷவினரைப் பொறுத்தவரையில், பல முனைகளில் இந்த அரசாங்கத்திடம் இருந்து நெருக்குதல்களை எதிர்கொண்டு வருக்கிறார்கள்.

இதிலிருந்து மீள்வதற்கு அவர்கள் எத்தகைய வழிமுறைகளையும் பயன்படுத்த தயாராகவே இருப்பார்கள்.

இதையெல்லாம் எதிர்கொள்ள கூடிய வகையில் அரசாங்கம் தயார் நிலையில் இருந்தால் தான், ஈஸ்டர் ஞாயிறு விசாரணை விடயத்தில் எதையும் எதிர்கொள்ளக் கூடியதாக இருக்க முடியும்.

-சுபத்ரா

Share.
Leave A Reply