பாலஸ்தீனத்தில் 1948 ஆம் ஆண்டில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அந்த மண்ணின் மூலமுதல் குடியிருப்பாளர்களான 7 இலட்சத்துக்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் இடம்பெயரச் செய்யப்பட்டனர்.

அந்த வலுக்கட்டாயமான பெரும்  வெளியேற்றத்தை பாலஸ்தீனர்கள் ‘நக்பா’ (பெருங்கேடு) நினைவுகூருகிறார்கள். 1967 ஆம் ஆண்டில் இடம்பெற்ற 6 நாள் போரின்போது மேலும் பெரும் எண்ணிக்கையான பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அவர்களில் ஒரு பிரிவினர்  காசா பள்ளத்தாக்கிற்கும் இன்னொரு பிரிவினர் மேற்கு ஆற்றங்கரைக்கும் நகர்ந்த அதேவேளை, பெரும்பான்மையானவர்கள் ஏனைய நாடுகளுக்கு தப்பிச்சென்றார்கள்.  அங்கெல்லாம் அவர்களும் அவர்களின் வழித்தோன்றல்களும் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள்.

தொடர்ச்சியாக நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அந்த அகதிகள் தங்களது சொந்த மண்ணுக்கு திரும்பிவருவதற்கான உரிமையை இஸ்ரேல் திட்டவட்டமாக நிராகரித்தது.

இப்போது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த 15 மாதங்களாக இஸ்ரேலின் இடையறாத குண்டுவீச்சுத் தாக்குதல்களினால் அழிவுக்குள்ளான மத்தியகரைக்கடல் ஓரமாக அமைந்திருக்கும் காசா பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 23 இலட்சம் பாலஸ்தீனர்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு விரும்புகிறார்.

பாலஸ்தீனர்களை அயல் அரபு நாடுகளுக்கு போகவைப்பதும்  ‘ நரகம்’ என்று அவர் அழைத்த  360 சதுர கிலோ மீற்றர் பள்ளத்தாக்கை பொறுப்பேற்று அதை மத்திய கிழக்கின் ‘ றிவீரா’ வாக (கடற்கரையோர வனப்புமிகு பிரதேசமாக)   அபிவிருத்தி செய்வதும்  ஜனாதிபதி ட்ரம்பின் திட்டமாகும். வாஷிங்டனில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகுவுடன் சேர்ந்து நடத்திய செய்தியாளர்கள் மகாநாட்டில் ட்ரம்ப்  தேவையானால் காசாவுக்கு துருப்புக்களை அனுப்புவது குறித்தும் கூட பேசினார்.

ஜனாதிபதி பாலஸ்தீனர்களை தற்காலிகமாக இடம்பெயரவைப்பது குறித்தே பேசுகிறார் என்று பிறகு வெள்ளை மாளிகை அறிவித்தது.

அமெரிக்க துருப்புக்களை காசாவில் நிலைவைப்பதில் அவர் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை, ஆனால்  காசா தொடர்பிலான அவரின்  ‘ வழமையான சிந்தனைக்கு மாறான ‘ யோசனை கருத்தூன்றிய ஒன்றாகும் என்று வெள்ளை மாளிகை தெளிவுபடுத்தியது.

ஆனால், ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்துக்கு மூன்று அடிப்படைப் பிரச்சினைகள் இருக்கின்றன. முதலாவதாக, இஸ்ரேலும்  அமெரிக்காவும்  அவற்றின் விருப்பத்துக்கு  குண்டு வீச்சுக்களை நடத்துவதற்கும் அப்புறப்படுத்துவதற்கும் பாலஸ்தீனர்கள் ஒன்றும் ஏகாதிபத்தியத்தின் சொத்து அல்ல. அவர்கள் கூட்டு வரலாற்றைக் கொண்ட தேசிய அடையாளத்துடனான மக்கள். சமகாலத்திலும் எதிர்காலத்திலும் பாலஸ்தீன மண்ணுடன் அவர்கள் பிணைக்கப்பட்டவர்கள்.

இஸ்ரேலின் இடையறாத குண்டுவீச்சுகளுக்கு மத்தியிலும் காசாவை விட்டுச் செல்வதற்கு பாலஸ்தீனர்கள் மறுக்கிறார்கள். இப்போது ட்ரம்ப் முன்வைக்கும் யோசனை அடிப்படையில் இனச் சுத்திகரிப்புக்கான ஒரு அழைப்பேயாகும். அதாவது இன்னொரு ‘  நக்பா.”

இரண்டாவதாக, அரபு நாடுகள் ( அமெரிக்காவின் நேச அணிகளாக இருக்கும் பல அரபு நாடுகள் உட்பட ) ட்ரம்பின் யோசனையை திட்டவட்டமாக நிராகரித்திருக்கின்றன.

பலவந்தமாக அகற்றப்பட்ட பாலஸ்தீனர்களினால் சொந்த மண்ணுக்கு மீண்டும் ஒருபோதும் திரும்பக்கூடியதாக இருக்கவில்லை எனபதை அந்த நாடுகள் விளங்கிக்கொள்கின்றன. எதேச்சாதிகார அரபு ஆட்சியாளர்கள் கூட அவர்கள் எவ்வளவுதான் அமெரிக்க உதவியில் தங்கியிருந்தாலும், தங்களது சொந்த மக்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள்.

மூனாறாவதாக, காசாவை மீளக்கட்டியெழுப்பும் ட்ரம்பின் நோக்கு காசாவில் இஸ்ரேலியர்களை மீளக்  குடியமர்த்தும் இஸ்ரேலிய தீவிர வலதுசாரி நிகழ்ச்சித்திட்டத்துக்கு நெருக்கமாக இசைவானதாக இருக்கிறது.

இது ஏற்கெனவே விரக்கியடைந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் சனத்தொகை ஒன்றை மேலும் அன்னியப்படுத்தும் என்பதுடன் மேற்காசியாவில் இன்னொரு  “ரைம் பொம்மை” வைப்பதாகவும் இருக்கும்.

ஜனாதிபதி ட்ரம்ப் இனச் சுத்திகரிப்புக்கான அழைப்பைக் கைவிட்டு அதற்கு பதிலாக காசாவில் வெற்றிகரமான போர்நிறுத்தம் ஒன்றை உறுதிசெய்வதற்கு அமெரிக்காவின் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும்.

அத்துடன் அமெரிக்கா  நிலைபேறானதும் நியாயமானதுமான தீர்வொன்றை காண்பதற்கு , அதாவது பாலஸ்தீனர்களின் உரிமைகளை அங்கீகரிக்கக்கூடியதும் பிராந்தியத்தில் அமைதி சமாதானத்தையும் உறுதிப்பாட்டையும் உத்தரவாதம் செய்யக்கூடிய கோட்பாட்டை பேணிக்காக்கக் கூடியதுமான தீர்வை காண்பதற்கு பாடுபடவேண்டும்.

(தி இந்து)

Share.
Leave A Reply