ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளுக்கு நியாயமற்ற முறையில் வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளைப் பற்றி கடந்த மாதம் 19ஆம் திகதி களுத்துறையில் நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார்.

ஒவ்வொரு முன்னாள் ஜனாதிபதிக்கும் அல்லது அவரது விதவை மனைவிக்கும் அவரவருக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலின் அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதன் படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்புக்காக 60 அதிகாரிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அது போதாது என்று அவர் அடம் பிடிப்பதாக இருந்தால் அந்த 60 பேரையும் நீக்கிவிடுவதாக எச்சரித்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களின் பெறுமதியை அரச மதிப்பீட்டுத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளதாகவும் அதன் படி மஹிந்த ராஜபக்‌ஷ வைத்திருக்கும் அரச விடுதியின் பெறுமதி 350 கோடி ரூபாய் எனவும் அதனை சுற்றியுள்ள ஒரு ஏக்கர் காணியை இன்னமும் மதிப்பீடு செய்யவில்லை எனவும் அவ்வீட்டை வாடகைக்கு விடுவதாக இருந்தால் மாதாந்தம் 46 இலட்சம் ரூபாவுக்கே வாடகைக்கு விட வேண்டும் என்று மதிப்பீட்டுத் திணைக்களம் மதிப்பிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.

அந்த வீடு 30,500 சதுர அடி பரப்புள்ளதாகவும் அதனைப் புதுப்பிக்க மஹிந்த பொது மக்களின் பணத்தில் 47 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட ஜனாதிபதி அனுரகுமார, ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் படி, அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி ஒருவருக்கு வாடகையின்றி பொருத்தமான ஒரு வீட்டை வழங்க வேண்டும் அல்லது அவரது சம்பளத்தில் மூன்றில் ஒன்றுக்குச் சமமான ஒரு தொகை வீட்டு வாடகையாக மாதாந்தம் அவருக்கு வழங்க வேண்டும் என்றும் கூறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வீட்டு வாடகை வழங்குவதாயின் அவரது மாதச் சம்பளத்தின் படி அவருக்கு 30,000 ரூபாவே வழங்க வேண்டும் என்பதால் 46 இலட்சம் ரூபாய் வாடகை பெற வேண்டிய தற்போது அவர் இருக்கும் வீட்டை விட்டு அவர் வெளியேற வேண்டும் அல்லது மாதாந்தம் 46 இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்றும் ஜனாதிபதி அக்கூட்டத்தில் கூறினார்.

இந்த விடயங்களைத் தனியார் தொலைக்காட்சியொன்றினால் நடத்தப்பட்ட நேர்காணலொன்றிலும் குறிப்பிட்ட ஜனாதிபதி, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் அரச வீடொன்றை பெற முயலவில்லை என்று கூறி அதற்காக ரணிலுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவும் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் விதவை மனைவியான ஹேமா பிரேமதாசவும் புதிய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் தொடர்பான முடிவை எடுத்தவுடன் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அரச வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் அங்குத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது அரச இல்லங்களில் மஹிந்த ராஜபக்‌ஷ, மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா குமாரதுங்க ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் மூவர் மட்டுமே தங்கியுள்ளனர்.

அரசியல் என்பது மக்கள் சேவையாக வேண்டுமேயல்லாமல், பொது மக்களின் பணத்தில் கோடிக்கணக்கு ரூபாய் செலவில் நியாயமற்ற சலுகைகளைப் பெறும் வியாபாரமாகக் கூடாது என்பது தேசிய மக்கள் சக்தி நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் விடயமாகும்.

அதன் அடிப்படையில், எம்.பிக்கள் உள்ளிட்ட ஓய்வு பெற்ற அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படும் சகல சலுகைகளும் இரத்துச் செய்யும் திட்டத்தின் கீலேயே முன்னாள் ஜனாதிபதிகளின் ஆடம்பர வீடுகளை மீளப் பெற தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனை எதிர்க்க முடியுமா? அரசியல் என்பது சிறப்புரிமைகளை எதிர்பார்க்காத மக்கள் தொண்டாக வேண்டும் என்பதை எதிர்க்க முடியுமா? அது மக்கள் தொண்டாக மேற்கொள்ளப்பட்டாலும் அரசியல்வாதிகள் தமது சொந்த செலவில் தொண்டாற்ற வேண்டும் என்றோ பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றோ கூற முடியாது.

எனவே, அவர்கள் குறிப்பிட்ட சம்பளத்தை பெறுவதையோ தங்குமிட வசதியை, வாகனம் ஒன்றை அல்லது பயணச் செலவை பெறுவதையோ எதிர்க முடியாது. ஆனால், ஐந்து வருடங்கள் பதவியில் இருந்தால் ஓய்வூதியம் பெறுவதற்கான பொது மக்களுக்கு இல்லாத உரிமை வழங்கப்பட வேண்டுமா?

சொந்த வீடில்லாத எவரும் இது வரை ஜனாதிபதியாகவில்லை. சந்திரிகாவுக்கு சொந்தமான கொழும்பில் ரொஸ்மிட் பிளேஸில் உள்ள வீட்டை அவர் ஹோட்டல் ஒன்றுக்கு பெருந் தொகை வாடகைக்குக் கொடுத்து விட்டு, பொது மக்கள் பணத்தில் அரச விடுதியொன்றைப் பெற்றுக்கொண்டு இருக்கிறார். மைத்திரிபால சிறிசேனவும் சொந்த வீட்டை வைத்துக்கொண்டே அரச விடுதியில் வசிக்கிறார்.

மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு தங்காலையில் கால்டன் என்ற பிரசித்தி பெற்ற வீடு இருக்கிறது. பெலியத்தையில் மெதமுலன வளவ்வ என்ற தந்தை வழியாகக் கிடைத்த வீடும் இருக்கிறது. அவ்வாறு இருக்க 350 கோடி ரூபாய் பெறுமதியான அரசுக்குச் சொந்தமான வீடொன்றில் இருக்கிறார். உன்ன உணவின்றி கஷ்டப்படும் மக்களின் வரிப்பணத்திலேயே இவர்களது இந்த ஆடம்பர வாழ்க்கை பராமரிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள 60 பாதுகாப்பு அதிகாரிகளையும் நீக்கத் தயார் என்று ஜனாதிபதி அனுரகுமார கூறியிருப்பது சிறந்த அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதாக அவர் வழங்கியிருக்கும் வாக்குறுதிக்குப் பொருத்தமானதல்ல.

முன்னாள் இன்னாள் அரச தலைவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கும் பாதுகாப்பானது ஒருவரின் விருப்பத்தின் படி, அகற்றக் கூடியதல்ல. அது சம்பந்தப்பட்டவருக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள் தொடர்பான உளவுத்துறை மதிப்பீட்டின் படி, வழங்க வேண்டியதாகும்.

மஹிந்தவுக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பும் அவ்வாறான மதிப்பீடொன்றின் படியே வழங்கப்பட்டு இருப்பதாயின் ஜனாதிபதி அனுரகுமாரவின் விருப்பத்தின் படி, அதனைக் குறைக்கவோ அகற்றவோ முடியாது.

புலிகளுடனான போரில் மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்களிப்பு எத்தகையது என்பது சர்ச்சைக்குரியதாகும்.

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகள் மாவிலாறு அணைக்கட்டை மூடியதை அடுத்தே இறுதி போர் ஆரம்பமாகியது. புலிகள் அணைக்கட்டை மூடிய போது, தாக்குதலை ஆரம்பிப்போம் என்று தாம் உள்ளிட்ட சிலர் கூறியதாகவும் அப்போது மஹிந்த ஆபாசமான வார்த்தையொன்றை கூறி அதனை மறுத்ததாகவும் சம்பிக்க ரணவக்க பிற்காலத்தில் கூறியிருந்தார்.

போர் முடிவடையும் தறுவாயில் இருந்த 2008 ஆம் ஆண்டு சீனாவில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெற்றதால், சீனா, இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதை இடை நிறுத்தியது. அப்போது ஜனாதிபதியாக இருந்த மஹிந்த மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்‌ஷ கையை விரித்ததாகவும் தாம் தமது சொந்த நட்புறவைப் பாவித்து பாகிஸ்தான் இராணுவத் தளபதியிடம் ஆயுதம் பெற்று போரை தொடர்ந்ததாகவும் முன்னாள் இருணுவத் தளபதி சரத் பொன்சேகா நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

ஆயினும், போர் வெற்றியின் பெருமை மஹிந்தவிடமே சென்றடைந்தது. எனவே, மஹிந்தவுக்கு இப்போதும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என்று கூற முடியாது.

மக்கள் விடுதலை முன்னணியின் முதலாவது கிளர்ச்சியின் போது, கதிர்காமத்தில் பிரேமவதி மனம்பேரி என்ற யுவதி பகிரங்கமாக வீதியில் நிர்வாணமாக்கிக் கொன்றமைக்காக இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு 16 வருடச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதில் ஒரு அதிகாரி 16 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலையாகி வந்த உடன் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பேராளி ஒருவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்தார்.

பாரிய இயக்கம் ஒன்று இல்லாவிட்டாலும், Lone wolf attacks (தனித்த ஓநாயின் தாக்குதல்கள்) எப்போதும் உலகில் எங்கும் இடம்பெறலாம் என்று உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை அடுத்து அப்போதைய இராணுவத் தளபதி மஹேஷ் சேனாநாயக்க கூறினார். எனவே, மஹிந்தவுக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கூற முடியாது.

ஆனால் மஹிந்த அதிகாரத்தில் இருந்த போது அது போல் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியிருந்த இராணுவ அதிகாரிகளின் பாதுகாப்பை அரசியல் காரணத்துக்காக நீக்கி பெரும் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

மேஜர் ஜெனரல் லக்கி அல்கம தெற்கிலும் வடக்கிலும் கிளர்சசிக்காரர்களின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டவராக இருந்தார்.

அவர் ஓய்வு பெற்று ஐதேகவுடன் இணைந்த போது சந்திரிக்காவின் அரசாங்கம் அவரது பாதுகாப்பை அகற்றியது. மஹிந்தவும் அந்த அரசாங்கத்தின் மூத்த அமைச்சராக இருந்தார். 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் புலிகள் குண்டெறிந்து அல்கம உட்பட எட்டு பேரைக் கொலை செய்தனர்.

அதேபோல, மேஜர் ஜெனரல் ஜானக்க பெரேரவும் புலிகளின் இலக்காக இருந்தார். அவரது படையினர் வெலிஒயாவில் ஒரே நாளில் 350க்கு மேற்பட்ட புலிகளை கொன்றதாகக் கூறப்படுகிறது. அவரும் ஓய்வு பெற்று ஐ.தே.க. அரசியலில் இணைந்தார். அவரது பாதுகாப்பை 2008 ஆம் ஆண்டு மஹிந்த நீக்கினார். புலிகளின் தற்கொலை போராளி ஒருவர் அவரது கூட்டம் ஒன்றை தாக்கி அவர் உள்ளிட்ட 28 பேரை கொன்றார்.

சரத் போன்சேகா போரை வென்ற இராணுவத் தளபதியாவார். அவர் மஹிந்தவுக்கு எதிராக 2010 ஆம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார் தேர்தல் முடிவடைந்த உடன் அவரது பாதுகாப்புக்காக இருந்த 600 படை வீரர்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைக்கப்பட்டது. இப்போது புலிகள் இல்லை. மஹிந்த தமது பாதுகாப்புக்காக 60 வீரர்கள் போதாது என்கிறார்.

அது பாதுகாப்பு நிபுணர்கள் தீர்மானிக்க வேண்டியதாகும். ஆனால், அவருக்கு 350 கோடி ரூபாய் பெறுமதியான அரச விடுதியொன்று வேண்டுமா?

எம்.எஸ்.எம்.ஐயூப்

 

Share.
Leave A Reply