470 நாட்கள் இடைவிடாத இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளில் பலஸ்தீன ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கண்மூடித்தனமாக கொல்லப்பட்டனர்.
கிட்டத்தட்ட 98 சதவீத காஸாவின் உட்கட்டமைப்பை அழித்து சிதைத்தனர். காஸாவை கல்லறையாக மாற்றினர். 15 ஜனவரி 2025 முதல் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் குறித்து எதிர்பாராத தகவல்கள் வெளிவந்தன.
இந்த அறிவிப்பின் சில நாட்களுக்குப் பிறகு, சியோனிசத்தின் தீவிரஆதரவாளரான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காஸாவை சுத்தமாக்கி அங்குள்ள பலஸ்தீன மக்களை ஜோர்தான் மற்றும் எகிப்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறியபோது,
முழு உலகமும் அதிர்ச்சியடைந்தது. பலஸ்தீனர்கள் இன ரீதியாக சுத்திகரிப்பு செய்தவுடன், அமெரிக்காவும் இஸ்ரேலும் காஸாவை இஸ்ரேலுடன் இணைத்து, அகண்ட இஸ்ரேலை உருவாக்கவும் முழு மத்திய கிழக்கையும் ஸ்திரமற்ற நிலைக்குக் கொண்டு வந்து கட்டுப்படுத்தவும் அது ஏதுவாக அமையும்.
ட்ரம்ப்பின் புதிய குழு இஸ்ரேலின் வெறித்தனமான ஆதரவாளர்கள். உதாரணமாக, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக ஜனாதிபதி ட்ரம்ப்பின் புதிய நியமனதாரரான எலிஸ் ஸ்டீபனிக், காங்கிரஸுக்கு வழங்கியுள்ள முதலாவது சாட்சியத்தில், மேற்குக் கரை முழுவதிலும் இஸ்ரேலுக்கு “விவிலிய உரிமை” (வேதாகமம் ரீதியான உரிமை) இருப்பதாக அறிவித்தார்.
காஸாவிலிருந்து பலஸ்தீன மக்களை இடமாற்றம் செய்வது குறித்து வெள்ளை மாளிகை விவாதித்து வருவதாக என். பி. சி செய்திக்கு ட்ரம்ப்பின் மற்றொரு நிர்வாக அதிகாரி அளித்த பேட்டியைத் தொடர்ந்து இந்த சாட்சியம் இடம்பெற்றுள்ளது.
பலஸ்தீனர்கள் பண்டங்களோ கால்நடைகளோ அல்ல. அந்த மக்கள் பல தீர்க்கதரிசிகளின் சந்ததியினர். பிரிட்டனும் அமெரிக்காவும் பலஸ்தீனத்தில் வன்முறையான இஸ்ரேலை விதைக்கும் வரை அவர்கள் உலகின் மிகவும் அமைதியான மக்களாக இருந்துள்ளனர்.
பலஸ்தீனர்கள் மீது ட்ரம்பிற்கு எந்த உணர்வும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். உதாரணமாக, டிசம்பர் 2017 இல் ட்ரம்ப் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்தார்.
பின்னர் அமெரிக்காவின் இஸ்ரேலுக்கான இராஜதந்திர பணிகளை டெல் அவிவிலிருந்து ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருசலேமுக்கு மாற்றினார். இந்த அங்கீகாரம் மற்றும் இடமாற்றம் என்பன பெரும்பாலும் சர்வதேச சமூகத்தால் கண்டிக்கப்பட்டது.
இஸ்ரேலிய-பலஸ்தீன சமாதான முன்னெடுப்புகளுக்கான மத்திய பேச்சுவார்த்தை மையமாகவும் இந்த நகரத்தை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்திருந்தது.
இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள சிரிய கோலான் குன்றுகள் மீது இஸ்ரேலின் இறையாண்மையையும் மார்ச் 2019 இல், ஜனாதிபதி ட்ரம்ப் அங்கீகரித்தார்.
சுவிட்ஸர்லாந்தின் டாவோஸில் உள்ள உலக பொருளாதார மன்றத்துக்கு அனுப்பிய தனது செய்தியில், பலஸ்தீன அகதிகள் பிரச்சினையை தீர்க்க எகிப்து மற்றும் ஜோர்டான் என்பன அதிக பலஸ்தீனர்களை உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என்று ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார். இருப்பினும் எகிப்தும் ஜோர்தானும் இந்த முன்மொழிவை நிராகரித்துள்ளன.
ஒரு குடிமகனை நாடு கடத்துவது அல்லது வலுக்கட்டாயமாக இடமாற்றம் செய்வது சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் கீழ் ஒரு போர்க் குற்றம் என்று ஒரு கட்டுரையாளர் சுட்டிக்காட்டி உள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சட்டத்தின்படி, பொதுமக்களுக்கு எதிரான பரவலான அல்லது முறையான தாக்குதலின் ஒரு பகுதியாக அது செய்யப்படும்போது, அது மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாகும்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக் குழுவின் (ஐ. சி. ஆர். சி) கூற்றுப்படி, இந்த விதிமுறைகள் வழக்கமான சர்வதேச சட்டத்திற்கு சமமானவை.
இதற்கு ஆட்சேபனை தெரிவிக்காத அனைத்து நாடுளையும் இவை கட்டுப்படுத்துகிறது. குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச சட்டப் பேராசிரியரும் முன்னாள் ஐ. நா. அதிகாரியுமான ஆர்.டி. இம்சீஸ் இது பற்றி கூறுகையில், “பலஸ்தீனர்களை பெருமளவில் இடமாற்றம் செய்வதற்கான ஜனாதிபதி ட்ரம்ப்பின் விருப்பம் சட்டவிரோதமானது” என்றார்.
நெதன்யாஹுவும் ட்ரம்பும் பலஸ்தீன மண்ணில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் வன்முறைகளை நிறுத்துவதில் எவ்வித ஆர்வமும் காட்டவில்லை.
நெதன் யாஹு, தனது பங்கிற்கு, இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மேற்குக் கரையில், முக்கியமாக ஜெனினில் ஒபரேஷன் அயர்ன் வோல் ( இரும்புச் சுவர்) என்ற நடவடிக்கையை தொடங்கியுள்ளார்.
இது பலஸ்தீனர்கள் மீதான குடியேறியவர்களின் தாக்குதல் நடவடிக்கைகளை பூர்த்தி செய்கிறது. இஸ்ரேலிய மனித உரிமைக் குழுவான பி டி செலெம், இஸ்ரேல் “காஸாவிலிருந்து மேற்குக் கரையில் அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிற பகுதிகளுக்கு தனது கவனத்தை மாற்றுகிறது” என்று கூறுகிறது.
எவ்வாறாயினும், 15 மாதங்கள் மரண மண்டலமாக திறம்பட குறிவைக்கப்பட்ட பின்னர், காஸா இப்போது ஒரு பேரழிவு தரும் சுற்றுச்சூழல் தரிசு நிலமாக மாற்றப்பட்டு உள்ளது.
ஜோர்தான் மற்றும் எகிப்துக்கு பலஸ்தீனர்களை அனுப்பி இனச் சுத்திகரிப்பு செய்வதற்கான ட்ரம்ப்பின் அழைப்பு, முழு மத்திய கிழக்கையும் அதற்கு அப்பாலும் கணிக்க முடியாத விளைவுகளுடன் நாசமாக்கக் கூடிய அனைத்து சாத்தியங்களையும் கொண்டுள்ளது.
பெப்ரவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், எகிப்து, ஜோர்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் (யு. ஏ. இ) கட்டார், பலஸ்தீன அதிகார சபை மற்றும் அரபு லீக் ஆகியவை பலஸ்தீனர்களை அவர்களின் தாயகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான எந்தவொரு திட்டத்தையும் முறையாகவும் முற்றாகவும் நிராகரித்துள்ளனன.
இஸ்ரேல்-பலஸ்தீன மோதலுக்கு இரு நாட்டு தீர்வு காண்பதற்கான நாடுகளின் ஸ்திர நிலையை இந்த அறிக்கை மேலும் உறுதிப்படுத்தியதுடன், “குடியேற்ற நடவடிக்கைகள், வெளியேற்றுதல் மற்றும் வீடுகளை இடிப்பது, அல்லது நிலத்தை இணைத்தல், அல்லது இடம்பெயர்வு மூலம் அதன் உரிமையாளர்களின் நிலத்தை காலி செய்தல் அல்லது பலஸ்தீனர்களை தங்கள் நிலத்திலிருந்து மாற்றுவதை ஊக்குவிப்பதன் மூலம் பலஸ்தீனர்களின் உரிமைகளை அகற்றுவதற்கான எந்தவொரு முயற்சியையும் இது திட்டவட்டமாக நிராகரித்தது”.
சில அறிக்கைகள் இவை எல்லாமே அட்டைகளினால் ஆன வீடுகள் என வர்ணித்திருந்தன . இன்றைய நிலவரப்படி, சவூதி அரேபியா, எகிப்து, கத்தார், சிரியா, ஜோர்டான் மற்றும் லெபனான் என எல்லா நாடுகளுமே தலைமைத்துவத்தைக் கொண்டுள்ளன.
பரவலாக நோக்குகையில், இவை எல்லாமே அமெரிக்க சார்பு. மற்றும் இஸ்ரேல் சார்பு போக்கினையே கொண்டுள்ளன. இன்னும் ஒரு தசாப்தம் கழிந்த பின்னும் இதே நிலை தான் இருக்குமா என்று சிந்தித்தால் , இஸ்ரேல் அதன் இருப்புக்காக நம்பியிருப்பது இன்னும் இதை தான் என்பது புலனாகும்.
மற்றொரு வெட்கக்கேடான அறிவிப்பில் சவூதி அரேபியா அமெரிக்க பொருளாதாரத்தில் 600 பில்லியன் டொலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது என்று ட்ரம்ப் கூறினார்.
ஆனால், அது போதுமானதாக இருக்காது என்றும் அவர் கூறினார். “ஒரு அற்புதமான மனிதரான முடிக்குரிய இளவரசரிடம், இதை சுமார் ஒரு ட்ரில்லியன் டொலராகக் கணக்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நாங்கள் அவர்களிடம் மிகவும் நன்றாக இருப்பதால் அவர்கள் அதைச் செய்வார்கள் என்று நான் நினைக்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஆதரவு இல்லாமல் சவூதி அரசாங்கம் இரண்டு வாரங்கள் கூட ஆட்சியில் இருக்க முடியாது என்று இதற்கு முன் ஒருமுறை ட்ரம்ப் கூறியமை இங்கு நினைவூட்டத்தக்கது.
உண்மையில், ட்ரம்ப்புக்கும் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் இடையிலான தொலைபேசி அழைப்பு பற்றிய அரச அரண்மனை அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு சவூதி அரசு 600 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யும் என்று சவூதி பத்திரிகை நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது.
கடந்த வாரம் பதவியேற்ற பின்னர் ஒரு வெளிநாட்டு தலைவருடன் ட்ரம்ப் நடத்திய முதல் தொலைபேசி அழைப்பு இதுவாகும்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்காவுடனான தனது முதலீடுகள் மற்றும் வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான சவூதியின் நோக்கத்தை முடிக்குரிய இளவரசர் இதன் மூலம் உறுதி செய்துள்ளார். இது 600 பில்லியன் டொலர் மற்றும் அதற்கு அப்பால் இருக்கும் என்று சவூதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.
கட்டுரையாளர் கிறிஸ் ஹெட்ஜஸ் தனது கருத்தை இவ்வாறு பதிவு செய்துள்ளார். “இஸ்ரேலின் குறிக்கோள்கள் மாறாமல் உள்ளன. பலஸ்தீனர்களை தங்கள் நிலத்திலிருந்து அழிப்பது இதில் முதன்மையானது.
இந்த முன்மொழியப்பட்ட போர்நிறுத்தம் மேலும் ஒரு இழிவான அத்தியாயமாகும். அதற்கு பல வழிகள் உள்ளன. அது வீழ்ச்சியடையும் என்று நான் சந்தேகிக்கிறேன். ஆனால், வெகுஜன படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்று குறைந்தபட்சம் இப்போதைக்கு பிரார்த்தனை செய்வோம்.”
2023 அக்டோபரில் காஸா மீது இஸ்ரேல் தனது போரைத் தொடங்கியதிலிருந்து. இஸ்ரேலிய “திட்டங்கள்” மற்றும் பலஸ்தீன மக்களின் உரிமைகளுடன் முரண்படுவது போன்ற முன்மொழிவுகளை அமெரிக்க நிர்வாகம் கைவிட வேண்டும் என்று ஹமாஸ் கோரிக்கை விடுத்திருந்தது.
தாங்கள் ஏற்கெனவே “மிகவும் கொடூரமான இனப்படுகொலை மற்றும் இடப்பெயர்ச்சியை” எதிர்த்து வருவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர்.
“எங்கள் கொள்கைகள் தெளிவாகவும் உறுதியாகவும் உள்ளன. பலஸ்தீனர்கள் தங்கள் நிலத்தில் இருப்பதை நிலை நிறுத்துவதற்கான ஜோர்தானின் உறுதியான நிலைப்பாடு மாறாமல் உள்ளது.
அது ஒரு போதும் மாறவும் மாட்டாது” என்று ஜோர்தானின் வெளியுறவு அமைச்சர் அய்மான் சஃபாடி அம்மானில் கூறினார். பலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு பலஸ்தீனத்தில்தான் உள்ளது. ஜோர்தான் ஜோர்தானியர்களுக்கும், பலஸ்தீனம் பலஸ்தீனர்களுக்கும் உரியவை” என்று அவர் மேலும் கூறினார்.
பலஸ்தீனர்களை சினாய்க்கு மாற்றுவது சம்பந்தப்பட்ட எந்தவொரு தீர்விலும் எகிப்து ஒருபோதும் ஓர் அங்கமாக இருக்க முடியாது என்று வொஷிங்டனில் உள்ள எகிப்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2023 இல் அமெரிக்க வலை தளமான தி ஹில்லில் எகிப்தின் தூதுவர் மோடாஸ் ஜஹ்ரான் வெளியிட்ட ஒரு கருத்தை மேற்கோள் காட்டி இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதை எல்லாம் மீறி “அவர்கள் தனது விருப்பத்துக்கு இணங்குவார்கள்” என்று ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். “அவர்கள் அதைச் செய்வார்கள். அவர்களுக்காக நாங்கள் நிறைய செய்கிறோம். எனவே அவர்கள் அதைச் செய்வார்கள் “என்று ட்ரம்ப் கூறினார்.
-லத்தீப் பாரூக்-