பிரயாக்ராஜில் நடைபெறும் மகாகும்பமேளா அதன் இறுதி கட்டத்தில் உள்ளது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் கும்பமேளா, இந்திய சமுதாயத்திலும், பண்பாட்டிலும் ஏற்பட்டுள்ள சித்தாந்த மாற்றங்களுக்கு சாட்சியாக இருந்திருக்கிறது.
சீனப் பயணிகள் யுவான் சுவாங் மற்றும் ஃபா ஹியான், கிரேக்க பயணி மெகஸ்தனிஸ் ஆகியோரின் பயணக் குறிப்புகளில் பழங்காலத்தில் சங்கம் கரையில் நடைபெற்ற மேளாக்கள் பற்றி கூறப்பட்டுள்ளது
இடைக்கால இந்தியாவில் கும்பமேளாவின் போது படையெடுப்பவர்கள் நடத்திய கொள்ளைகள் குறித்தும் பல இடங்களில் சொல்லப்பட்டுள்ளது.
முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்திலும் இந்தியாவில் வழக்கமாக கும்பமேளாக்கள் நிகழ்ந்தன. இந்த காலகட்டத்தில் வெளிநாட்டு படையெடுப்பாளர்கள் மற்றும் முகலாயர்களுக்கு எதிரான நாகா சாதுக்களின் போராட்டம் தொடர்ந்தது.
பிற்பகுதியில் வந்த ஆங்கிலேயர் ஆட்சியிலும் கும்பமேளாக்கள் நடைபெற்றன. தொடக்கத்தில் அவற்றை ‘விசித்திரமானவை’யாக அவர்கள் பார்த்தார்கள். ஆனால் படிப்படியாக அவர்கள் இந்த பெரு நிகழ்வில் ஒரு அங்கமாகினர்.
காலப்போக்கில், சுயராஜ்ஜியத்திற்கான போராட்டங்கள் பல இதே கும்பமேளாவில் நடத்தப்பட்டன. அவற்றில் காந்தியும், நேருவும் கலந்துகொண்டனர்.
பேராசியர் தனஞ்செய் சோப்ரா, ‘பாரத் மே கும்ப்’ என்ற தனது புத்தகத்தில், “1857இல் விடுதலை வேண்டி நடைபெற்ற புரட்சியை தொடர்ந்து, நாட்டின் அரசியல் மற்றும் அதிகார போக்கு முற்றிலும் மாறியதுடன், அதன் தாக்கம் கும்பமேளா கூடுவதிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த செல்வாக்கு பெற்ற தலைவர்கள், புரட்சியாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இந்த மேளாக்களை பயன்படுத்திக்கொண்டனர். இதற்கு முக்கிய காரணம் நாட்டின் அனைத்து மூலைகளிலிருந்தும் வந்த மக்கள் இந்த விழாக்களில் ஒரே இடத்தில் சங்கமித்ததுதான்.” என்று சொல்கிறார்.
1857 புரட்சிக்குப் பிறகு பல்வேறு இயக்கங்களின் போது கும்பமேளாவில் நடந்தது என்ன என்பதையும், கும்பமேளாவிற்கு காந்தி ஏன் சென்றார் என்பதையும் இந்த செய்தியில் நாம் தெரிந்துகொள்ளலாம்.
1906-ல் சங்கமத்தில் நடைபெற்ற கும்பமேளாவின் புகைப்படம்
சுதந்திரத்திற்கான போராட்டமும், கும்பமேளாவும்
பேராசிரியர் தனஞ்செய் சோப்ரா தனது ‘பாரத் மே கும்ப்’ புத்தகத்தில், “இந்த மேளாக்களில் உள்ள பல்வேறு முகாம்களில் சுதந்திர போராட்ட வீரர்களால் பயன்படுத்தப்பட்ட குறியீடுகள் உபயோகப்படுத்தப்பட்டன. இந்த குறியீடுகளை பார்த்துவிட்டு, மக்கள் அந்த இடங்களில் ரகசியமாக கூடுவர். பிரயாக்ராஜின் மக்கள் இந்த சுதந்திர போராட்டதில் பங்கேற்றனர். ராணி லக்ஷ்மிபாயும் பிரயாக்ராஜில் தங்கியிருந்ததுடன், 1857 புரட்சிக்கான திட்டம் அங்குதான் போடப்பட்டது.” என்கிறார்.
“குற்றம் புரியும் எண்ணத்துடன் கும்பமேளாவில் நுழைந்த ‘அந்நியர்கள்’ என சொல்லப்பட்டவர்கள் மீது ஆங்கில ஆட்சியாளர்கள் ஒரு கண் வைத்திருந்தனர். அங்கு வந்து கொட்டகைகளில் தங்கியிருந்தவர்கள் மீதும் ஒரு கண் வைத்திருந்தனர். இது தொடர்பான ஆவணம் மக்களிடமும், பிரயாக்ராஜின் கல்பவாசிகளிடமும் உள்ளது. அதில் கொட்டகைகளில் வசித்த 94 கல்பவாசிகளின் கையெழுத்துகள் இருந்தன,”
“உண்மையில், ஆங்கிலேய அரசு குற்றவாளிகள் என விவரித்ததும், தங்கள் கண்காணிப்பில் வைத்திருந்ததும், சுதந்திரப் போராட்ட வீரர்களைதான். இந்த வீரர்கள், காவல்துறையின் பார்வையிலிருந்து தப்பி, கல்பவாசிகளை சென்றடைந்து, மக்கள் மத்தியில் விடுதலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.” என தனது புத்தகத்தில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் தனஞ்செய்.
ஆனால், திருடர்கள் இந்த மேளாக்களில் நுழைந்து மக்களிடம் திருடிவிட்டு தப்பிச் சென்றது குறித்தும் பல்வேறு குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஆங்கிலேயர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டியிருந்தது.
பேராசிரியர் தனஞ்செய் சோப்ரா எழுதிய 'பாரத் மே கும்ப்' புத்தகம்
மகாத்மா காந்தியும் கும்பமேளாவும்
1915இல், ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் மகாத்மா காந்தி பங்கேற்றார். ஹரித்வார் கும்பமேளாவிற்கு தனது பயணம் குறித்து அவர் தனது சுயசரிதையில் விளக்கியுள்ளார்.
தனது சுயசரிதையில், “கும்பமேளாவிற்கு செல்ல நான் ஆர்வமாக இல்லை, ஆனால் மகாத்மா முன்ஷிராம்ஜியை சந்திக்க ஆர்வமாக இருந்தேன். கும்பமேளாவில் சேவை செய்ய ஏராளமான தன்னார்வலர்களை கோகலேவின் சேவக்சமாஜ் அனுப்பியிருந்தது.”
“இந்தக் குழுவின் தலைவராக பண்டிட் ஹிரதயந்த் குஞ்ருவும் மருத்துவ அதிகாரியாக டாக்டர் தேவும் இருந்தார்கள். இதில் உதவுவதற்கு எனது குழுவை அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அப்படி நான் மேளாவை சென்றடைந்தேன்.” என்று குறிப்பிட்டுள்ளார் காந்தி.
அந்த நேரத்தில் கும்பமேளாவிற்கு செல்லும் பக்தர்கள் மத்தியில் இந்து-இஸ்லாமியர் வேறுபாடு இருந்தது குறித்தும் காந்தி எழுதியுள்ளார்.
கல்கத்தாவிலிருந்து ஹரித்வாருக்கு அவர் மேற்கொண்ட ரயில் பயணம் குறித்து, “சில நேரங்களில் ரயில் பெட்டிகளில் விளக்கு இருப்பதில்லை. திறந்த பெட்டியின் மீது நண்பகல் சூரியனின் கதிர்கள் பாய்கின்றன” என்று விவரித்துள்ளார் காந்தி.
“மேளாவிற்கு செல்லும் ஒரு இந்து பக்தர் எவ்வளவு தாகமாக இருந்தாலும் இஸ்லாமியர் கொண்டுவந்த தண்ணீரை குடிக்கமாட்டார். இந்துக்கள் கொடுக்கும் தண்ணீரை மட்டுமே குடிப்பார். ஆனால் அதே இந்து பக்தர் நோய்வாய்ப்படும்போது, மருத்துவர் மருந்தை கொடுத்தாலும், சாராயத்தை கொடுத்தாலும், இஸ்லாமியர் அல்லது கிறிஸ்தவர் தண்ணீர் அல்லது இறைச்சியின் சாரத்தை கொடுத்தாலும் அதை உட்கொள்ள தயங்கமாட்டார்.” என்று எழுதியுள்ளார்.
“கும்பமேளாவில் எனது வேலை பெரும்பாலும் கொட்டகையில் அமர்ந்து காட்சி கொடுத்து பல்வேறு பக்தர்களுடன் மதம் குறித்து பேசுவதுதான். கும்பமேளாவிற்கு சென்றபோது, மக்களின் மத உணர்வை விட அதிக அளவு பித்து, பொறுமையின்மை, கபடம் மற்றும் ஒழுங்கின்மையை பார்த்தேன். சந்தையில் ஏராளமான சாதுக்கள் இருந்தனர். அவர்கள் மால்புடா மற்றும் கீர் (பாயாசம்) உண்பதற்காக மட்டுமே பிறந்தவர்கள் என எனக்கு தோன்றியது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அலகாபாத்தில் காந்தி, 1940-ல் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்
மக்களின் மூடநம்பிக்கை மற்றும் பணத்தின் மீதான பேராசைக்கு காந்தி சில உதாரணங்களை அளிக்கிறார்.
“மேளாவில் ஒரு ஐந்து கால் பசுவை பார்த்தேன். மக்கள் உயிருள்ள கன்றின் கால்களை வெட்டி, பசுவின் தோள்களில் ஒட்டிவிடுவார்கள். அப்பாவி மக்களை ஏமாற்ற இந்த இரட்டை கொடூரம் பயன்படுத்தப்பட்டது. ஐந்து கால்களைக் கொண்ட பசுவை காண எந்த இந்துவுக்குத்தான் ஆசை வராது? அப்படி ஒரு பசுவை பார்த்த பின் மக்கள் பணத்தை அளித்துச் செல்வார்கள்.”
பயணம் செய்யும் நோக்கத்துடன் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவிற்கு செல்லவில்லை என காந்தி தனது சுயசரிதையில் தெளிவாக எழுதுகிறார்.
“புனித தலங்களின் தூய்மையால் நான் எப்போதும் ஈர்க்கப்பட்டதில்லை. ஆனால் இந்த மேளாவிற்கு வரும் லட்சக்கணக்கான மக்கள் அனைவரும் கபடதாரிகள் அல்ல. எண்ணற்ற மக்கள் அங்கு தூய்மை பெறுவதற்கும், நற்குணங்களை பெறுவதற்கும் வந்திருப்பார்கள் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. இதுபோன்ற நம்பிக்கை, ஆன்மாவை எவ்வளவு தூரம் தாங்கும் என்பதைக் கூறுவது முடியாததல்ல, ஆனால் கடினமானது. சுற்றிலும் பரவியிருக்கும் கபடத்திற்கு நடுவில் புனித ஆத்மாக்கள் மறைந்துள்ளன.”
பேரசியர் தனஞ்செய் சோப்ரா தனது புத்தகத்தில், “1915 கும்பமேளாவில் பிரமாண்ட பக்தர்கள் கூட்டத்தை பார்த்தபின் கும்பமேளா ‘ஒரு குட்டி இந்தியாவின்’ பிரதிபலிப்பு என்பதை காந்தி புரிந்துகொண்டார், எனவே அங்கு செல்வதன் மூலம் இந்தியர்களிடம் சுதந்திர வேட்கையை ஏற்படுத்த முடியும். அதனால்தான் 1918இல் பிரயாக்கில் நடைபெற்ற கும்பமேளாவிற்கும் அவர் சென்றார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
கும்பமேளாவில் வெளிநாட்டு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு
‘இந்து நேஷனலிஷம் அண்ட் தி லேங்வேஜ் பாலிடிக்ஸ் இன் லேட் கலோனியல் இந்தியா’, என்ற நூலில் வில்லியம் கோல்ட் என்பவரும் கும்பமேளாவில் நடைபெற்ற தேசியவாத நடவடிக்கைகள் பற்றியும் அப்போதைய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எழுதியுள்ளார்.
“உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய மத கூடலில், சாதுக்களால்தான் அப்போதைய காங்கிரஸ் அதன் இருப்பை காட்டிக்கொள்ள முடிந்தது. 1930இல் நடைபெற்ற கும்பமேளா மற்றும் மகா கும்பமேளாக்கள் முதல் வாரங்களில் அரசியல் கூட்டங்களாக மாறின. இதில் துறவிகள் முக்கிய பங்காற்றினர். ஜனவரி 13, 1930இல் 15 துறவிகள் கொண்ட குழு, தேசிய கீதம் பாடப்பட்ட ஒரு பேரணியை நடத்தினர். அதே நாளில் அலகாபாத்தில் தேசிய கொடியுடன் அதே போன்ற ஒரு போராட்டம் நடைபெற்றது.” என்று தெரிவித்துள்ளார்.
வில்லியம் கோல்ட் பின்வருமாறு எழுதுகிறார், “வெளிநாட்டுப் பொருட்கள்,குறிப்பாக வெளிநாட்டு உடைகளை புறக்கணிக்கும்படி சுவாமி பரமானந்தா விடுத்த வேண்டுகோள் அச்சடிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் அலகாபாத்தில் பரவலாக விநியோகிக்கப்பட்டன. சாதுக்களின் அதிகாரப்பூர்வ அமைப்பான பரிவ்ராஜக மஹாமண்டலும், காங்கிரஸின் தேசியவாத திட்டத்தில் இணைந்துகொண்டது.”
“இந்த மகாமண்டலத்தில் உறுப்பினராக இருந்த சத்தியானந்தா, அந்த நேரத்தில் அலகாபாத்தில் உரைகளை நிகழ்த்தி, ‘புரட்சிக்கான நேரம் வந்துவிட்டது’ என பேசினார். அந்த காலகட்டத்தில் அலகாபாத்திலிருந்து வெளியிடப்பட்ட ஹிந்து நாளிதழிலும், சுயராஜ்ஜியத்திற்காக சாதுக்களை திரட்டும் வேலை கும்பமேளாவில் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.”
‘மக்களை தடுக்க ஆங்கிலேயர்கள் வதந்திகளை பரப்பிய நேரம்’
கும்பமேளா என்ற மேடையை சுயராஜ்ஜியத்திற்கான போராட்டத்தை வலுப்படுத்த காங்கிரஸ் தொடர்ந்து பயன்படுத்திக்கொண்டது சுதந்திர போராட்ட வரலாற்றின் மூலம் தெரிகிறது.
வில்லியம் கோல்ட் தனது புத்தகத்தில், “1930 கும்பமேளா மற்றும் மஹா மேளாவில் காங்கிரஸ் தனது நிரந்தர முகாம்களை அமைத்தது. முன்னதாக ஜவஹர்லால் நேரு ஹரித்வாரிலும், அலகாபாத்திலும் தொடர்ந்து பொதுக்கூட்டங்களில் உரையாற்றியிருக்கிறார்.”
“பக்தர்களை அதிக அளவில் சென்றடைவதற்கு 1930 மற்றும் 1931இல் கர்ஹ்முக்தேஷ்வர் மற்றும் கர்கரேடாவில் நடைபெற்ற திருவிழாக்களிலும் இதே போன்ற நிகழ்ச்சிகளை காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. 1931, பிப்ரவரி 1ஆம் தேதி மேளாவின் கடைசி நாளில் சுமார் 20,000 பேர் திரண்ட ஒரு பொதுக்கூட்டத்தில் மகாத்மா காந்தி உரையாற்றினார்.”
1942-ல், இரண்டாம் உலக யுத்தமும் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அத்துடன் உலகச் சூழலும் கும்பமேளாவை திட்டமிடுவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. சுதந்திர போராட்டத்தில் இந்த மேளாக்கள் எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆங்கிலேயர்களும் புரிந்து வைத்திருந்தனர். இதனால் 1942ஆம் ஆண்டில் மேளாவை தடுக்க அவர்கள் பல முயற்சிகளை மேற்கொண்டனர்.
பேராசியர் தனஞ்செய் சோப்ரா பின்வருமாறு எழுதுகிறார், “பிரயாகில் நடைபெற்ற கும்பமேளாவில் கூட்டம் கூடுவதை தடுக்க, 1942 கும்பமேளாவிற்கு முன் ரயில்வே மற்றும் பேருந்து பயணச்சீட்டு விற்பனைக்கு ஆங்கிலேய அரசு தடை விதித்திருந்தது. இதுதொடர்பாக மேளா நடைபெறும் இடத்தின் மீது ஜப்பான் வெடிகுண்டுகளை வீசக்கூடும் என்ற வதந்திகள் அரசால் அதிகாரபூர்வமற்ற வகையில் பரப்பப்பட்டன.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு