டொனல்ட் ட்ரம்பின் அடாவடித்தனங்கள் பற்றி வாய் கிழியக் கிழிய பேசியாயிற்று.
உலகம் என்ன சொன்னாலும், அமெரிக்கர்கள் என்ன நினைத்தாலும் அவர் சொல்வதைத் தான் சொல்வார். செய்வதைத் தான் செய்வார்.
பதவியேற்ற நாளில், காஸா அற்புதமான இடம் என்றார். ஆறு நாட்களுக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில், காஸாவை கையகப்படுத்தப் போவதாக சென்னார்.
‘ட்ரம்ப் உளறல்’களாக இதையும் பார்த்த உலகம், கடந்த வாரம் உறைந்து நின்றது.
அடாவடியுடன், இன்னொரு அடாவடியுடன் சேர்ந்து கொண்டு, காஸாவை கையகப்படுத்துவோம், காஸாவாசிகளை வேறு நாடுகளுக்கு அனுப்புவோம் என்று பேசினார், ட்ரம்ப்.
மற்றைய அடாவடியின் உள்ளம் குளிர்ந்திருக்க வேண்டும். “இதுவரை அமெரிக்க ஜனாதிபதிகளாக இருந்தவர்களில், நீங்கள் தான் மிகச் சிறந்தவர் என்று சொன்னது. நெருங்கிய நண்பரென பாராட்டியது.
இரண்டாவது அடாவடி வேறு யாருமல்லர். ட்ரம்ப் மறுபடியும் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அமெரிக்கா செல்லும் முதலாவது இராஜ்ஜியத் தலைவராக திக் விஜயம் செய்து கை குலுக்கியவர். இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தன் யாஹு.
இரு அடாவடிகளும் கைகுலுக்கிக் கொண்ட மேடையும் இலகுவானது அல்ல. எனவே, காஸாவை கையகப்படுத்தி உரிமை கொண்டாடுதல் என்பதை உளறல்களாக புறக்கணித்து விடவும் முடியாது.
எனவே, இவை உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ட்ரம்ப் என்ன சொல்கிறார் என்பதை விபரிக்க வெள்ளை மாளிகை வார்த்தைகளைத் தேடியது.
மத்திய கிழக்கு நாடுகள் கண்டித்தன. ஐ.நா. செயலாளர் நாயகம், இது இனச்சுத்திகரிப்பிற்கான முஸ்தீபா என்று கேட்டு கடுமையாக விமர்சித்தார்.
வேலியால் அடைக்கப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலையாக, இஸ்ரேலியப் படைகளால் அனுமதிக்கப்படுவதைப் பெற்று அவல வாழ்க்கை வாழும் மக்களின் மண்.
பதினைந்து மாத யுத்தத்தின் விளைவுகளால், 61,000 இற்கு மேற்பட்ட உயிர்களை இழந்து, தரைமட்டமாக்கப்பட்ட வீடுகளில் எங்ஙனம் வாழ்க்கையைத் தொடங்குவதென மனவலியுடன் இருக்கையில், உங்களை எகிப்திற்கும், ஜோர்தானுக்கும் அனுப்புவேன் என்றால், அந்த மக்கள் கூட்டத்திற்கு எப்படி இருக்கும்?
இதை ஏன் ட்ரம்ப் சொல்ல வேண்டும், இப்போது ஏன் சொல்ல வேண்டும்?
காஸாவில் பேரழிவை ஏற்படுத்தும் ஒரே நோக்கத்துடன் இஸ்ரேலியப் படைகள் கட்டவிழ்த்து விட்ட மிகவும் மோசமான யுத்தத்தால், இன்று காஸா மண் சிதிலங்களின் இல்லமாக மாறியிருக்கிறது.
இங்கு குண்டுகள் போட்டு தகர்க்கப்பட்ட கட்டடங்களின் சிதைவுகள் மலைபோல குவிந்திருக்கின்றன. அவற்றிற்குள் இன்னமும் வெடிக்காத குண்டுகளும் கிடக்கலாம்.
தவிரவும், நீர் விநியோகக் குழாய்கள், மின்விநியோகக் கம்பிகள் அடங்கலாக சகலவற்றையும் மீளமைக்க வேண்டும்.
எனவே, காஸாவில் வாழும் பலஸ்தீனர்களை வேறு எங்காவது அனுப்பி வைக்க வேண்டும் என்பது தான் தர்க்கமாக இருக்கிறது.
இந்தத் தர்க்கம் அமெரிக்க தேசத்தின் ஒட்டுமாத்த நோக்கமா அல்லது ட்ரம்பிற்குரிய அடாவடித்தனத்தின் வெளிப்பாடா என்பது முக்கியமான கேள்வி.
மீள்கட்டமைப்புப் பணிகளுக்கு பல வருடங்கள் எடுக்கும் என்பதால், காஸா பலஸ்தீனர்கள் எங்காவது செல்ல வேண்டியிருக்கும் என டொனல்ட் ட்ரம்பின் மத்திய கிழக்கிற்கான தூதுவர் கூறுகிறார்.
ஆனால், ட்ரம்ப் கடைசியாக காஸா பற்றி பேசியபோது, இங்குள்ள மக்கள் நிரந்தரமாக வெளியேறுவது பற்றி சிந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
இதில் எந்தக் கருத்து செல்லுபடியானதென இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை.
இஸ்ரேலிய பலஸ்தீன பிரச்சனைக்கு தீர்வு காண எத்தனையோ யோசனைகள் பரிசீலிக்கப்பட்டன. அமெரிக்கத் தரப்பில் கூட பல தீர்வுகள் முன்மொழியப்பட்டன.
எந்தவொரு சமயத்திலும், பலஸ்தீனர்களுக்கு சொந்தமான மண்ணில் இருந்து ஒரு பகுதியைப் பறித்தெடுத்து அங்கு வாழும் மக்களை விரட்டியடிக்க வேண்டும் என்றளவிற்கு மோசமான, பித்துக்குளித்தனமான யோசனையேனும் முன்வைக்கப்படவில்லை.
நாம் விரட்டவில்லை, வெளியேறுவதை ஊக்குவிக்கிறோம் என ட்ரம்ப் சொன்னாலும், வேறெந்த வார்த்தை ஜாலங்களைக் காட்டினாலும், அவர் கேட்பது ஒன்று தான்.
ஒரேயடியாக காஸாவை விட்டு விடுங்கள் என்பதைத் தான்.
இழப்பதற்கு எதுவும் இல்லையென்ற நிலையில் இருந்தாலும், காஸாவில் வாழும் பெரும்பாலான பலஸ்தீனர்கள் மண்ணை விட்டுக் கொடுக்கப் போவதில்லை.
அப்படியானால், அவர்களை காஸாவில் இருந்து எங்கனம் வெளியேற்றுவது? இஸ்ரேலின் படைப்பலத்தை பிரயோகித்தா?
படைப்பலத்தைப் பிரயோகித்தல் என்பது, காஸா யுத்தத்திற்கு முடிவுகட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் வேருடன் தகர்த்து விடும் என்பது ஒருபுறம். அத்தகைய எந்தவொரு முயற்சியும் சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறுவதாக அமைந்து விடும்.
காஸா என்பது எந்தவொரு சட்டத்தின் கீழும் இஸ்ரேலுக்கோ, அமெரிக்காவிற்கோ சொந்தமானது அல்ல. அதை எவரும் உரிமையாக்கிக் கொள்ளவோ, இன்னொரு தரப்பிடம் தாரை வார்க்கவோ முடியாது.
இந்த நிலப்பரப்பை இஸ்ரேல் உடைமையாட்சி செய்வதாகவே (Occupation) சர்வதேச சட்டங்கள் கூறுகின்றன. அப்படியில்லையென இஸ்ரேல் வாதிடுகிறது
2005ஆம் ஆண்டில் காஸாவில் இருந்து யூதக் குடியிருப்புக்களை அகற்றி, இராணுவத்தை மீளப் பெற்றபோது, உடைமையாட்சி முடிவடைந்ததாக இஸ்ரேலியத் தலைவர்கள் கூறுகிறார்;கள்.
சர்வதேச சட்டம் ஒருபுறமிருக்க, உலகம் என்ன நினைக்கிறது என்பதையும் பார்க்கலாம். இன்று ஐக்கிய நாடுகள் சபையில் 190 இற்கு மேற்பட்ட நாடுகள் அங்கம் வகித்தால், இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள் காஸாவை இறையாண்மையுள்ள பலஸ்தீனத்தின் ஒரு பாகமாக காஸா நிலப்பரப்பு இருக்க வேண்டும் என கருதுகின்றன.
காஸாவைக் கைப்பற்றி, அங்கிருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றி விட வேண்டும் என்று ட்ரம்ப் கூறுவதன் பின்னணியில் வேறு நோக்கங்கள் உள்ளனவா என்பதையும் பார்க்க வேண்டும்.
பெஞ்சமின் நெதன்யாஹுவுடனான செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய சமயத்தில் இனிப்பு தடவிய வார்த்தைகளை உச்சரித்தார்.
காஸாவில் எண்ணற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கி, வீடுகளை அமைத்துத் தரக்கூடிய பொருளாதார அபிவிருத்தி சூழலை கட்டியெழுப்பப் போவதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
வேறு தருணங்களில், காஸாவை கரையோர சோலையாக மாற்றுவது பற்றியும் ட்ரம்ப் பேசியிருந்தார்.
இந்தக் கருத்தை உன்னிப்பாக அவதானித்தால், இது ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் காணும் கனவின் பிரதிபலிப்பா என்ற எண்ணத் தோன்றும்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில், காஸாவை கடற்கரையோர உடைமையாக (Waterfront Property) அபிவிருத்தி செய்யும் கனவைப் பற்றி குஷ்னர் பிரஸ்தாபித்தார்.
இன்று அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருக்கும் டெனால்ட் ட்ரம்ப் சொத்து வணிகத் துறையில் (Real Estate Business) கொடி கட்டிப் பறந்தவர் என்றால், அவரது மருமகனும் அதே துறையில் இருந்து வந்தவர் தான்.
பின்னாட்களில், இஸ்ரேலுக்கும், ஏனைய அரேபிய நாடுகளுக்கும் இடையில் நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளில் ட்ரம்ப்பின் தூதுவராக குஷ்னர் கடமையாற்றி இருந்தார். அவர் பல நாடுகளின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனவே, காஸாவில் பலஸ்தீனர்களை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ வெளியேற்றி அந்த நிலப்பரப்பை உடைமையாக்கிக் கொள்ளும் முயற்சியின் பின்னணியில், ரியல் எஸ்டேட் கனவுகள் உள்ளனவா என்ற சந்தேகமும் உள்ளது.
காஸாவை கையகப்படுத்த வேண்டும் என ட்ரம்ப் நினைத்தாலும் கூட, சட்டதிட்டங்களுக்கு உட்பட்டவகையில் அத்தகைய நடவடிக்கையொன்று சாத்தியமில்லை.
காஸாவை கையகப்படுத்தி அதனை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமாயின், அங்கு அமெரிக்கப் படைகளை நிலைநாட்டுவதை தவிர்க்க முடியாது.
இதற்கு ஏனைய மத்திய கிழக்கு நாடுகள் இடமளிக்கக்கூடுமா என்பதும் இன்னொரு கேள்வி.
அமெரிக்காவின் உள்நாட்டு பிரச்சினைகளைத் தவிர்த்துப் பார்த்தால், இனிமேல் வேறு நாடுகளின் பிரச்சினைகளில் தலையிடப் போவதில்லையென்று ட்ரம்ப் வாக்களித்ததால் தான், அவர் இன்று அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியிருக்கிறார்.
மத்திய கிழக்கிற்கு மீண்டும் அமெரிக்கப் படைகளை அனுப்பும் நிலைக்கு ட்ரம்ப் தள்ளப்படுகிறார் என்றால், அவரது மக்களது ஆணையைக் கூட அவர் மதிக்கவில்லை என்பது தான் அர்த்தம்.
-சதீஷ் கிருஷ்ணபிள்ளை-