உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பாவிற்கு இடமில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் விசேட பிரதிநிதி ஜெனரல் கெய்த் கெலொக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் விசேட பிரதிநிதியின் இந்த கருத்திற்கு ஐரோப்பிய தலைவர்கள் கடும் ஆட்சேபணையை வெளியிட்டுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் இல்லாமல் உக்ரைன் குறித்தோ அதன் எதிர்காலம் குறித்தோ,ஐரோப்பிய பாதுகாப்பு கட்டமைப்பு குறித்தோ பேச்சுவார்த்தைகள் இடம்பெற முடியாது என பின்லாந்தின் ஜனாதிபதி அலெக்ஸாண்டர் ஸ்டப் ஜேர்மனியின் மியுனிச் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு காரணமாக ஐரோப்பா அதிகம் பேசுவதை நிறுத்திவிட்டு ஐக்கியப்படவேண்டும் செயலில் இறங்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை உக்ரைன் தொடர்பான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ரஸ்யாவிற்கு நிலங்கள் விட்டுக்கொடுக்கப்படலாம்,என தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதியின் பிரதிநிதி ரஸ்யாவின் எண்ணெய் வருவாயினை அமெரிக்கா இலக்குவைக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய உக்ரைன் யுத்தம் குறித்து உக்ரைன் இல்லாமல் அமெரிக்காவும் ரஸ்யாவும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்துள்ளதை தொடர்ந்து உக்ரைனிற்கு அமெரிக்கா துரோகமிழைக்கின்றதா என்ற கேள்வி சர்வதேச அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

எனினும் இதனை மறுத்துள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் அமெரிக்கா உக்ரைனிற்கு துரோகமிழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ரஸ்ய ஜனாதிபதியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

மில்லியன் கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்காக நான் ரஸ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

டிரம்பின் இந்த கருத்திற்கு சர்வாதிகாரத்திற்கான வெகுமதி என விமர்சனங்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதனை நிராகரித்துள்ள அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் அது உங்களுடைய மொழி என்னுடையதில்லை இது நிச்சயமாக துரோகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை உக்ரைன் இல்லாமல் எந்த வித பேச்சுவார்த்தைகளும் இடம்பெறக்கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளது.

ரஸ்யா என்பது உக்ரைனிற்கு மாத்திரம் அச்சுறுத்தல் இல்லை என்பதை நினைவில் வைத்திருப்பது அவசியம் என பிரிட்டனின் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் ஹீலி தெரிவித்துள்ளார்.

எதிர்கால பேச்சுவார்த்தைகளில் ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் உள்வாங்கப்படுவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் இல்லாமல் உக்ரைன் குறித்து பேச்சுவார்த்தைகள் இல்லை என பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தொடர்பில் அமெரிக்க தனது வெளிவிவகார கொள்கைகளில் மாற்றங்களை அறிவித்துள்ளது.

உக்ரைன் 2014இல் அதன் எல்லைகள் காணப்பட்ட நிலைக்கு மீண்டும் திரும்புவது சாத்தியமற்ற விடயம் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்பீட்டே ஹெக்செத் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் நேட்டோவில் இணைவது பேச்சுவார்த்தைகள் மூலம் சாத்தியமாக கூடிய விடயமில்லை என தெரிவித்துள்ள அவர்உக்ரைனின் பாதுகாப்பை ஐரோப்பா உறுதி செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share.
Leave A Reply