இந்தியாவின் புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா விழாவிற்கு ரயில்களில் ஏற முயன்ற பயணிகளின் திடீர் நெரிசல் இதற்குக் காரணம் என்றும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

சனிக்கிழமை மாலை புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒன்பது பெண்கள் உட்பட குறைந்தது பதினெட்டு பேர் உயிரிழந்தனர்.

15-20 நிமிடங்களில் 13 மற்றும் 14வது நடைமேடைகளில் நூற்றுக்கணக்கான பயணிகள் திடீரென கூடியதை அடுத்து இந்த சம்பவம் நிகழ்ந்தது, இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பலர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.

“புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் நான் மிகவும் துயரமடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.

காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

“இந்த நெரிசலில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அதிகாரிகள் உதவி செய்து வருகின்றனர்,” என்று அவர் தனது எக்ஸ் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார், இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவ முழு குழுவும் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. எவ்வாறாயினும், ரயில் நிலையத்தில் பயணிகளால் படமாக்கப்பட்ட காணொளிகள் நடைமேடைகளில் பெரும் கூட்டத்தைக் காட்டுகின்றன.

Share.
Leave A Reply