கனடாவில் உள்ள டொராண்டோ பியர்சன் விமான நிலையத்தில், விமானம் ஒன்று தரையிறங்கும்போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பயணிகள், விமானப் பணியாளர்கள் என அனைவரும் உயிருடன் இருப்பதாக விமான நிலையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.

“பயணிகள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பித்தனர்,” என்று கிரேட்டர் டொராண்டோ விமான நிலையத்தின் தலைமை அதிகாரி டேபோரா பிலிண்ட் தெரிவித்தார்.

அவசர கால சேவைகளின்படி, ஒரு குழந்தையும் இரண்டு பெரியவர்களும் இந்த விபத்தில் தீவிரமான காயம் அடைந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்ட காட்சிப்பதிவுகளில் விமானம் தலை கீழாக, அதாவது விமானத்தின் மேற்கூரை பனி சூழ்ந்த தரையில் விழுந்துள்ளது. அதன் ஒரு இறக்கை காணாமலும் காட்சியளித்தது.

விபத்துக்குள்ளான விமானம், மினியாபோலிசிலிருந்து கிளம்பிய டெல்டா ஏர் லைன்ஸின் விமானம் என்று டொராண்டோ பியர்சன் விமான நிலையம் தெரிவித்தது. இதில் 4 விமான பணியாளர்கள் மற்றும் 76 பயணிகள் உட்பட மொத்தம் 80 பேர் பயணித்துள்ளனர்.

மொத்தமாக பதினெட்டு பயணிகள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

வான் வழி ஆம்புலன்ஸ் சேவை நிறுவனமான ஆரஞ், மூன்று வான் வழி ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்களையும், இரண்டு தரை வழி ஆம்புலன்ஸ்களையும் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் தீவிர காயங்கள் ஏற்பட்டவர்களில் ஒரு குழந்தை, 60களில் உள்ள ஒரு ஆண் மற்றும் தன்னுடைய 40களில் உள்ள பெண் ஒருவர் உள்ளதாக அது தெரிவித்தது.

விபத்துக்குள்ளான விமானம் டெல்டா ஏர் லைன்ஸ் 4819, அதன் துணை நிறுவனமான எண்டேவர் ஏர் நிறுவனத்தால் இயக்கப்பட்டதாக அமெரிக்க ஃபெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உள்ளூர் நேரப்படி திங்கள் கிழமை மதியம் 2.15 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக டெல்டா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

பயணித்தவர்களில் 22 பேர் கனடாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்றவர்கள் சர்வதேச பயணிகள் என்றும் பிலிண்ட் தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்ட உடனே விமான நிலையம் மூடப்பட்டிருந்தாலும், உள்ளூர் நேரப்படி மாலை 5 மணிக்கு அங்கு விமான சேவை மீண்டும் தொடங்கிவிட்டதாக, விமான நிலையம் தெரிவித்தது.

கனடாவின் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு, விபத்து குறித்து அனைத்து தரவுகளையும் சேகரிக்க சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகள் இன்னும் சில நாட்களுக்கு விசாரணைக்காக மூடி இருக்கும் என்றும் பயணிகள் விமானங்கள் சில தினங்களுக்கு தாமதத்துடன் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

பயணிகள் கூறுவது என்ன?

”எங்கள் விமானம் விபத்துக்குள்ளானது. அது தலைகீழாகக் கவிழ்ந்தது” என்கிறார் அதில் பயணித்த ஜான் நெல்சன்.

” பெரும்பாலோனோர் பாதுகாப்பாக உள்ளனர். நாங்கள் விமானத்திலிருந்து இறக்குகிறோம்” என விபத்து நடந்த உடன் ஃபேஸ்புக்கில் பதிவிட்ட வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

”தரையிறங்குவதற்கு முன்பு அசாதாரணமாக எதுவும் நடக்கவில்லை. விமானத்திற்குள் அமர்ந்திருந்தபோது நாங்கள் ஒரு பக்கமாக சாய்ந்தோம், அதன் பிறகு நாங்கள் தலை கீழாக கவிழ்ந்தோம்.”, என்று அவர் சிஎன்என்-க்கு அளித்த பேட்டியில் கூறினார்.

நெல்சனைப் போலவே, ஆஷ்லி ஜூக் என்ற பயணியும் இப்படிப்பட்ட ஒரு விமான விபத்தில் இருந்து உயிர் பிழைத்ததை அவரால் நம்ப முடியாமல், “கடவுளே, நான் ஒரு விமான விபத்தில் சிக்கி உயிர்பிழைத்தேன்!” என்று சமூக ஊடகத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

பயணிகள் விமானத்தில் கூரையில் இருந்து தலைகீழாக தொங்கியபடி இருந்தனர்.

”நாங்கள் வௌவால்கள் போல விமானத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தோம்.” என்கிறார் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் பேசிய பீட்டர் கோவ்கோவ்.

“தரையிறங்கிய பின்பு உங்கள் நண்பர்களையும், நெருங்கியவர்களையும் சந்திக்கலாம் என்று ஒரு நிமிடம் ஆவலாக காத்திருப்பீர்கள், மறு நிமிடம் நீங்கள் தலை கீழாக தொங்கியபடி இருப்பீர்கள்”, என்று மற்றொரு பயணி பீட் கார்ல்சன் சிபிசி செய்திகளிடம் கூறினார்.

” சீட் பெல்டை அவிழ்த்து என்னால் இறங்க முடிந்தது. சிலர் மாட்டிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு உதவி தேவைப்பட்டது”, என்கிறார் நெல்சன்.

பயணிகள் விரைவாக ஒரு குழுவாகச் செயல்பட்டதாக விமானத்தில் பயணித்த கார்ல்சன் கூறினார்.

“நான் பார்த்தது என்னவென்றால், அந்த விமானத்திலிருந்த அனைவரும் திடீரென்று ஒருவருக்கொருவர் எப்படி உதவுவது, ஒருவருக்கொருவர் எப்படி ஆறுதல் இருப்பது என நினைத்துச் செயல்பட்டனர்” என்கிறார்.

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகள், கவிழ்ந்த விமானத்திலிருந்து மக்கள் வெளியே வருவதையும், தீயணைப்பு வீரர்கள் அதன் மீது நுரை (foam) தெளிப்பதையும் காட்டுகிறது.

விமானத்தின் கதவுகளிலிருந்து உள்ளே இருந்தவர்களை விமான நிலைய ஊழியர்கள் வெளியே வர உதவி செய்வதையும் காண முடிந்தது.

வேறொரு விமானத்தில் பயணிக்க இருந்த டயான் பெர்ரி தனது உடைமைகளை செக்-இன் செய்யும் வரிசையில் இருந்தபோது, அவரது குடும்பத்தினரிடம் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அப்போதே இந்த விபத்து சம்பவம் குறித்து அறிந்ததாக அவர் தெரிவித்தார்.

“நான் அந்த விமான நிலையத்தில்தான் இருந்தேன், ஆனால் வெளியே இப்படி ஒரு விபத்து நடந்ததாக எனக்கு தெரியவில்லை என்பது ஒரு முரணாக இருக்கிறது”, என்று பிபிசியிடம் அவர் கூறினார்.

இந்த விமானம் எப்படி விபத்துக்கு உள்ளானது என்பதை இன்னும் நெல்சன் யோசித்துகொண்டிருக்கிறார். “அந்த சம்பவத்தை பற்றி நினைத்தாலே மன அழுத்தம், பதற்றம், நடுக்கம் ஆகியவை ஏற்படுகின்றன. நாங்கள் இன்னும் இங்கே உயிருடன் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது”, என்று அவர் கூறினார்.

பயணி கார்ல்சனும் இவ்வாறே உணர்வதாக கூறினார். “தற்போது உயிருடன் இருப்பது உண்மையிலேயே மிகவும் ஆச்சரியமாக உள்ளது. இந்த சம்பவத்தை பற்றி விவரிக்க வார்த்தைகள் வரவில்லை”, என்று அவர் கூறினார்.

முரணான தகவல்கள்

டொரோண்டோ பியர்சன் விமான நிலையத்தின் தீயணைப்பு துறை தலைமை அதிகாரி டாட் அய்ட்கென், முதல் கட்ட விசாரணையின் அடிப்படையில், “ஓடுபாதை மிகவும் காய்ந்திருந்தது. விமான ஓட்டத்தின் திசைக்குப் பக்கவாட்டாக காற்று வீசவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.

ஆனால் முதலில் மணிக்கு 64 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசுவதாகவும், பக்கவாட்டாக காற்று வீசியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு அறிவிப்புகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டுள்ளது.

டொராண்டோ பியர்சன் விமான நிலையம் கடந்த சில தினங்களாக வானிலை காரணமாக விமான தாமதங்களை சந்தித்து வருகிறது.

பிபிசியின் அமெரிக்க செய்தி கூட்டு நிறுவனமான சிபிஎஸ், விமானம் தரையிறங்கியபோது பனிப்பொழிவு குறைந்து காணப்பட்டதாக தெரிவித்தது.

ஏற்கனவே வாஷிங்டன் டிசியில் பயணிகள் விமானமும் ராணுவ விமானமும் மோதி விபத்துக்குள்ளானதில் 67 பேர் இறந்தநிலையில் கடந்த ஒரு மாதத்தில் வான் வழி விபத்துகள் வட அமெரிக்காவில் நான்காக உயர்ந்துள்ளது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply