வீடொன்றில் தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு, கடுக்காமுனை கிராமத்தில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து ஒன்றரை மாதமேயான இந்த குழந்தை கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு தாய்ப்பால் அருந்திவிட்டு தாயுடனே உறங்கியுள்ளதாகவும் மறுநாள் திங்கட்கிழமை (17) அதிகாலை குழந்தைக்கு பால் புகட்டுவதற்காக தாய் குழந்தையை எழுப்பியபோது குழந்தை சுவாசமின்றி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதனையடுத்து, உடனடியாக குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, குழந்தை முன்னரே இறந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கொக்கட்டிச்சோலை பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று மரண விசாரனைகளில் ஈடுபட்டு, குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து செய்யப்பட்ட பரிசோதனையில் குழந்தையின் இறப்புக்கான காரணம் கண்டுபிடிக்கப்படாததால், சடலத்தின் உடல்கூறுகள் மேலதிக பரிசோதனைக்காக பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தையின் உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply