நடிகர், கவிஞர், பத்திரிகையாளர் என தனது பல்துறை ஆற்றலால் இலங்கையை நோக்கி உலகின் கவனத்தை ஈர்த்துக்கொண்டிருந்த துடிப்பு மிக்க இளைஞன் ஒருவன் 35 வருடங்களுக்கு முன்னர் சுயநலம் மிக்க, உள்நோக்கம் கொண்ட சக்திகளால் மௌனமாக்கப்பட்டான்.

தாடி வைத்திருந்தமைக்காகவோ அல்லது கிளர்ச்சிக்காரன் போல தோற்றமளித்தமைக்காகவோ அவன் கடத்தப்பட்டு, தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கடலில் உடல் வீசப்படவில்லை. (அந்த நாட்களின் பல இளைஞர்களின் துயரம் மிக்க தலைவிதி அதுவாகவே காணப்பட்டது) மாறாக, இலங்கையில் அக்காலப்பகுதியில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதில் ஒரு பத்திரிகையாளனாக சர்வதேச அரங்கில் அவன் சிறப்பாக செயற்பட்டதே காரணம்.

மும்மொழிகளையும் அறிந்த ரிச்சர்ட் டி சொய்சா அந்த நாட்களில் அதிகளவில் பேசிய, எழுதிய மொழியை புரிந்துகொள்ள முடியாத இளைஞர்களின் இதயத்துடிப்பாக விளங்கினார்.

அவரது படைப்புகள் அன்றைய ஆட்சியாளர்களுக்கு நிம்மதியின்மையை ஏற்படுத்தின என்பது பலருக்கு தெரிந்திராத விடயம்.

இன்று செவ்வாய்க்கிழமை 18ஆம் திகதியுடன் அவர் படுகொலை செய்யப்பட்டு 35 வருடங்களாகிறது. அவர்கள் ‘யார், ஏன், என்ன செய்தார்கள்?” என்ற கேள்விகளுக்கு இன்னமும் பதில் கிடைக்கவில்லை.

கடந்த பல வருடங்களில் பல விடயங்கள் இடம்பெற்றுவிட்டன. ஆனால், இலங்கையின் சகல ஆட்சியாளர்களையும் பொறுத்தவரையில் உள்ள பொதுவான விடயம் என்னவென்றால், சட்டவிரோத படுகொலைகளும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலுமே.

ரிச்சர்ட் டி சொய்சா கொல்லப்பட்டு 35 வருடங்களின் பின்னர் அவரது கொலை குறித்த கேள்விகள் மீண்டும் எழுகின்றன என்றால், அதற்கு அசோக ஹந்தகமவின் “ராணி” திரைப்படமும் ஒரு காரணம்.

“இளவரசன் இல்லாத மகாராணி” என்ற வரிகளுடன் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. ரிச்சட் டி சொய்சாவின் தாயார் மனோராணி சரவணமுத்துவின் கதையே இந்த திரைப்படம் என்பதை அது புலப்படுத்துகிறது.

அந்த திரைப்படம் ரிச்சர்ட் டி சொய்சாவுக்கும் அவரது தாயாருக்கும் நீதி வழங்கியதா என்பதற்கு அப்பால் இந்த திரைப்படம் நிச்சயமாக ஒன்றை செய்துள்ளது.

ரிச்சர்ட் டி சொய்சா உட்பட தாக்கப்பட்ட, காணாமலாக்கப்பட்ட, சித்திரவதை செய்யப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரிச்சர்ட் டி சொய்சாவின் நடிப்பை பார்ப்பதற்கு அல்லது எழுத்தை வாசிப்பதற்கு அதிர்ஷ்டமற்ற எங்களை போன்றவர்கள் கடந்த காலங்களை தேடிப் போய் அவரை பற்றி வாசிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.

அரசாங்கமும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளும் அரச வழக்குரைஞர்களும் லசந்த விக்கிரமதுங்க படுகொலை தொடர்பில் உள்ள சாட்சியங்களை வேண்டுமென்றே அழிப்பதற்கான முயற்சிகளை தடுத்து நிறுத்தவேண்டும் என பத்திரிகையாளர்களும் சிவில் சமூகத்தினரும் அழுத்தம் கொடுத்து வருகின்ற நிலையிலேயே ரிச்சட் டி சொய்சா படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவுகூரலை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

ரிச்சட் டி சொய்சாவின் கொலைக்கு முன்னரும் பின்னரும் நிகழ்ந்த விடயங்கள் குறித்த அறிக்கைகளை ஆழமாக ஆராயும்போது ஆட்சியாளர்கள், அவர்களின் சகாக்கள், சட்ட அமுலாக்கல் அதிகாரிகள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள், நடத்தை வெளிப்பாடுகள் காணப்படுவது புலனாகிறது.

சில சம்பவங்கள், செயல்கள் மற்றும் அறிக்கைகளில் உள்ள விசித்திரமான ஒற்றுமைகள், இதயத்தை உடைக்கின்றன; அதிர்ச்சிகரமானவையாக உள்ளன; ஏமாற்றமளிக்கின்றன; மேலும் ஆழ்ந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறான செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்காத வரை அவை எதிர்காலத்தில் மீண்டும் நிகழாது என உறுதியாக இருக்க முடியாது.

ஐ.சி.ஜே ஆணைக்குழு

பெப்ரவரி 19ஆம் திகதி ரிச்சட் டி சொய்சாவின் உடல் கடலில் மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுடப்பட்டிருந்தார்.

அதன் பின்னர், அவரது கொலை குறித்து நீதவான் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

மூன்றரை மாதங்களின் பின்னர் அவரது தாயார் மனோராணி சரவணமுத்து (ரிச்சட் டி சொய்சா கடத்தப்பட்டவேளை அங்கிருந்ததாக தெரிவிக்கப்பட்டவர்), ரிச்சட் டி சொய்சாவை கடத்தியவர்களில் ஒருவரை அடையாளம் கண்டதாக தெரிவித்தார். அவர் அடையாளம் காட்டியது, எஸ்.எஸ்.பி. ரொனி குணசிங்கவை.

தொலைக்காட்சி செய்தியொன்றை பார்த்துக்கொண்டிருந்தவேளை அவரை அடையாளம் கண்டதாக அவர் தெரிவித்தார்.

பொலிஸ் அதிகாரிகள் ரொனி குணசிங்கவை கைதுசெய்ய மறுத்தனர். அதேவேளை இந்த கொலை குறித்த கரிசனைகள் உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் அதிகரித்து வந்தன.

மனோராணியும் அவர் நியமித்த வழக்கறிஞரும் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டனர். தொலைபேசி மூலமாகவும் எழுத்து மூலமாகவும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.

நீதியை வழங்குமாறு விடுவிக்கப்பட்ட வேண்டுகோளினை தொடர்ந்து, குறிப்பாக டெஸ்மன்ட் பெர்னாண்டோ தலைமையிலான இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து, சர்வதேச ஜூரர்கள் சங்கத்தின் பிரிட்டிஸ் பிரிவானது நீதவான் விசாரணைகளின் இறுதிப் பகுதியை பார்வையிடுவதற்கு தனது பிரதிநிதி ஒருவரை அனுப்ப தீர்மானித்தது.

அன்டனி ஹீட்டன் ஆம்ஸ்ட்ரோங் அந்த அமைப்பின் பிரதிநிதியாக 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 20ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

அன்டனி ஹீட்டன் ஆம்ஸ்ட்ரோங் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்:

ரிச்சட் டி சொய்சா நன்கு அறியப்பட்ட, மதிக்கப்பட்ட ஊடகவியலாளர். உள்ளூர் மக்கள் மத்தியில் அவருக்கு சிறந்த கௌரவம் இருந்தது.

அவர் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் விமர்சித்து வந்தார்.

இலங்கையின் குழப்பமான வரலாற்றை கருத்தில் கொள்ளும்போது, ரிச்சட் டி சொய்சா தங்களை கண்காணிப்பது, விமர்சிப்பது தேவையற்ற விடயம் என உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற குழுக்களை சேர்ந்த பலர் கருதியிருக்கலாம்.

ரிச்சட் டி சொய்சா கொல்லப்பட்டபோது அவர் ஐ.பி.எஸ். செய்தி முகவர் அமைப்புக்காக பணியாற்றியிருந்தார். மனித உரிமை மீறல்கள் குறித்த செய்திகளை வழங்கிவந்தார். போர்த்துக்கல் லிஸ்பனில் உள்ள அதன் அலுவலகத்தில் பணியாற்றுவதற்காக செல்வதற்கு முன்னர் அவர் கொல்லப்பட்டார்.

எஸ்.எஸ்.பி. ரொனி குணசிங்க என்பவர் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி. அவருக்கு சமீபத்தில் பதவி உயர்வு வழங்கப்படவிருந்தது – பிரதி பொலிஸ் மா அதிபராக அவர் பதவி உயர்த்தப்படவிருந்தார்.

ஜே.வி.பியின் வன்முறையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டார். கடுமையானவர் என இவரை பற்றி ஒரு கருத்து உள்ளது. ஜனாதிபதிக்கு தனிப்பட்ட ரீதியில் பிடித்தமானவர் என தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஒரு சிரேஸ்ட அதிகாரி என்பதை கருத்தில் கொள்ளும்போதும், அவர் அடையாளம் காணப்படும் ஆபத்துள்ளதை கருத்தில் கொள்ளும்போதும் ரிச்சட் டி சொய்சா கடத்தப்படும்போது அந்த இடத்தில் குணசிங்க பிரசன்னமாகியிருந்திருப்பார் என கருதமுடியாது என்பது பொதுவான கருத்தாக காணப்படுகிறது.

ரிச்சட் டி சொய்சா கடத்தப்பட்டவேளை அந்த இடத்தில் குணசிங்க காணப்படவில்லை என்பதே நான் உரையாடிய பலரின் கருத்தாக காணப்பட்டது.

ரிச்சட் டி சொய்சா கடத்தப்பட்டு கொல்லப்பட்டதன் பின்னணியில் அவர் இருந்திருக்கலாம். கால வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களை தவிர ரிச்சட் டி சொய்சா கடத்தலுடன் அவரை தொடர்புபடுத்துவதற்கான ஆதாரங்கள் எவற்றையும் நான் காணவில்லை என தெரிவிக்க வேண்டும்.

இந்த கடத்தலில் குணசிங்கவுக்கு தொடர்பு இருப்பதாக அனுமானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ரிச்சட் டி சொய்சா போர்த்துக்கல்லுக்கு செல்வதற்கு முன்னர் அவரை கொல்லவேண்டும் என்ற அடிப்படையில் தடைகளை கடந்து, இதனை மேற்கொள்வதற்கு குணசிங்கவின் அனுபவமும் அதிகாரமும் அவர் சிரேஸ்ட அதிகாரி என்பதும் உதவியிருக்கலாம்.

ஐ.சி.ஜே அறிக்கை மேலும் சில முக்கியமான விடயங்களை சுட்டிக்காட்டியிருந்தது.

ஏறக்குறைய காணாமல்போவது என்பது முடிவானது. அதாவது காணாமல்போனவர் நிரந்தரமாக இழக்கப்படுவார்.

கொலையாளிகள் உடலை மறைப்பதற்கு அல்லது அடையாளம் காண முடியாதபடி செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள். உதாரணத்துக்கு உடல்களை எரிப்பார்கள் அல்லது கண்டுபிடிக்க முடியாத இடத்துக்கு கொண்டுசெல்வார்கள்.

ரிச்சட் டி சொய்சா கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட காலப்பகுதியில், கொல்லப்படும் உடல்களை பாதுகாப்பு படையினருக்கு பிரேத பரிசோதனைக்கு ஒப்படைக்காமல், அந்த உடல்களை அழித்துவிடுவதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.

ரிச்சட் டி சொய்சாவின் உடல் அடையாளம் காணப்படும் நிலையில் இருந்தது. அடையாளம் காணப்பட்டது. இது வழமைக்கு மாறான விடயம்.

இதன் காரணமாக இது அரைகுறை வேலை என குறிப்பிடப்பட்டது.

ஹீட்டன் ஆர்ம்ஸ்ட்ரோங் பின்வரும் விடயங்களை வலியுறுத்தினார்:

“தனது மகன் கடத்தப்பட்ட வேளை அந்த இடத்தில் ரொனி குணசிங்க இருந்தார் என மனோராணி சரவணமுத்து தெரிவித்ததை நம்பகத்தன்மை மிக்க விடயமாக அதிகாரிகள் கருதவில்லை என்பது நான் இலங்கையிலிருந்து புறப்படும் வரை சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் ஆகியோருடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின்போது புலனாகியது.

இதன் காரணமாக குணசிங்கவை விசாரணைகள் முடிவடையும் வரை பணியிலிருந்து இடைநிறுத்த தவறியிருந்தனர். அவர் சாட்சியங்களை குழப்ப முடியாத இடத்துக்கு அவரை இடமாற்றம் செய்ய அதிகாரிகள் தவறியிருந்தனர்.

தனது மகன் கடத்தப்பட்ட வேளை அந்த இடத்தில் ரொனி குணசிங்க இருந்தார் என மனோராணி சரவணமுத்து தெரிவித்தமை குறித்து உத்தியோகபூர்வமாக எந்த நம்பகத்தன்மையும் இல்லை என்ற கருத்தினை சட்ட மா அதிபர் திணைக்களமும் பொலிஸ் அதிகாரிகளும் கொண்டிருந்தனர்.

இதற்கு பின்வரும் காரணங்கள் இருந்தன.

1. சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்களின் பின்னரே தொடர்புபட்டவர்கள் அடையாளம் காட்டப்பட்டனர்.

2. இந்த விடயத்தில் குணசிங்கவுக்கு தொடர்புள்ளது என இனந்தெரியாத நபர் ஒருவர் தொலைபேசி மூலம் மனோராணிக்கு தெரிவித்திருந்தார்.

குணசிங்கவை ரிச்சர்ட் டி சொய்சாவின் தாயார் தொலைக்காட்சியில் பார்ப்பதற்கு முன்னரே ஒலிபரப்பாளர் ஒருவர் குணசிங்கவின் பெயரை குறிப்பிட்டிருந்தார்.

கடத்தல் இடம்பெற்றவேளை குணசிங்க அந்த இடத்தில் பிரசன்னமாகியிருப்பார் என்பது சாத்தியமில்லாத விடயம் என கருதப்பட்டது.

அரசாங்க அதிகாரிகளுக்கும் ரிச்சர்ட் டி சொய்சாவின் குடும்பத்தினர் சார்பில் விசாரணைகளை மேற்கொண்டவர்களுக்கும் இடையில் உரிய தொடர்பாடல்கள் இருக்கவில்லை.

ரிச்சர்ட் டி சொய்சாவின் கொலை குறித்தும் அதன் பின்னர் அவரது தாயார் மனோராணி சரவணமுத்து அவரது சட்டத்தரணி பட்டி வீரக்கோன் ஆகியோருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் ஆர்வம் காட்டவில்லை, விசாரணைகளில் திறமையை வெளிப்படுத்தவில்லை என பல குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.

அரசாங்கத்தின் பதில்கள் என்பது மூன்று விடயங்களை உள்ளடக்கியதாக காணப்பட்டதாக ஹீட்டன் ஆர்ம்ஸ்ட்ரோங் தெரிவிக்கிறார்.

Gagani Weerakoon தமிழில் – ரஜீவன் Virakesari

Share.
Leave A Reply