யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்காவும் ரஷ்யாவும் சௌதி அரேபியாவில் அமைதிப் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளன. இதில் யுக்ரேன் பங்கேற்கவில்லை.

சுமார் 5 மணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளதாக ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படின், யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கியுடன் பேச ரஷ்ய அதிபர் புதின் தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது? இரு நாடுகளும் ஒப்புக் கொண்ட 3 விஷயங்கள் என்ன? இந்த பேச்சுவார்த்தையை யுக்ரேன் எவ்வாறு பார்க்கிறது?

அமெரிக்கா – ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தை

யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து சௌதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் இன்று (பிப்ரவரி 18) அமெரிக்கா – ரஷ்யா இடையே முதல் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் இரு நாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

அமெரிக்க தரப்பில், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் பங்கற்றனர்.

ரஷ்யா தரப்பில், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் மற்றும் ரஷ்ய வெளியுறவுக் கொள்கை ஆலோசகர் யூரி உஷாகோவ் ஆகியோர் இருந்தனர். இவர்கள் இருவரும், மிகவும் அனுபவம் வாய்ந்த ராஜதந்திரிகள் மாற்றும் ரஷ்ய வெளியுறவுக் கொள்கையை செயல்படுத்த அதிபர் புதினுக்கு பல ஆண்டுகளாக உதவி வருபவர்கள் ஆவர்.

யுக்ரேனுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதில் ரஷ்யா தீவிரமாக உள்ளதா என்பதை அறிய இந்த பேச்சுவார்த்தைகள் முதல் படியாக இருக்கும் என்று அமெரிக்கா தெரிவித்தது. அதேநேரத்தில் அமெரிக்காவுடனான உறவுகளை இயல்பாக்க முயற்சிப்பதாக ரஷ்யா குறிப்பிட்டது.
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டம்

இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு யுக்ரேன் மற்றும் ஐரோப்பாவை சேர்ந்த எந்த ஒரு நாடும் அழைக்கப்படவில்லை.

“நாங்கள் இடம் பெறாத எந்தவொரு அமைதிப் பேச்சுவார்த்தை ஒப்பந்தத்தையும் ஏற்க மாட்டோம்” என்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

“எங்கள் முதுகுக்குப் பின்னால் யாரும் எதையும் முடிவு செய்யக்கூடாது. எல்லாம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அமெரிக்கா- ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு நாங்கள் அழைக்கப்படவில்லை, மற்ற அனைவரையும் போலவே, இது எங்களுக்கும் ஆச்சரியமாக இருந்தது. ஊடகங்கள் வாயிலாகதான் எங்களுக்கு இது குறித்து தெரியவந்தது”. என்று ஜெலென்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறினார்.

“யுக்ரேனுக்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் குறித்த பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த யுக்ரேனைத் தவிர ஐரோப்பிய ஒன்றியம், துருக்கி மற்றும் பிரிட்டன் ஆகியவையும் ஈடுபட வேண்டும்”.

ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை யுக்ரேன் ஒருபோதும் அங்கீகரிக்காது என்றும் கிழக்குப் பகுதி, கிரைமியா யுக்ரேனுக்கு சொந்தம், அந்த நகரங்கள் மற்றும் கிராமங்கள் அனைத்தும் அந்நாட்டிற்கு முக்கியமானது என்றும் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டார்.

அவர் இன்று (பிப்ரவரி 18) துருக்கி அதிபர் எர்டோகனை சந்தித்தார். சௌதி அரேபியாவுக்கான தனது பயணத்தை மார்ச் 10 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும் ஜெலன்ஸ்கி கூறினார்.

“ஜெலன்ஸ்கியை சந்திக்க புதின் தயார்”

போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக, யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் ரஷ்ய அதிபர் புதின் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக இந்த சந்திப்பின் போது ரஷ்ய தரப்பு தெரிவித்துள்ளது.

“தேவைப்பட்டால் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக புதினே கூறினார்”, என்று ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஆனால் ஜெலன்ஸ்கி யுக்ரேன் அதிபராக சட்டப்பூர்வமாக நீடிக்கிறாரா என்பதே கேள்விக்குரியது. சட்டப்பூர்வ ஒப்பந்தங்களை எட்டத்தக்க வகையில் பேச்சுவார்த்தை அமைய வேண்டியது அவசியம்”. என்று அவர் தெரிவித்தார்.

யுக்ரேனில் கடந்த ஆண்டு மே மாதம் ஜெலன்ஸ்கியின் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்தது. அவர் யுக்ரேன் அதிபராக பதவியில் நீடிப்பதன் சட்டப்பூர்வ செல்லுபடித்தன்மை பற்றி ரஷ்ய அதிபர் புதின் பலமுறை கேள்வி எழுப்பியுள்ளார்.

ரஷ்யாவின் தொடர் தாக்குதலும், ராணுவச் சட்டம் அமலில் இருப்பதுமே யுக்ரேனில் தேர்தல் நடத்துவதை நடைமுறை சாத்தியமற்றதாக்கிவிட்டதாக யுக்ரேன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ்

3 விஷயங்களில் உடன்பாடு – லாவ்ரோவ்

இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா – ரஷ்யா இடையே 3 விஷயங்கள் ஒப்புக்கொள்ளப்பட்டதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

அவரது கூற்றுப்படி, முதலாவதாக இரு நாடுகளும் விரைவில் ஒருவருக்கொருவர் தூதர்களை நியமிக்கும். தூதரகங்களுக்கான வங்கி பரிமாற்றங்கள் மீதான கட்டுப்பாடுகள் உட்பட இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜ தந்திர பணிகளுக்கான தடங்கல்கள் நீக்கப்படும்.

இரண்டாவதாக, யுக்ரேனுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு தேவையான செயல்முறைகள் தொடங்கப்படும் என்றும், இதற்காக அமெரிக்கா அதன் பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும் என்றும், அதன் பிறகே ரஷ்யா அதன் பிரதிநிதிகளை நியமிக்கும் என்றும் செர்கே லாவ்ரோவ் கூறினார்.

மூன்றாவதாக, பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே முழு ஒத்துழைப்பைத் தொடங்கவும், மேம்படுத்தவும் தேவையான சூழல் உருவாக்கப்படும்.

“இது மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தையாக இருந்தது. நாங்கள் ஒருவருக்கொருவர் சொல்வதைக் கவனித்துக் கேட்டோம்’, என்று லாவ்ரோவ் கூறினார்.

முரண்பாடுகள் என்ன?

இருப்பினும், பத்திரிகையாளர் சந்திப்பில் கருத்து வேறுபாடுகள் உள்ள பிரச்னைகளைப் பற்றியும் லாவ்ரோவ் குறிப்பிட்டார். யுக்ரேன் நேட்டோவில் இணைவது ரஷ்யாவிற்கு “நேரடி அச்சுறுத்தலாக இருக்கும்”, என்று அவர் கூறினார்.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, சில காலத்துக்கு பிறகு, ஐரோப்பாவும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இணைய வேண்டியிருக்கும் என்றார்.

ரஷ்யா மீதான தடைகள் குறித்து, அனைத்து தரப்பினரும் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டியிருக்கும் என்று ரூபியோ கூறினார்.

“இப்போது இதுகுறித்து உடனடியாக விவாதிக்கப்படுமா என்று கூற முடியாது. ஒரு கட்டத்தில் ஐரோப்பாவும் இதில் தலையிட வேண்டியிருக்கும். ஏனெனில் அதுவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளது”. என்று ரூபியோ தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Share.
Leave A Reply