ஏறாவூர் மயிலம்பாவெளி பகுதி பிரதான வீதியில் மதுபோதையில் சிவில் உடையில் மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த இரு பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை முந்திச் சென்ற வர்த்தகர் ஒருவரை பொலிஸார் இருவரும் இடைநிறுத்தி, வர்த்தகரை தலைக்கவசத்தால் தாக்கியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

அதனையடுத்து, வர்த்தகரை தாக்கிய பொலிஸார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (18) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வந்தாறுமூலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த வர்த்தகர் ஏறாவூர் – மயிலம்பாவெளி பகுதியிலுள்ள கிராம சேவகர் காரியாலயத்துக்கு முன்னால் மற்றுமொரு மோட்டார் சைக்கிளை முந்திச் சென்றதையடுத்து, அந்த மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிஸார் இருவரும் முந்திச் சென்று வர்த்தகரை இடைமறித்துள்ளனர்.

தாம் இருவரும் பொலிஸ் அதிகாரிகள் என்றும் “நீ பிழையாக மோட்டார் சைக்கிளை செலுத்தியிருக்கிறாய்” என்றும் வர்த்தகரிடம் கூறியதை தொடர்ந்தே, பொலிஸார் வர்த்தகரை தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர், அங்கு கூடிய பொதுமக்கள் பொலிஸாரை அங்கிருந்து செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

அவர்கள் பொலிஸ் அவசர இலக்கமான 1919 தொலைபேசி இலக்கத்துக்கு அறிவித்ததையடுத்து, அங்கு ஏறாவூர் பொலிஸார் முச்சக்கரவண்டியில் வந்து விசாரணையை மேற்கொண்டபோது தாக்குதலை நடத்திய பொலிஸார் இருவரும் மதுபோதையில் இருப்பதை கண்டறிந்த பொலிஸார் அவர்கள் இருவரையும், தமது முச்சக்கரவண்டிக்கு முன்னால் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு பொலிஸ் நிலையத்துக்கு வருமாறு தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸ் நிலையத்தை அண்மித்ததும் சந்தேக நபர்களான பொலிஸார் இருவரும் பொலிஸ் நிலையத்துக்குச் செல்லாமல் வேறு வீதியூடாக தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து மது போதையில் தாக்கிய பொலிஸார் இருவருக்கு எதிராக பாதிக்கப்பட்ட வர்த்தகர் முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply