ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் மீண்டும் பேசத் தொடங்கியுள்ளனர். (யுக்ரேன்- ரஷ்யா போர் நிறுத்தம் குறித்தப் பேச்சுவார்த்தைகள் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சௌதி அரேபியாவில் நடைபெற்றன).

யுக்ரேனுக்கும், அமெரிக்காவின் மேற்கு ஐரோப்பிய கூட்டணி நாடுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த இறுதி எச்சரிக்கை, அட்லாண்டிக் பிராந்திய கூட்டணியில் சரி செய்ய முடியாத விரிசலை ஏற்படுத்தியுள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை.

அமெரிக்காவின் எச்சரிக்கையால் அதிர்ந்து போன யுக்ரேன்

அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக யுக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி குழப்பமடைந்துள்ளார். அமெரிக்காவின் இந்த அணுகுமுறையை அவர் முன்பே எதிர்பார்த்திருக்க வேண்டும் என அவரது விமர்சகர்கள் கூறி வருகின்றனர். டிரம்ப் இந்த தேர்தலை வெல்வதற்கு முன்பாகவே, முன்னாள் அதிபர் ஜோ பைடனின் கொள்கைகளை தான் பின்பற்ற போவதில்லை என்பதை தெளிவாக்கியிருந்தார்.

துருக்கி வந்திருந்த ஜெலன்ஸ்கி, “ரஷ்யா ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட முக்கிய தரப்புகள் இல்லாமல்” போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாக வருத்தம் தெரிவித்தார்.
விளம்பரம்

ரஷ்யர்களும் அமெரிக்கர்களும் நேருக்கு நேர் பேசிக் கொள்ளும் சௌதி அரேபியாவில் உள்ள அந்த குளிர்ந்த அறைக்கும் உறைய வைக்கும் பனி சூழ்ந்த வட கிழக்கு யுக்ரேனுக்கும் வெகு தூரம் இருப்பது போல் தோன்றுகிறது.

 யுக்ரேன் இல்லாமல் ரஷ்யாவுடன் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா நடத்துவது வருத்தமளிப்பதாக யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகிறார்.

ரஷ்ய எல்லையில் பனி படர்ந்த கிராமங்கள் மற்றும் காடுகளில் உள்ள பதுங்கு குழிகளிலும், ராணுவ தளங்களிலும் யுக்ரேன் வீரர்கள் வழக்கம் போல் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுமி நகருக்கு அருகே காட்டில் உள்ள ராணுவ தளத்தில் ஒரு நிலத்தடி பதுங்கு குழியில், ஒரு யுக்ரேனிய அதிகாரி என்னிடம் செய்திகளைப் பின்தொடர தனக்கு அதிக நேரம் இல்லை என்று கூறினார். அவரைப் பொருத்தவரை, ரஷ்ய அதிபர் புதினுடன் பேச டொனால்ட் டிரம்ப் எடுத்த முடிவு “வெற்றுச் சத்தம்” தான்.

“வெள்ளை” என்ற அடையாளப் பெயரால் மட்டுமே தன்னை குறிப்பிடப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ராணுவ தளபதி, கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் உள்ளன.

மேற்கத்திய தலைவர்களையும், அவரது சொந்த நாட்டின் அதிபரையும் அதிர வைத்த ராஜதந்திர செயல்பாடுகளை புறக்கணித்து, தனது ஆட்களை மீண்டும் சண்டைக்கு வழிநடத்தத் தயாராவதே ஒரு போர்க்கள அதிகாரி செய்ய வேண்டிய சரியான விஷயம். ரஷ்யாவிடம் இருந்து யுக்ரேன் கைப்பற்றிய நிலத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான போராட்டத்தில் மீண்டும் இணைவதற்காக அவர்கள் விரைவில் குர்ஸ்க் நகருக்குள் நுழைகிறார்கள்.

யுக்ரேன் போர் முனையில் என்ன நடக்கிறது?

யுக்ரேனிய வீரர்களை அணுகுவதற்கான ஒரு நிபந்தனையாக, துல்லியமான இடங்கள் அல்லது அடையாளங்களை வெளியிட மாட்டோம் என்று நாங்கள் ஒப்புக்கொண்டோம். எனவே அவர்கள் சுமி நகரைச் சுற்றியுள்ள எல்லைப்பகுதிகளில் இருப்பதையும், குர்ஸ்கில் யுக்ரேன் தொடர்ந்து சண்டையிடும் அனைத்து பகுதிகளிலும் இருப்பதை தவிர வேறு குறிப்பிட்ட தகவல்களை பகிரவில்லை.

ஒரு சிறிய கிராமத்தில் இருந்த ஒரு பட்டறையின் ஒரு சிறிய அறையில், அதிக அளவிலான பயங்கரமான ஆயுதங்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. மரத்தாலான வெடிமருந்துப் பெட்டிகளால் முட்டுக் கொடுக்கப்பட்ட, மர அலமாரியில் அவை வைக்கப்பட்டிருந்தன.

அலமாரிகளில் நூற்றுக்கணக்கான டிரோன்கள் இருந்தன, அவை அனைத்தும் யுக்ரேனில் தயாரிக்கப்பட்டவை. ஒவ்வொன்றும் சுமார் £300 ($380) மதிப்பு கொண்டவை. குர்ஸ்க் போர்க் களத்திற்கு அனுப்புவதற்காக அட்டைப் பெட்டிகளில் அடைப்பதற்கு முன்பு அவற்றை வீரர்கள் சோதித்தனர். அவற்றில் ஆயுதங்களை நிரப்பி, ஒரு திறமையான வீரர் பறக்க விட்டால் – ஒரு டாங்கியைக் கூட அழிக்க முடியும் என்று வீரர்கள் கூறினர்.

அவர்களில் ஒருவரான ஆண்ட்ரூ தனது காலை இழக்கும் வரை டிரோன் விமானியாக இருந்துள்ளார். இங்கிருந்து வெகு தொலைவில் அமெரிக்கர்கள் கூறுவதைப் பற்றி தான் அதிகம் சிந்திக்கவில்லை என்று கூறினார். ஆனால் அவர்களில் யாரும் ரஷ்ய அதிபர் புதினை நம்பவில்லை என்றார்.

சில மணி நேரத்திற்கு முன்னர் அவர்களின் டிரோன்கள் உறைந்த பனி மூடிய வயல்வெளியில் பட்டப்பகலில் முன்னேறி வந்த ரஷ்ய கவச படைப்பிரிவை அழித்திருந்தன. அவர்கள் அந்த வீடியோவை எங்களிடம் காட்டினார்கள். அவர்கள் தாக்கிய சில வாகனங்கள் ரஷ்ய கொடிக்கு பதிலாக சோவியத் யூனியனின் சிவப்பு கொடியை பறக்கவிட்டிருந்தன.

சுமி நகரில் கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு, பகலில் நன்கு பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இருட்டத் தொடங்கியதும் தெருக்கள் கிட்டத்தட்ட வெறிச்சோடி காணப்படுகின்றன. விமானத் தாக்குதல் எச்சரிக்கைகள் அடிக்கடி எழுப்பப்படுகின்றன.

யுக்ரேனின் உட்பகுதியில் இலக்குகளைத் தாக்குவதற்காக செல்லும் ரஷ்ய டிரோன்களை குறிவைத்து விமான எதிர்ப்பு பீரங்கிகள் மணிக்கணக்கில் வானத்தை நோக்கி சுடுகின்றன.

ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் மூன்று மாடி உயரத்துக்கு ஒரு துளை உள்ளது. பதினைந்து நாட்களுக்கு முன்பு ரஷ்ய டிரோன் தாக்குதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இந்த கட்டடம் மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளதால், அது இடிந்து விழக்கூடும் என்று பொறியாளர்கள் அஞ்சுகின்றனர். எனவே அந்த கட்டடம் காலி செய்யப்பட்டுள்ளது.

இது சோவியத் காலத்தில் கட்டப்பட்ட ஒரே மாதிரியான தொகுப்பு வீடுகளின் ஒரு பகுதியாகும். சிதிலமடைந்த பாதுகாப்பற்ற கட்டடத்திற்கு அருகிலேயே வசித்து வந்த குடியிருப்பாளர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடைகளுக்கோ அல்லது தங்கள் கார்களுக்கோ நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அமைதியை விரும்பும் மக்கள்

50 வயதான மைகோலா, தனது மகனுடன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது பேசுவதற்காக நின்றார். ரஷ்யர்கள் அழித்த கட்டடத்துக்கு அடுத்த பகுதியில் அவர் வசிக்கிறார்.

யுக்ரேனில் அமைதி பற்றிய டொனால்ட் டிரம்பின் யோசனை குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்று நான் அவரிடம் கேட்டேன்.

“எங்களுக்கு அமைதி வேண்டும்” என்றார்.

“ஏனென்றால் போரிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை. போரினால் எதுவும் கிடைக்கப் போவதில்லை. இதுவரை ரஷ்யர்கள் ஆக்கிரமித்துள்ள யுக்ரேனின் பகுதிகளைப் பார்த்தால், அவர்கள் கீவ் (யுக்ரேனின் தலைநகர்) நகரை அடைய 14 ஆண்டுகள் ஆகும். இதனால் மக்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள். இது முடிவுக்கு வர வேண்டும்” என்றார்.

எனினும், ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பியர்கள் இல்லாமல், புதின் மற்றும் டிரம்ப் அமர்ந்து பேசுவதால் எந்த ஒப்பந்தமும் எட்டப்படாது என்று அவர் கருதுகிறார்.

"நிச்சயமாக, நீங்கள் புதினை நம்ப முடியாது" என்கிறார்.

அதே பகுதியில் வசிக்கும் யூலியா (33) தனது நாயுடன் வெளியே நடந்து சென்று கொண்டிருந்தார். ரஷ்யர்கள் பக்கத்து அடுக்குமாடி குடியிருப்பைத் தாக்கிய போது அவர் தனது வீட்டில் இருந்துள்ளார்.

“இது எல்லாம் நள்ளிரவைத் தாண்டி, நாங்கள் படுக்கைக்குச் செல்லவிருந்த நேரத்தில் நடந்தது. நாங்கள் ஒரு பெரிய வெடிச் சத்தத்தைக் கேட்டோம். எங்கள் ஜன்னல் வழியாக ஒரு பெரிய சிவப்பு ஒளியை பார்த்தோம். இந்தக் கொடூரத்தைப் பார்த்தோம். மிகவும் பயமாக இருந்தது. பலர் வெளியே இருந்தனர். ஒரு பெண் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் உதவிக்காக அலறிக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக பார்க்க முடியவில்லை, ஆனால் இறுதியில் அவர் இடிபாடுகளிலிருந்து காப்பாற்றப்பட்டார்.” என்று அவர் கூறினார்.

சமாதானம் சாத்தியம் என்றே அவர் நம்புகிறார்.

“ஆனால் அவர்கள் முதலில் எங்கள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும். அதை அவர்கள் நிறுத்தினால்தான் அமைதி நிலவும். இந்த கொடூரத்தை அவர்கள் தொடங்கியதால் அந்த முயற்சி அவர்கள் தரப்பில் இருந்து வர வேண்டும்”.

“நிச்சயமாக, நீங்கள் புதினை நம்ப முடியாது.” என்றார்.

யுக்ரேன் சரணடையக் கூடாது என்று போரிஸ் கூறுகிறார்.

சூரியன் மறைந்து கொண்டிருந்த வேளையில், தனது காரை நோக்கிச் சென்று கொண்டிருந்த 70 வயதான ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி போரிஸ் நின்றார். சோவியத் ராணுவத்தில் 30 ஆண்டுகள் அவர் சேவை புரிந்துள்ளார். அவரது மகனும், பேரனும் கூட தற்போது யுக்ரேனுக்காக போர்க்களத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

“அமைதி சாத்தியமே” என்கிறார். “ஆனால் எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. யுக்ரேனுக்கான நீதி கிடைக்கும். ஆனால் கவனமாக இருக்க வேண்டும். புதின் இருக்கும் போது ரஷ்யர்களை நம்ப முடியாது. ஏனென்றால் அவர்கள் புதினை ஒரு மதத்தை நம்புவது போன்று நம்புகின்றனர். அவர்களை மாற்ற முடியாது, அதற்கு காலம் எடுக்கும்” என்றார்.

அப்படியென்றால், போரிட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா? அல்லது அமைதி ஒப்பந்தம் போட வேண்டுமா?

“யுக்ரேன் அமைதி குறித்து யோசிக்க வேண்டும். ஆனால் நாங்கள் சரணடையக் கூடாது. அதில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் பலமாக இருக்கும் வரை எதிர்ப்போம். ஐரோப்பா எங்களுக்கு உதவி செய்யும் என்று தோன்றுகிறது. சரணடைவதில் எந்த பலனும் இல்லை” என்றார்.

ரியல் எஸ்டேட் துறையில் ஒப்பந்தம் போடுவது போல, ஒரு ஒப்பந்தத்தை போட்டு போரை நிறுத்தி விடலாம் என்று நம்பும் டொனால்ட் டிரம்ப், அமைதியை கொண்டுவருவது அதை விட சிக்கலானது என்று தெரிந்துக் கொள்ளப் போகிறார். அது போர் நிறுத்த ஒப்பந்தமிட்டு, இரு தரப்பும் எவ்வளவு நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதை தாண்டியது என்று அவர் அறிந்து கொள்வார்.

யுக்ரேனின் இறையாண்மையை நிலைகுலைய செய்து, சுதந்திரமான நாடாக இருக்கும் அதன் திறனை அழிக்க விரும்புவதாக புதின் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

டிரம்பின் பேச்சுவார்த்தை மேஜையில் ஜெலன்ஸ்கிக்கு இடம் இருக்கிறதோ இல்லையோ, அதற்கு அவர் ஒப்புக் கொள்ள மாட்டார். நீடித்த அமைதியை உருவாக்குவது சாத்தியம் என்றால், அது ஒரு நீண்ட, மெதுவான நடைமுறையாக இருக்கும்.

உடனடியாக அமைதி வேண்டும் என்று நினைத்தால் டிரம்ப் பார்க்க வேண்டியது வேறு பக்கம்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Share.
Leave A Reply