கனேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொல்வதற்காக புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சட்டத்தரணி மற்றும் பெண் சட்டத்தரணி போன்று வேடமணிந்த இரண்டு பேர் நீதிமன்றத்திற்குள் பிரவேசித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்தார்.
சட்டத்தரணி போல் வேடமணிந்த நபர் நீதிமன்றத்திற்குள் வெறுங்கையுடன் நுழைந்து, பின்னர் குறித்த பெண்ணிடமிருந்து துப்பாக்கியைப் பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனேமுல்ல சஞ்சீவ பிரதிவாதி கூண்டிலிருந்து இறங்கத் தயாரான போது, குறித்த நபர் சுட்டுக் கொன்றதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
கனேமுல்ல சஞ்சீவ இன்று (19) காலை புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் இலக்க நீதவான் நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இது தொடர்பான விசாரணைகள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு உட்பட 5 விசேட குழுக்களின் கீழ் இடம்பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.